முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!
கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய், ரூ.438.86 கோடி மதிப்பிலான 233 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.73 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இதையொட்டி, கோவை மண்டலத்தில் ரூ. 438.86 கோடி மதிப்பிலான 233 வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், பல்வேறு அரசு துறைகள் சார்பில் 9,343 பயனாளிகளுக்கு ரூ. 34.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
ரூ. 438.86 கோடியில் 233 வளர்ச்சி திட்டங்கள்
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 406.54 கோடி மதிப்பிலான 89 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மேலும், ரூ. 32.32 கோடி மதிப்பீட்டில் 144 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ், மொத்தம் ரூ. 320.43 கோடி மதிப்பிலான 23 திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதில், ரூ. 319.11 கோடி மதிப்பிலான 17 பள்ளி கல்வித் திட்டங்களும் ரூ.1.32 கோடி மதிப்பிலான 6 பொது நூலகத் திட்டங்களும் அடங்கின.
மாநகராட்சி, ஊரக வளர்ச்சி திட்டங்கள்
கோவை மாநகராட்சியின் சார்பில் ரூ. 28.24 கோடி மதிப்பிலான 127 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுதவிர ரூ. 11.27 கோடி மதிப்பிலான 14 மாநகராட்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ. 2.66 கோடி மதிப்பிலான 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் ரூ. 12.13 கோடி மதிப்பிலான 28 திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. இதர திட்டங்கள் சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், தாட்கோ, தொழிலாளர் நலன், கூட்டுறவு மற்றும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவையாக இருந்தன.
9,343 பயனாளிகளுக்கு ரூ. 34.73 கோடி நலத்திட்ட உதவிகள்
இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு அரசு துறைகள் வாயிலாக 9,343 பயனாளிகளுக்கு மொத்தம் சுமார் ரூ. 34.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,300 பேருக்கும், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் 2,000 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் 1,738 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் 1,021 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதுதவிர, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைம், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, சமூக நீதி, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் நலத்திட்டங்களின் கீழும் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவுடன், பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.