Explained: பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! CM விஜய் முடிவால் தலைவலி.. பாதிப்புகள் இவ்வளவா?
Pattinapakkam Secretariat Explained: சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அரசியல் தலைவர்கள், மீனவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Pattinapakkam Secretariat Explained: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் குறித்த விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. சென்னையில் தற்போத ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் தலைமையிடமாக இருந்து நிலையில, சுதந்திரத்திற்கு பிறகு, தமிழக அரசு தலைமைச் செயலகமாக மாறியது. சுமார் 107 பரப்பளவை கொண்ட இந்த வளாகத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 4 ஏக்கர் மட்டுமே உள்ளன.
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்
மீதமுள்ள இடங்கள் இந்திய பாதுகாப்பு துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் சட்டமன்ற வளாகம், முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி என முன்னாள் முதல்வர்கள் தலைமைச் செயலகத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல்வர் விஜய் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
நவீன முறையில் புதிய தலைமைச் செயலகம் அமையக் கூடும் என தெரிவித்தார். ஆனால், எந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்பது குறித்த தகவலை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவிக்கவில்லை.
ஆனால், முன்கூட்டியே பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்க தவெக அரசு முடிவு எடுத்து இருந்தது. ஆனால், சட்டப்பேரவையில் அதனை அறிவிக்கவில்லை. இந்தநிலையில, பட்டினம்பாக்கத்தில் முதல்வர் விஜய் வீடு அருகே புதிய தலைமைச் செயலகம் அமைகக் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
பட்டினம்பாகம் தலைமைச் செயலகத்தின் பின்னணி
புதிய தலைமைச் செயலகம் முதல்வர் விஜய்யின் வீடு அமைந்துள்ள, ஆர்ஏபுரம் மண்டவேலிப்பாக்கத்தில் உள்ள தெற்கு கால்வாய்க் கரைச் சாலையில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் அமைய உள்ளது.
பட்டினம்பாக்கத்தில் அமைய உள்ள தலைமைச் செயலகம் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இதில் தான், 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும். இந்த நிலம் மயிலாப்பூர் நகர எல்லைக்குள் வருகிறது. இதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது, மாநில அரசு, அந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்காக, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமிருந்து கடிதங்கள் மூலம் ஏற்கனவே தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறது.
பட்டினம்பாக்கத்தில் என்ன பிரச்னை?
புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்பது எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என அரசில் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. அதன்படி, போக்குவரத்து நெரிசல், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளட்ட பல பிரச்னைகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதனை அறிந்த அரசு, அப்பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மேம்பால வழித்தடம் காமராஜர் சாலை/சந்தோம் நெடுஞ்சாலை வழியாகச் செல்ல வேண்டுமா அல்லது பட்டினப்பாக்கம் சுற்றுச் சாலை வழியாகச் செல்ல வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் படிக்க: 15 ஆண்டுகள் பகை! தவெக நிர்வாகியை கொடூரமாக கொன்ற கும்பல்.. விசாரணையில் பகீர் தகவல்
மீண்டும் நெருக்கடி
அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல.
மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
CRZ விதிகளும், சிக்கல்களும்
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் (Coastal Regulation Zone - CRZ) என்பது கடற்கரைப் பகுதிகள் மற்றும் நீர்நிலைகளின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்கவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதாகும். முக்கியமாக, கடலில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் கட்டிடம் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
அந்த தூரம் அந்தப் பகுதியின் CRZ வகைப்பாட்டைப் பொறுத்து மாறுபடும். 4 வகைகளாக CRZ வகைப்படுத்தப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் எந்த பகுதி CRZ வகைப்பாட்டில் வருகிறது என்பது பொறுத்து அனுமதி வழங்கப்படும்.
தலைமைச் செயலகத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ள நிலத்தின் மொத்த பரப்பளவு 21.76 ஏக்கர் என்பதால், இந்த நிலம் வெவ்வேறு CRZ வகைப்பாட்டிற்குள் வர உள்ளது. தலைமைச் செயலகம் அங்கு கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கும். CRZ விதிகளுக்கு உட்பட்டு இங்கு கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்கும்.
கடல் தோற்றம் இழப்பும், சொத்து மதிப்பு வீழ்ச்சியும்
கடற்கரையையோட்டி அமைய உள்ள 15 அடுக்குமாடி கட்டிடம் கொண்ட தலைமைச் செயலகத்தால் கடல் தோற்றம் மறையும் சூழல் உருவாகும். அதாவது, 15 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் குறுக்கே வரும்போது, அதற்கு பின்னால் உள்ள குடியிருப்புகளுக்கு கிடைத்து வந்த கடல் தோற்றம் முற்றிலும் தடுக்கப்படும். மேலும், கடற்கரையில் இருந்து வீசப்பட்டு வந்த இயற்கை காற்றும் இக்கட்டுமானத்தால் தடுக்கப்படும்.
ரியல் எஸ்டேட் சந்தையில் கடல் தோற்றம் கொண்ட வீடுகள், கட்டிடங்களுக்கு தனி மதிப்பு உள்ளது. பல கோடி ரூபாய்க்கு மேல் விலை மதிப்புடையது. தற்போது தலைமைச் செயலகம் அங்கு அமைய உள்ளதால், குடியிருப்பாளர்களுக்கு கிடைத்த வந்த கடல் தோற்ற ஈர்ப்பும் முற்றிலும் தடுக்கப்படும்.
மேலும், அந்த வீடுகளின் மறுவிற்பனை மதிப்பு, வாடகையும் கணிசமாக குறையும். இதனால், ரியல் எஸ்டேட் சந்தை பாதிக்கப்படும். கடல் தோற்றத்தை மையமாக வைத்து வீடு கட்டிய உரிமையாளர்களுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
மீனவர்கள் பாதிப்பு
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைமைச் செயலகம் அடைநத்ல் மீனவர்களின் வாழ்வாதாரம், வீடுகள், மீன் விற்பனை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், தலைமைச் செயலகம் அமைந்தால், பட்டினம்பாக்கம், லூப் சாலை விஐபி பகுதியாக மாறிவிடும் இதனால், பொதுமக்கள் வந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என மீனவர்கள் பயப்படுகின்றனர். இதனால், மீன் விற்பனை பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது. மேலும், பாதுகாப்பு காரணங்களை காட்டி, செயலகத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள தற்காலிக வீடுகளை அப்புறப்படுத்த அழுத்தங்கள் வரலாம் என மீனவர்கள் நினைக்கின்றனர்.
மேலும், லூப் சாலையில் கடற்கரையோரத்தில் மீனவர்கள் படகுகள், வலைகளை வைத்து வருகின்றனர். பாதுகாப்பு கெடுபிடியால் படகுகள், மீன்பிடி உபகரணங்களை தாரளமாக வைக்க முடியாமல் போகுமோ என்ற அச்சம் மீனவர்களிடையே இருந்து வருகிறது. இதனால், பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க: திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த ரூட்ல?