சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நடிகர் சூரி இறங்கி இருப்பதை தொடர்ந்து, அவர் தான் சினிமாவிற்கு வந்தது குறித்தும், அப்போது தன் வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு சம்பவம் குறித்தும் பேசியிருக்கிறார். இதை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.
ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், IMAXன் பிரமாண்டமான ஒலி மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் கடலில் நடைபெறும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களின் தீவிரமான உடல் உழைப்பையும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிரமாண்டமான அனுபவமாக வழங்க உள்ளது.
தமிழ் திரையுலகில் லைட் மேனாக இருந்து, துணை நடிகராக வளர்ந்து, காமெடியனாக நடித்து, இப்போது நாயகனாக உயர்ந்து இருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் அவர், மண்டாடி படத்தின் ப்ரமோஷனுக்காக நடக்கும் நேர்காணலில் கலந்து கொண்டு, தன்னைப்பற்றியும் படம் குறித்தும் பேசி வருகிறார்.
அப்படி ஒரு நேர்காணலில் பேசும் போது அவர், ஒரு படத்தின் ஷூடிடிங்கில் பெரிய காமெடியன் ஒருவருடன் தான் நடித்ததாக தெரிவித்திருக்கிறார். ஷூட் முடிந்த பிறகு, மானிட்டரில் காட்சிகளை இயக்குநரும், பெரிய ஹீரோ ஒருவரும் பார்த்ததாகவும், பிறகு தான் போட்டிருந்த தன்னுடைய சொந்த சட்டையை கழற்ற சொல்லி அந்த சட்டையை சிபாரிசில் வந்த வேறு ஒரு நபருக்கு கொடுத்து, நடிக்க வைத்தனர் என்றும் கூறினார். பின்னர், அந்த சட்டையை தூக்கி காஸ்டியூம் வண்டியில் போட்டுவிட்டார்கள் என்றும் உடலில் வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு தன்னுடைய சட்டையை தேடி அலைந்ததாகவும், இந்த சமப்வம் தன்னை கடுமையாக காயப்படுத்தியது என்றும் சூரி தெரிவித்திருக்கிறார்.
மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் ISC, படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், கலை இயக்குநர் டி.ஆர்.கே. கிரண் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
“மண்டாடி” திரைப்படம் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியா முழுவதும் IMAX திரைகளில் பிரத்யேகமாகவும் இப்படம் வெளியாக உள்ளது.