நான் ரத்த வாந்தி மட்டும் தான் எடுக்கல.. மேடையில் உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi Latest News: நான் இன்னும் ரத்தம் வாந்தி மட்டும் தான் எடுக்கவில்லை என்றும் ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்க அவ்வளவு கஷ்டப்படுகிறேன் பத்தா திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.
பத்தா திரைப்பட வெற்றி விழா
ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்சஸ் மீட்’ வெற்றிச் சந்திப்பை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, "எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.
மேலும் படிக்க: “நான் எந்த தவறும் செய்யவில்லை..” புலம்பித்தள்ளிய ரகுல் ப்ரீத் சிங்! என்ன ஆச்சு?
நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.
உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள். அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.
விஜய் சேதுபதி பகிர்ந்த முக்கிய விஷயம்
இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.
சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும். இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும்.
மேலும் படிக்க: ‘மண்டாடி’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது காணலாம்?
ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன்.
லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி" என்றார்.