குடுமி, பூணூல், மது குறித்து கேள்விகளா? அயோத்தி ராமர் கோயில் CEO நேர்காணல் சர்ச்சை..
அயோத்தி ராமர் கோயில் தலைமை செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து, இந்த நேர்காணலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டது என்பது குறித்து சில தகவல்கள் வைரலானதை தொடர்ந்து, இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடுகள் தொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரி பதவிக்கு, சுமார் 5,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டதோடு, அதிலிருந்து தகுதியுடைய 18 பேர் மட்டும் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
CEOவை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரம்!
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அரக்கட்டளை, கடந்த மாதம் 18ஆம் தேதி வரை, அயோத்தி ராமர் கோயிலுக்கான தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நிர்ணயித்திருந்தது. இந்த கோயிலில், மதிப்புமிக்க பொருட்கள் கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டிருந்தது.
பொறுப்பு என்ன?
ராமர் கோயிலின் கட்டுமான குழுவின் தலைவராக உள்ள நிருபேந்திர மிஸ்ரா, இது குறித்து செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசியிருந்தார். அப்போது, அறக்கட்டளையின் மீது பக்தர்களுக்கு நம்பிக்கையை காப்பதே தலைமை நிர்வாக அதிகாரியின் முதன்மையான பொறுப்பாக இருக்கும் என கூறியிருந்தார்.
கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?
ராமர் கோயில் தலைமை செயல் அதிகாரி பதவிக்காக விண்ணப்பித்தவர்களில், சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் சமீபத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியானது. அவை சர்ச்சையாக மாறின.
- குடுமி வைத்துக்கொள்கிறார்களா?
- பூணூல் அணிகிறார்களா?
- முழுமையாக சைவம் சாப்பிடுபவர? அல்லது மாமிசம் சாப்பிடுபவரா?
- மது அருந்துகிறார்களா? இல்லையா?
- தீவிர இந்துவா? அல்லது இறை நம்பிக்கை மட்டும் கொண்டவரா?
- பிற மதங்கள் குறித்த கருத்து என்ன?
இது போன்ற கேள்விகள் அந்த நேர்காணலில் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி வைரலானது. தற்போது, இந்த தகவல்கள் தவறானவை என The Economic Times செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உண்மையாக கேட்கப்பட்டது என்ன?
The Economic Times செய்தி நிறுவனம், ராம ஜென்மபூமி CEO பதவிக்காக நேர்காணலுக்கு வந்தவர்களிடம் “மது அருந்துபவரா, தீவிர இந்துவா? அல்லது கடவுள் நாட்டம் கொண்டவரா?” போன்ற கேள்விகள் கேட்கப்படவில்லை என தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறியிருக்கின்றனர்.
நேர்காணலுக்கு வந்தவர்களிடம், அவர்களுடைய வேலை அனுபவம் குறித்தும், குறிக்க்கோள் குறித்தும் கேட்கப்பட்டதாக The New Indian Express செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ராமர் கோயில் குறித்த வேலை திட்டம் குறித்து கேட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்படவில்லை!
The New Indian Express செய்தியின் படி, நேர்காணலுக்கு வந்தவர்களிடம், “மது அருந்துவீர்களா? சைவம் மட்டும் சாப்பிடுவீர்களா? பூணூல் போடுவீர்களா? குடுமி வைத்துக்கொள்வீர்களா? ஆடை எப்படி உடுத்துவீர்கள்?” போன்ற எந்த தனிப்பட்ட கேள்வியும் கேட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம ஜென்மபூமிக்கான தலைமை செயல் அதிகாரியை தேர்ந்தெடுக்கும் பணியானது முடிந்ததாக, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரம் சமீபத்தில் அறிவித்தது. இந்த நேர்காணலில் பதவிக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் பல சுற்றுகள் நடந்ததாக அறிவித்திருக்கிறது.
ஊழியர்களுக்கு கட்டுப்பாடு..
அயோத்தி ராமர் கோயி நன்கொடையில் முறைகேடு நடந்ததையொட்டி, ஊழியர்களுக்கு பாக்கெட் இல்லாத சீருடை உட்பட, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நன்கொடையை எண்ணும் ஊழியர்கள், இனி பாக்கெட் இல்லாத சீருடைகளை அணிவர் என்றும், நன்கொடை எண்ணும் இடத்தின் அனைத்து கோணங்களிலும் படம் பிடிக்கும் நவீன கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், இதில் பதிவாகும் காட்சிகள் 45 நாட்களுக்கு பதில், 180 நாட்கள் சேமிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எண்ணும் மையத்தின் நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில், ஊழியர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு, நன்கொடை எண்ணும் பணியல் ஒப்பந்த ஊழியர்களுக்கு பதிலாக நிரந்தர ஊழியர்களை நியமிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.