SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

24 மணி நேரமும் குளத்து நீரில் தஞ்சம்.. மேற்கு வங்க சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி!

தோல் பிரச்சனையால் ஏற்படும் எரிச்சல் காரணமாக குளத்து தண்ணீரிலேயே தனது வாழ்க்கையை கழித்து வந்த சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி கரம் நீட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 19, 2026, 04:12 PM IST | Updated: Aug 19, 2026, 04:17 PM IST
Join

வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. நாம் அனுபவிக்கும் சாதாரண வாழ்க்கை கூட பலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. குறிப்பாக, தீவிர உடல் உபாதைகளால் தினம்தோறும் நரக வேதனையை அனுபவிப்பவர்கள் ஏராளம். சமீபத்தில் கூட, கடுமையான தோல் எரிச்சல் காரணமாக தண்ணீரை தொடர்ந்து தன் மீது ஊற்றிக்கொண்டே இருந்த ஒரு சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலானது. அவருக்குப் பலரும் முன்வந்து ஏசி அமைத்து கொடுத்து உதவியதை நாம் பார்த்தோம்.

அதேபோன்ற ஒரு கொடூரமான சருமப் பிரச்சனையால், உடல் எரிச்சல் தாங்க முடியாமல் இரவு பகலாக குளத்து நீரிலேயே வாழ்ந்து வந்த மற்றொரு 16 வயது சிறுவனுக்கு, தொழிலதிபர் ஆனந்த் அம்பானி உதவி கரம் நீட்டி உள்ளார். மனதை உலுக்கும் இந்தச் சம்பவமும், அதன் வீடியோவும் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.

குளத்திலேயே வாழ்க்கையை கழித்து வந்த சிறுவன்

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்தாங்கா பகுதியை சேர்ந்தவர் இக்பால் (16). இவர் கடந்த சில மாதங்களாக சொல்ல முடியாத ஒரு கொடிய தோல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். நீரிலிருந்து வெளியே வந்தாலே உடல் முழுவதும் தீப்பிடிப்பது போன்ற கடுமையான எரிச்சல் ஏற்படுவதால், வேறு வழியின்றி அருகிலுள்ள குளத்து நீரிலேயே தன் பெரும்பாலான நேரத்தை கழித்து வந்தார்.

காலை முதல் இரவு வரை தண்ணீரில் மிதந்தபடியே உணவருந்துவது, உறங்குவது என அந்த சிறுவன் வாழ்ந்து வந்த மனதை உருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்தது. நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதனால் தீவிர பாக்டீரியா தொற்று மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருந்தபோதும், குடும்பத்தின் கடும் வறுமை காரணமாக முறையான சிகிச்சையளிக்க முடியாமல் சிறுவனின் பெற்றோர் தவித்து வந்தனர்.

உதவி கரம் நீட்டிய ஆனந்த் அம்பானி

இந்த நிலையில்தான், இக்பால் இப்படி அவதிப்பட்டு வருவது இணையத்தில் வீடியோவாக வைரலானது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானியின் கவனத்திற்கு சென்றது. சிறுவனின் நிலையை அறிந்து உடனடியாக களத்தில் இறங்கிய அவர், முழு மருத்துவ செலவையும் ஏற்பதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, சிறுவன் இக்பால் உடனடியாக விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த சர் எச்.என். ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, நாட்டின் முன்னணி சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சைகளை தொடங்கி உள்ளனர்.

வறுமையின் பிடியில் சிக்கி, குளத்து நீரையே புகலிடமாக கொண்டு போராடி வந்த அந்த ஏழை சிறுவனுக்கு, சரியான நேரத்தில் கிடைத்த இந்த உதவி ஒரு புது வாழ்விற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது. இணையத்தில் ஆனந்த் அம்பானியின் இந்த மனிதநேய செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES