பண்டிகை காலங்களில் ரயில்களில் ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், போத்தனூர் - பரவுனி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் வழியாக இயக்கப்படுவதால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கூடுதல் பயண வசதி கிடைக்கும்.
அதன்படி, போத்தனூர் - பரவுனி சிறப்பு ரயில் (06021) அக்டோபர் 4ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். போத்தனூர் சந்திப்பில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக காலை 9 மணியளவில் சேலம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று, செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் பரவுனி - போத்தனூர் சிறப்பு ரயில் (06022) அக்டோபர் 7ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். பரவுனியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் சேலம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 6.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் சேவைகள் மூலம் பண்டிகை காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.