கோவிலில் திடீர் கூட்டநெரிசல்: 7 பேர் உயிரிழப்பு - பீகாரில் நடந்தது என்ன?
Bihar Temple Stampede: பீகார் மாநிலம் லஹிசராய் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Bihar Temple Stampede: பீகார் மாநிலம் லஹிசராய் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மின்சார கம்பி திடீரென விழுந்ததால், பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியதில் இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. அசோக் தாம் கோவிலில் திங்கட்கிழமையான இன்று சிறப்பு தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் அதிகளவில் குவிந்ததாக தெரிகிறது.
மாவட்ட ஆட்சியர் கூறியதாவது...
மாவட்ட ஆட்சியர் சயிலேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிகாலையில் வந்த இரண்டு ரயில்களின் மூலம் எதிர்பார்க்காத அளவில் பக்தர்கள் அதிகமாக வருகை தந்தனர் என்றும்; கோவிலுக்கு வெளியே உள்ள தடுப்புகளை சிதைப்பதற்கு காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,"கூட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெருகியது. அதிகாலையில் 6.30-6.45 மணியளவில் இரண்டு ரயில்கள் இங்கு வந்தன. அதுவும் கூட்டத்தை மேலும் அதிகரித்தது. நாங்கள் எதிர்பார்த்திருந்த கூட்டத்திற்கு ஏற்ப ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். பின்ன கூட்ட நெரிசலின் காரணமாக ஒரு பக்க தடுப்பு உடைந்து, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
சரிந்து விழுந்த மின் கம்பம்
திடீரென அங்கு ஒரு மின் கம்பம் சரிந்து விழுந்தது. அந்த கம்பம் ஆண்கள் வரிசையின் வலதுபுறத்தில் அமைந்திருந்தது. கம்பம் சரிந்து விழுந்தபோது, மக்கள் மீது மின்சாரக் கம்பி விழுந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் அது வெறும் கேபிள் கம்பியாக இருந்தது.
இதனால், இடதுபுறத்தில் இருந்த பெண்கள் வரிசையில் நெரிசல் ஏற்பட்டது. அதனால் பெண்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அதிகாலை 3 மணிமுதல் காவல்துறை நிர்வாகம் அங்கு அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தது. இவை அனைத்தும் 2 நிமிட இடைவெளியில் திடீரென நிகழ்ந்தன" என்றார்.
காவல்துறை தெரிவித்தது என்ன?
சம்பவ இடத்தில் ஒரு மின் கம்பம் விழுந்ததால் மின்சாரம் தாக்கி, கூட்டநெரிசல் போன்ற நிலை ஏற்பட்டதாகவும், விவரங்களை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படும் என்றும் துணைப் பிரிவு காவல் அதிகாரி சிவம் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு மின் கம்பம் சரிந்து விழுந்ததாகவும், அதனால் மக்கள் மின்சாரம் தாக்கி கூட்டநெரிசல் போன்ற நிலைக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. அனைத்தையும் சரிபார்த்த பின்னரே சரியான காரணத்தை எங்களால் கூற முடியும்" என்றார்.
அசோக் தாம் கோயில் ஸ்ரீ இந்திரதமனேஸ்வர மகாதேவ் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்து சந்திர நாட்காட்டியில் தற்போது சவான் மாதமாகும். புனித மாதமாக கருதப்படும் சவான் மாதம் திங்கட்கிழமை அன்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.