SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Chennai Rain: அக்டோபர் 21, 22ல் என்ன நடக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

சென்னைக்கு வரும் அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் தேதிகள் மிகவும் முக்கியமானவை, அந்த நாட்களின் வானிலை நிலவரம் கவனிக்க வேண்டியவை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Written By R Balaji
Published: Oct 18, 2026, 05:28 PM IST | Updated: Oct 18, 2026, 05:33 PM IST
Join

சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழையால் வடசென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகின. சில இடங்களில் ஒரு மணி நேரத்திலேயே 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. இந்நிலையில், இன்றும் சென்னையில் அதேபோல் கனமழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த கேள்விக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் அடுத்ததாக அக்டோபர் 21 அல்லது 22ஆம் தேதியை கவனிக்க வேண்டிய நாள் என்று தெரிவித்துள்ள அவர், இன்று இரவு மீண்டும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதீப் ஜான் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “சென்னையில் இன்று இரவும் மழை பெய்யுமா, ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் கனமழை கொட்டுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், நேற்று பெய்ததை போன்ற மழை தொடர்ந்து அடுத்த நாளும் பெய்வதற்கான வாய்ப்பு குறைவு. சென்னைக்கு அருகே மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவினாலும், மழை மேகங்கள் குவியும் பகுதி சென்னைக்கு வடக்கே அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்று மழை பெய்தாலும் நேற்று பெய்ததை போன்று அதிக அளவில் இருக்காது. தற்போதைய வளிமண்டலச் சுழற்சியால் தெற்கு ஆந்திரப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்யக்கூடும். எனவே, இன்று இரவு சென்னையில் மீண்டும் ஒரு பெருமழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. எதிர்பாராத வகையில் மழைக்கான சூழல் உருவானால் அதுகுறித்த தகவலைப் பகிர்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பகல் நேரத்தில் வெயில் காணப்பட்டாலும், மாலை நேரத்தில் வானம் இருண்டு மழை பெய்வது தொடர்கிறது. நேற்று மாலையும் இதேபோல் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது.

குறிப்பாக, வடசென்னையின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., சாத்தாங்காட்டில் 26 செ.மீ. மழை பதிவானது.

இதுதவிர, திருவொற்றியூரில் 22 செ.மீ., எண்ணூரில் 21 செ.மீ., கார்கில் நகரில் 19 செ.மீ., சைதாப்பேட்டையில் 17 செ.மீ., வடபழனியில் 16 செ.மீ. மற்றும் நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ. மழை!

நேற்று சென்னையில் பெய்த கனமழைக்கு மேகவெடிப்பு போன்ற தீவிரமான மழைப்பொழிவு காரணமாக இருந்ததாகப் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். வடசென்னையின் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, கார்கில் நகரில் 109 மி.மீ., சாத்தாங்காட்டில் 106 மி.மீ. மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நேற்றைய கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், இன்று மீண்டும் அதே அளவுக்கு மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருப்பினும், பிரதீப் ஜானின் தற்போதைய கணிப்பின்படி, இன்று சென்னையில் நேற்று போன்ற மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. அக்டோபர் 21, 22ஆம் தேதிகளில் நிலவும் வானிலை மாற்றங்களை கவனிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES