தமிழக அரசு வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! ரூ.58,500 வரை சம்பளத்தில் வேலை
Tamil Nadu Government Jobs : தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முழு விவரம் இங்கே
Tamil Nadu Government Jobs 2026: தமிழகத்தில் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார். சென்னை நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை, உரிய அரசு விதிமுறைகள் மற்றும் இடஒதுக்கீட்டு இனசுழற்சி அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் படிக்க |18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்தக் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடமானது தமிழக அரசின் ஊதிய விகிதத்தில் 'Level 2' பிரிவின் கீழ் வருகிறது. இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,900 முதல் அதிகபட்சமாக ரூ.58,500 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இடஒதுக்கீட்டு இனசுழற்சி விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேவைக்கு ஏற்பப் பின்பற்றப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அதோடு, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பைப் பொறுத்தவரை, 01.07.2026 அன்று உள்ளவாறு, மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணையின்படி இனம் வாரியாக அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் (BCM), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர் (MBC/DNC) ஆகியோர் 18 முதல் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆதி திராவிடர் (SC), ஆதி திராவிடர் அருந்ததியர் (SCA) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு 18 முதல் 40 வயது வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்தப் பிரிவின் அதிகபட்ச வயது வரம்பிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள் வரை வயது நீட்டிப்பு உண்டு. முன்னாள் இராணுவ வீரர்களைப் பொறுத்தவரை பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 50 வயது வரையும், இதர இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BCM, MBC/DNC, SC, ST) 18 முதல் 55 வயது வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்கனவே ஏதேனும் ஒரு அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் இந்த வயதுச் சலுகையைப் பெற இயலாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ.100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டணச் சலுகையுடன் ரூ.50/- மட்டுமே விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பச் செயல்முறை முற்றிலும் இணையவழியில் (Online) மட்டுமே நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnrd.tn.gov.in (அல்லது [http://tnrd.tn.gov.in](http://tnrd.tn.gov.in)) மூலமாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வருகிற 04.12.2026 அன்று தொடங்குகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15 நாட்களுக்குள், அதாவது 18.12.2026 இரவு 11.59 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆணையர் வெளியிட்டுள்ள கால அட்டவணையின்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு தகுதியானவர்களுக்கு 05.01.2027 அன்று நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து 19.01.2027 முதல் 21.01.2027 வரை மூன்று நாட்கள் நேர்காணல் நடத்தப்படும். இறுதித் தேர்வு முடிவுகள் 25.01.2027 அன்று வெளியிடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 27.01.2027 அன்று பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட ஊராட்சிகளில் தற்போதைய 1:5 என்ற தெரிவுப் பட்டியல் தக்கவைக்கப்பட்டு, புதிதாகப் பெறப்படும் விண்ணப்பங்களில் அப்பட்டியலின் கடைசி விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்ணிற்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ பெற்றவர்கள் சேர்க்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது தங்களது கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றிற்கான ஆதாரங்களைக் கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.