டிசம்பரில் சென்னைக்கு பெரிய ஆபத்து? இந்த பகுதிக்கு எச்சரிக்கை! நிபுணர்கள் வார்னிங்
Chennai Flood Alert: நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையின்போது வேளச்சேரியில் வெள்ளப் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளப் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பான நிபுணத்துவம் கொண்ட அண்ணா பல்கலைகழகம் ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றின் முன்னாள் மாணவர்கள் குழு எச்சரித்துள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் ஏற்அட்ட வெள்ளப் பாதிப்பை விட, அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
அக்., 17 அன்று வெளுத்து வாங்கிய மழை.. ஒருநாள் மழைக்கே தத்தளித்த வேளச்சேரி
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (அக்டோபர் 17) சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு 2 மணி வரை பெய்தது. இதனால் சென்னை பெருநகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழை நின்ற சில மணி நேரங்களிலேயே அவை வடிந்து சென்றன. இருப்பினும் வேளச்சேரி பகுதிகளில் மட்டும் மழை நின்றும் வடிந்தப்பாடில்லை. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.
வேளச்சேரியில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ன?
வேளச்சேரியின் ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்குவதற்கு அப்பகுதியின் தாழ்வான நில அமைப்பும், போதிய மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததுமே முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. குறுகிய நேரம் பெய்யும் கனமழையை கூட வெளியேற்றுவதில் இந்த பகுதிகள் சிரமத்தை எதிர்கொள்வதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கோவளம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு மழைநீரை உள்வாங்கும் கொள்ளளவு இன்னும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வேளச்சேரி போன்ற தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முறையான வடிகால் கட்டமைப்புகள் அவசியம் என வலியுறுத்தி உள்ளனர்.
மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பை குறைக்க, புதிய மழைநீர் வடிகால்களை அமைப்பதுடன் ஏற்கனவே உள்ள வடிகால்களை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னையின் எந்தெந்த பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், மடிப்பாக்கம், வரதராஜ நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது.
இந்த பகுதிகளில் சில இடங்கள் தாழ்வாக இருப்பதால், கனமழையின்போது சாலைகளிலும் குடியிருப்புகளிலும் தண்ணீர் அதிகளவில் தேங்குகிறது. சில இடங்களில் முழங்கால் அல்லது இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் அன்றாட பயணங்களை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், நீண்ட நேரம் தேங்கி நிற்கும் மழைநீர் சுகாதார பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. இதனால் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதுடன், வெள்ளநீர் விரைவாக வெளியேறுவதற்கான நடவடிக்கைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
மழைநீர் வடிகால் பணிகளின் முக்கியத்துவம்
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் கனமழைக்கு பிறகு தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் உதவுவதாக கூறப்படுகிறது. மழைநீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றுவதற்கும், அதை வடிகால்கள் வழியாக உரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் சீரான உள்கட்டமைப்பு அவசியமாகிறது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சுமார் ரூ. 4000 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டமைப்புகள் அண்மைய மழைக்கு பிறகு தண்ணீரை வெளியேற்றுவதற்கு பங்களித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வேளச்சேரி உள்ளிட்ட வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் எதிர்வரும் மாதங்களில் கனமழை பெய்தால் நிலைமை எவ்வாறு என்பது தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. வடிகால்களை முறையாகப் பராமரிப்பது, நீர்வழித்தடங்களில் உள்ள தடைகளை அகற்றுவது மற்றும் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை வெள்ளப் பாதிப்பைக் குறைக்க உதவும்.