சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழு சார்பில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (நவ. 21) நடந்தது.
இதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதியும், பாலின உணர்திறன் மற்றும் உள் புகார் குழுவின் தலைவரும் நீதிபதியுமான எல். விக்டோரியா கௌரி, நீதிபதி ஆர். பூர்ணிமா, நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதி எஸ். ஸ்ரீமதி, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி விக்டோரிய கௌரி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் எந்த அளவிற்குப் பரவலாக உள்ளன என்பதை விளக்கினார். அப்போது சாதாரண கிராமப்புற ஊழியர்கள் முதல் உயரிய ஐஏஎஸ் அதிகாரிகள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல என்றும் பேசியிருந்தார்.
மேலும், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியருக்கு, தற்போது பதவியில் இருக்கும் ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். இதுவும் பணியிடத்தில் நடைபெறும் ஒரு வகையான பாலியல் துன்புறுத்தல்தான்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தும், தற்போதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் பணியாற்றுவதை உறுதி செய்ய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்" என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பினர். பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவ அமைப்பினர் தங்களின் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
இருப்பினும் கனிமொழி கூறுவது போல் எதுவும் நடக்கவில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேபோல், ஜோதிமணியின் பதிவு குறித்து கேட்டதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளை வைத்துக்கொண்டு குற்றஞ்சாட்டுவது ஏற்புடையது அல்ல என விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பின்தங்கிய வகுப்பில் இருந்து வந்தவர் என்றும் அவர் மிகவும் பாவம் என்றும் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தரப்பிலோ, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை.
இந்தச் சூழலில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு கடந்த நவ. 15ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கடந்த நவ. 11ஆம் தேதி பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடுகள் இன்றி, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் இச்சம்பவம் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியே தவெக எம்எல்ஏ மீது குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.