தொடங்கியாச்சு பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை... என்னென்ன வசதிகள்? இதை நோட் பண்ணீங்களா?
Poonamallee Vadapalani Metro: பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களுக்காக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Poonamallee Vadapalani Metro: சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. ஏற்கனவே, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் பூந்தமல்லி -வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று துவங்கி வைத்தார்.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில்
மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கி.மீ நீளத்திலான பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதலே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம். பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை. கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம். ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம். போரூர் புறவழிச்சாலை. போரூர் சந்திப்பு. வடபழனி ஆகிய 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் உள்ளன.
மேலும் படிக்க: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பயணிகளுக்கு குட் நியூஸ்... இணைப்பு பேருந்துகள் இயக்கம்
விமான நிலையம் செல்ல முடியுமா?
இவ்வழித்தடம் வடபழனி சந்திப்பு மெட்ரோ இரயில் நிலையத்துடன் இணைக்கப்படுவதால், பயணிகள் இந்நிலையத்தில் இறங்கி, ஏற்கெனவே இயக்கத்தில் உள்ள வழித்தடம் 2-க்கு மாறி சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல், ஆலந்தூர் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களை எளிதாகச் சென்றடைய முடியும். அத்துடன் சென்னை திருப்பெரும்புதூர் தொழில்துறை வளாகத்தை எளிதில் சென்றடைய இவ்வழித்தடம் பெரிதும் உதவுகிறது.
என்னென்ன வசதிகள்?
- இவ்வழித்தடம் ஆளில்லா இரயில் இயக்கம் (Unattended Train Operation-UTO) மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது தானியங்கி இரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (Automatic Train Control ATC) மற்றும் தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பு (Automatic Train Protection - ATP) ஆகியவற்றின் உதவியுடன் செயல்படும்.
- அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் பயணிகள் பாதுகாப்புக் கதவுகள் (Passenger Screen Doors-PSD) அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இரயில் இயக்கத்தின் திறன் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது
- விரைவாக பயணச்சீட்டை பெறுவதற்கு பிரத்யேக பயணச்சீட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் தனித்துவமான பொறியியல் அம்சமாக இரட்டை அடுக்கு மெட்ரோ (Double-Decker Metro) பகுதி அமைந்துள்ளது. இதில், சுமார் 3.70 கிலோ மீட்டர் நீளத்திற்கு, வழித்தடம் 4-ன் இரண்டு இரயில் தடங்களின் மேலாக வழித்தடம் 5-ன் இரண்டு இரயில் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்விரு வழித்தடங்களுக்கிடையே இரயில் மாறும் வசதியும் உள்ளது.
- பொதுப் போக்குவரத்து மற்றும் சாலை உட்கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சுமார் 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை உயர்மட்ட சாலை பிரிப்புப் பாலம் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க; சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை