புழல் சிறையில் தப்பி ஓடிய நேபாள நாட்டை சேர்ந்த விசாரணை கைதி சென்னையில் கைது. தப்பி ஓடிய மற்றும் ஓர் தண்டனை கைதியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புழல் சிறை பாதுகாப்பில் குளறுபடியா எனவும் விசாரணை.
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்திற்குள் உள்ள கைதிகள் காலையில் அறைகளில் இருந்து திறந்து விடப்பட்டு மீண்டும் மாலையில் அவரவர் அறைகளில் அடைக்கப்படுவது வழக்கம். மேலும் தண்டனை கைதிகள் சிறை வளாகத்தை தூய்மைப்படுத்துதல், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேபாள நாட்டை சேர்ந்த சுதீப் போகதி என்ற கைதியும், நேற்று தண்டனை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் என்ற கைதியும் அடுத்தடுத்து சிறையிலிருந்து தப்பி ஓடினர். அடுத்தடுத்து சிறையில் இருந்து தப்பி ஓடிய 2 கைதிகளை புழல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் பதுங்கி இருந்த நேபாள கைதி சுதீப் போகதியை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல அடுக்கு பாதுகாப்பு நிறைந்த புழல் மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பி சென்றது எப்படி என தீவிர விசாரணை நடத்தி அது குறித்த ஒத்திகை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். உயர் கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி கேமரா காட்சிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையின் பாதுகாப்பில் குளறுபடிகள் காரணமாக கைதி தப்பி ஓட்டம் பிடித்தாரா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில், உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையிலிருந்து தப்பி ஓடிய அந்த ஆயுள் தண்டனை கைதியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.