முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்! 4 நாட்கள் அறுபடை வீடுகள் டூர்.. கட்டணம், முன்பதிவு விவரம்
TTDC Arupadi Veedu Tour: கந்த சஷ்டி விரதம் இன்று துவங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறுபடை வீடு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 4 நாட்களில் அறுபடை வீடுகளில் தரிசனம் செய்யலாம். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக திருத்தணி, பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலையில் உள்ள முருகன் கோயில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா அழைத்து செல்ல உள்ளது.
TTDC Arupadi Veedu Tour: கந்த சஷ்டி திருவிழா என்பது முருகப்பெருமானுக்கு உகந்த மிகவும் சிறப்பான வழிபாடும் திருவிழாவும் ஆகும். இது தமிழ் மாதமான ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் 6 நாட்கள் கடுமையாக விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுகின்றனர்.
கந்த சஷ்டி திருவிழா
அந்த வகையில், நவம்பர் 10ஆம் தேதியான இன்று கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், நவம்பர் 16ஆம் தேதி முருகன் - தெய்வாணை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் கொடியேற்றம் இன்று நடந்துள்ளது. கந்த சஷ்டி விரதத்தின்போது, அறுபடை வீடுகளுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 4 நாட்கள் சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அறுபடை வீடுகளுக்கு சென்று பக்தர்கள் முருகனை தரிசிக்கலாம்.
அறுபடை வீடு சுற்றுலா தொகுப்பு
அறுபடை வீடு சுற்றுலா தொகுப்பில் திருத்தணி, சுவாமிமலை, பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய முருகன் கோயில்களுக்கு 4 நாட்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. அறுபடை வீடு சுற்றுலா சென்னையில் இருந்து துவங்குகிறது.
நாள் 1 - காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு காலை 10.30 மணிக்கு செல்வீர்கள். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு, தஞ்சாவூரில் உள்ள சுவாமி மலைக்கு மாலை 6.30 மணிக்கு சென்று தரிசனத்தை நிறைவு செய்து, அங்கேயே ஹோட்டலில் தங்குவீர்கள்.
நாள் 2 - தஞ்சாவூரில் காலை 9 மணிக்கு உணவை முடித்துவிட்டு, பழனிக்கு புறப்படுவீர்கள். மதியம் 1 மணியளவில் பழனி முருகன் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, மதிய உணவை நிறைவு செய்து, மதுரை மலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வீர்கள்.
நாள் 3 - காலை 7 மணிக்கு காலை உணவை முடித்துவிட்டு, திருப்பரங்குன்றம் புறப்படுவீர்கள். மதியம் 12 மணியளவில் தரிசனத்தை முடித்துவிட்டு, மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று தரிசனம் செய்து, அங்கேயே ஹோட்டலில் ஓய்வெடுக்க அனுமதிப்பார்கள்.
நாள் 4 - காலை 8 மணிக்கு காலை உணவை முடித்துவிட்டு, பழமுதிர்சோலை கோயிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு, சென்னை புறப்படுவீர்கள். இரவு 10.00 மணிக்கு சென்னையில் உங்கள் பயணம் நிறைவடைகிறது.
கட்டணம் விவரம்
அறுபடை வீடு சுற்றுலாவுக்கு சாலை மார்க்கமாக பேருந்தில் செல்வீர்கள். இந்த பேருந்தில் 18 இருக்கைகள் கொண்ட ஏசி (AC) / 35 இருக்கைகள் கொண்ட அதிநவீன ஏசி (Hitech AC) இருக்கின்றன. இந்த சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.9,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
- அறுபடை வீடு சுற்றுலாவுக்கு செல்ல விருப்பப்படுபவர்கள் ttdcbooking.com என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
- இந்த இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் tour என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, 4 days Arupadai Veedu Temple Tour என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு book என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள நம்பரை உள்ளிட்டு லாகின் செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு, எந்தெந்த நாட்களில் எவ்வளவு இருக்கைகள் காலியாக இருக்கிறது என்பது காட்டப்படும். இதில் உங்கள் பயணத் தேதியை தேர்வு செய்து கொள்ளவும்.
- இதன்பிறகு, பயணிகளின் விவரத்தை உள்ளிட்டு, கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- கட்டணத்தை யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்கேதகங்களுக்கு...
4 நாட்கள் அறுபடை வீடு சுற்றுலா தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 4253 1111/ 044 25333333/ 7550063121 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், sales@ttdconline.com என்ற இமெயில் ஐடி மூலம் உங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:சென்னை முருகன் கோவில்களுக்கு ஒருநாள் டூர்... தமிழக அரசு அறிவிப்பு