ரூ.6 கோடி கேட்டவருக்கு கொட்டியது ரூ.60 கோடி: பிரபல நடிகருக்கு கிடைத்த மெகா ஜாக்பாட்
Ravi Teja salary Irumudi movie : டோலிவுட்டின் பிரபல நடிகரான ரவிதேஜா சம்பளமாக 6 கோடி ரூபாய் பேசி நடித்த திரைப்படத்தில் அவருக்கு 60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Ravi Teja salary Irumudi movie : இந்தியத் திரையுலகில் சமீப காலமாக உச்ச நட்சத்திரங்களின் சம்பள விவகாரம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டில் பெரும் பகுதி நடிகர்களின் ஊதியத்திற்கே செலவிடப்படுவதால், தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கப் புதிய வழிகளைத் திரைத்துறை தேடி வருகிறது. குறிப்பாக, நடிகர்கள் ரொக்கமாக முழு சம்பளத்தையும் பெறாமல், படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு அல்லது குறிப்பிட்ட பகுதியின் திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனையைத் தயாரிப்பாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
ரூ. 200 கோடியைத் தாண்டிய 'இருமுடி' வசூல் வேட்டை
இந்தச் சூழலில், டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள "இருமுடி" திரைப்படம், விநியோக உரிமை முறைக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்திய தெலுங்குத் திரைப்படங்களில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ரவிதேஜாவின் பக்கா பிளான்
இருமுடி படத்தின் ஆரம்பகட்ட தயாரிப்புப் பணிகளின் போது, ரவி தேஜாவுக்கு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை சம்பளமாகப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. அத்துடன், தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய வர்த்தகக் களமாக விளங்கும் நிஜாம் பகுதியின் விநியோக உரிமையையும் அவரது சம்பளக் கணக்கில் இணைத்துக் கொள்ளுமாறு தயாரிப்புத் தரப்பு கேட்டுக்கொண்டது.
ஆனால், தொடக்கத்தில் இதற்கு ரவி தேஜா சம்மதிக்கவில்லை. "எனக்கு விநியோக உரிமை தேவையில்லை, சம்பளத்தில் கூடுதலாக ரூ.6 கோடியை மட்டும் சேர்த்து, மொத்தமாக ரூ.13 கோடியாக ரொக்கமாக வழங்கிவிடுங்கள்" என்று அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர்களின் தொடர் வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு, இறுதியில் நிஜாம் ஏரியாவின் உரிமையைப் பெற ரவி தேஜா ஒப்புக்கொண்டார்.
ரூ.6 கோடிக்குப் பதில் கொட்டிய ரூ.60 கோடி!
அன்று தயக்கத்துடன் ஒப்புக்கொண்ட அந்த ஒரு முடிவுதான் இன்று ரவி தேஜாவுக்கு நினைத்துப் பார்க்க முடியாத லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. 'இருமுடி' படம் வெளியாகி திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதைத் தொடர்ந்து, நிஜாம் பகுதியில் வசூல் அசுர வேகத்தில் எகிறியது.
தற்போது வரை அந்தப் பகுதியில் மட்டுமே படத்தின் வசூல் ரூ.50 கோடியைத் தாண்டிவிட்டது. இதன் மூலம் மட்டும் ரவி தேஜாவுக்குச் சுமார் ரூ.60 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர். தான் கேட்ட ரூ.6 கோடியை விட 10 மடங்குக்கும் அதிகமான லாபத்தை இந்த ஒற்றை ஏரியா மூலம் ரவி தேஜா அறுவடை செய்துள்ளார்.
கரகாட்டக்காரன் பாணியில் அடித்த சினிமா அதிர்ஷ்டம்
திரைத்துறையைப் பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் அதிர்ஷ்டம் எப்போது யாருக்குக் கைகொடுக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு ராமராஜன் நடிப்பில் வெளியான "கரகாட்டக்காரன்" திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கொட்டிக்கொடுத்த வரலாறு இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோன்றதொரு அபாரமான லாபமும் வர்த்தக அதிர்ஷ்டமும் இன்று 'இருமுடி' படத்தின் மூலம் ரவி தேஜாவைத் தேடி வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் வியப்புடன் பேசி வருகின்றன.