• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /Explained : டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நல்லதா? கெட்டதா? - ஓர் அலசல்!

Explained : டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நல்லதா? கெட்டதா? - ஓர் அலசல்!

Digital Payments Explained: டிஜிட்டல் பரிவர்த்தனை நல்லதா, கெட்டதா, டிஜிட்டல் பரிவர்த்தனைக்குப் பிறகு சேமிப்பு பழக்கம் மக்களிடையே எப்படி இருக்கிறது? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 12, 2026, 12:25 PM IST|Updated: Oct 12, 2026, 12:37 PM IST
joinshare
Explained : டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நல்லதா? கெட்டதா? - ஓர் அலசல்!
Image Credit: Digital Payments Explained

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explainer: சிஎஸ்கேவை மீண்டும் சாம்பியனாக்க ஜாகீர் கான் செய்ய வேண்டிய 3 முக்கிய மாற்றங்கள்!

Explainer: சிஎஸ்கேவை மீண்டும் சாம்பியனாக்க ஜாகீர் கான் செய்ய வேண்டிய 3 முக்கிய மாற்றங்கள்!

2

Explained : டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நல்லதா? கெட்டதா? - ஓர் அலசல்!

3

Onam Bumper | ரூ.30 கோடி விழுந்தும் முகம் காட்டாத அதிர்ஷ்டசாலி! -காரணம் என்ன?

4

தொடங்கியாச்சு பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை... என்னென்ன வசதிகள்? இதை நோட் பண்ணீங்களா?

5

இடைத்தேர்தலில் அப்செட்.. உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கும் தவெக? பனையூரில் பரபரப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Digital Payments Explained: இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாத ஓர் அன்றாட அங்கமாக மாறிவிட்டது. ரூபாய் நோட்டுகளையும், கைப்பையையும் எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் சென்ற காலம் எல்லாம் மறைந்தே போய்விட்டது. இன்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் யுபிஐ (GPay, PhonePe, Paytm) செயலிகள் மூலமே டீக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்துக் கொடுப்பனவுகளும் சுலபமாக நடக்கின்றன.  

இந்தியர்களின் 35% செலவுகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமே நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, பிக்பாக்கெட் பயமின்மை மற்றும் வரி வசூலை முறைப்படுத்துவது என அரசுக்கும் தனிநபருக்கும் இதில் பல நன்மைகள் இருந்தாலும், இது நமது ‘சேமிக்கும் பழக்கத்திற்கு’ வேட்டு வைக்கிறதா என்ற விவாதமும் எழுந்துள்ளது. நிதி ஆலோசகர் இராம்குமார் சிங்காரம் முன்வைக்கும் ஆழமான பார்வையும் நடைமுறைத் தீர்வுகளும் இங்கே:  

பேரம் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை

முன்பெல்லாம் கையில் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு பொருளை வாங்கும்போது, கடை கடையாக ஏறி இறங்கித் தரம் பார்த்து, விலையை ஒப்பிட்டுப் பேரம் பேசி வாங்கும் பழக்கம் மக்களிடையே இருந்தது. ஆனால், நவீன இ-காமர்ஸ் தளங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பேரம் பேசும் வாய்ப்பை வழங்குவதில்லை. மாறாக, அவர்கள் விற்க நினைக்கும் பொருட்களுக்கேற்பத் தள்ளுபடி சலுகைகளை வழங்கி, நம்மை வாங்கத் தூண்டுகின்றன. இதன்மூலம் எந்தப் பொருளை நாம் வாங்க வேண்டும் என்பதை நாமல்ல, அவர்களது அல்காரிதமே தீர்மானிக்கிறது.  

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வரும் தேதி

பணத்துக்கான மரியாதை

ரொக்கமாக ரூ.5,000 அல்லது ரூ. 10,000 எண்ணிச் செலவழிக்கும்போது ‘போதும்’ என்ற மனத்தடை இயல்பாகவே ஏற்படும். "இவ்வளவு கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை இப்படி அநாவசியமாகச் செலவு செய்யலாமா?" என்று மனம் ஒரு நொடி யோசிக்கும்.  

அதேபோல், சம்பளப் பணத்தைக் கையில் ரொக்கமாக எண்ணிப் பெற்றபோது உழைப்பிற்கான மனநிறைவும் மகிழ்ச்சியும் கிடைத்தது. ஆனால் டிஜிட்டல் யுகத்தில், பணம் வங்கிக் கணக்கிற்குள் வருவதும் தெரியவில்லை, செல்போன் ஸ்கிரீனைத் தொட்டு விரல் அசைவில் போவதும் தெரிவதில்லை. செலவு செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நொடிப் பொழுதில் பணம் மாயமாய் மறைந்துவிடுகிறது; பணம் சார்ந்த உணர்வுகள் மறத்துப் போய்விட்டன.  

டிஜிட்டல் செலவுகளிலிருந்து தப்பிக்க 5 எளிய வழிகள்

டிஜிட்டல் பரிவர்த்தனையை நாம் முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது, ஆனால் சில நடைமுறை உத்திகளைப் பின்பற்றினால் நமது சேமிப்பைப் பாதுகாக்க முடியும்:  

1. பெரிய செலவுகளுக்கு ஒரு வார காலக்கெடு

நான்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய நேரிடும்போது, "இந்தச் செலவு இப்போது மிகவும் அவசியம்தானா?" என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். முடிந்தால் அந்த வாங்குதலை ஒரு வாரத்திற்குத் தள்ளிப்போடுங்கள். பல இடங்களில் விசாரித்து வாங்குங்கள்; பெரும்பாலான நேரங்களில் அந்தப் பொருள் உண்மையில் தேவையற்றது என்பது இந்த இடைவெளியில் நமக்குப் புரிந்துவிடும்.

2. தேவையும் ஆசையும்: வீட்டை ஒருமுறை சுற்றிப் பாருங்கள்

இ-காமர்ஸ் தளங்களில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே பொருட்களை வாங்கிக் குவிக்கக் கூடாது. உங்கள் வீட்டை ஒருமுறை சுற்றிப் பாருங்கள்; கடந்த 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் பொருட்கள் அனைத்தும் தேவையற்ற செலவுகளின் அடையாளங்களே. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைப் பயனற்ற பொருளாக முடக்கி வைப்பது பெருமையல்ல, குற்ற உணர்வே தர வேண்டும். "குறைவான தேவைகளோடு வாழ்வதே முன்னோர்களின் வாழ்வியல் நெறி" என்பதை நினைவில் வையுங்கள்.  

மேலும் படிக்க | ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு

3. ஏஐ மார்க்கெட்டிங் மாயையில் சிக்காதீர்கள்

இணையதளங்கள் செயற்கை நுண்ணறிவு உத்திகளைப் பயன்படுத்தி, நீங்கள் ஒருமுறை தேடிய பொருளைத் திரும்பத் திரும்ப உங்கள் திரையில் காட்டி வாங்கத் தூண்டுகின்றன. "வாங்க வேண்டாம்" என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், மீண்டும் அந்த வலைப்பக்கங்களுக்குச் செல்லாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் விலகி நிற்பது மிக முக்கியம்.  

4. கௌரவம் பார்க்காமல் தேவையின் அடிப்படையில் வாங்குங்கள்

விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பதே சமூக அந்தஸ்து என எண்ணுவதை நிறுத்த வேண்டும். நண்பர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு செல்போன் வைத்திருக்கிறார் என்பதற்காக நாமும் அதே விலையிலோ அல்லது அதிக விலையிலோ வாங்க வேண்டிய கட்டாயமில்லை. அவரது பணிக்கு அது தேவையாக இருக்கலாம், நமக்கு ரூ.10,000 போனே போதுமானது என்றால் அதையே தேர்வு செய்ய வேண்டும். மீதமுள்ள பணத்தைச் சேமித்து வைத்தால் இக்கட்டான காலங்களில் கைகொடுக்கும். "இன்று சேர்த்து வைப்பவர்தான் நாளைய கோடீஸ்வரர்".  

5. ஆட்டோ டெபிட் எனும் ஆபத்தான வலை

வருமானம் தராத பொழுதுபோக்கு ஆப்கள் அல்லது பிற தேவையில்லாத சேவைகளுக்கு மாதாந்திர ஆட்டோ டெபிட் வசதியை வைக்க வேண்டாம். அந்த சேவைகளை நாம் பயன்படுத்தாவிட்டாலும் கணக்கிலிருந்து பணம் தானாகக் கழிந்து கொண்டே இருக்கும். எனவே, அவசியமில்லாத ஆட்டோ டெபிட்களை உடனடியாக ரத்து செய்வது பண விரயத்தைத் தடுக்கும்.  

சேமிப்பே எதிர்காலப் பாதுகாப்பு:

கிடைக்கும் வருமானத்தை உடனுக்குடன் செலவழித்துவிட்டுத் தவிப்பதை விட, சிக்கனத்தைக் கடைப்பிடித்து பணத்தைச் சேமிப்பதே சிறந்தது. "இன்று சேமித்து வைப்பவர்தான் நாளைய கோடீஸ்வரர்" என்ற தாரக மந்திரத்தை உணர்ந்து, ரொக்கப் பணத்தைக் கையாளும்போது கடைப்பிடித்த அதே விழிப்புணர்வையும் சிக்கனத்தையும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் கடைப்பிடிப்பதே நிதிப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Personal Finance