Explained: இந்தியா vs அமெரிக்கா - இரு நாடுகளின் தேர்தலில் இவ்வளவு வித்தியாசமா...?
India vs America, Election System Differences: இந்திய தேர்தல் ஆணையருடனான உரையாடலுக்கு பிறகே, அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர முக்கிய காரணம் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள தேர்தல் நடைமுறைகளின் வேறுபாடுகள் குறித்து இங்கு சற்று விரிவாக காணலாம்.
India vs America, Election System Differences: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் உடன் நிகழ்ந்த கலந்துரையாடலைக் குறிப்பிட்டு பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வாக்காளர் அடையாள நடைமுறையை பாராட்டியும் பேசி உள்ளார்.
டொனால்ட் டிரம்பிடம் ஞானேஷ்வர் குமார், "புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எவ்வாறு தேர்தல்களை நடத்த முடியும்?" என்ற வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே நடந்த சிறு உரையாடலின் அடிப்படையில்தான், 'Save America Act' என்ற புதிய அமெரிக்காவில் கொண்டவரப்பட இருப்பதாக டிரம்ப பேசி உள்ளார்.
இது ஒரு புறம் இருக்கட்டும், இந்தியாவும் சரி அமெரிக்காவும் சரி உலகின் பெரும் ஜனநாயக நாடுகள் எனலாம். அந்த வகையில் தேர்தல் கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளில் இரு நாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
முக்கிய வேறுபாடுகள் - ஒப்பீடு இதோ
| காரணி | இந்தியா | அமெரிக்கா |
| நிர்வாக அமைப்பு | இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரே மாதிரியான விதிகள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது | 50 மாகாணங்களும் தங்களுக்கென தனித்தனி தேர்தல் சட்டங்கள், விதிமுறைகளை கொண்டுள்ளன. |
| வாக்காளர் அடையாள அட்டை | புகைப்பட அடையாள அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று ஆவணங்கள் (ஆதார், பான் போன்றவை) வாக்குச்சாவடியில் கட்டாயம். | பல மாகாணங்களில் கடுமையான புகைப்பட அடையாள ஆவணம் கட்டாயமில்லை. சில இடங்களில் சுய பிரகடனம் போதுமானது. |
| வாக்களிக்கும் முறை | பெரும்பாலும் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படுகின்றன. | மாகாணங்களுக்கு ஏற்ப காகித வாக்குச்சீட்டுகள், இயந்திரங்கள், தபால் வாக்குகள் (Mail-in Voting) என பல முறைகள் உள்ளன. |
| தபால் வாக்குப்பதிவு | முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு மட்டுமே குறிப்பிட்ட விதிகளின் கீழ் அனுமதி உண்டு. | பல மாகாணங்களில் பெருவாரியான பொதுமக்களுக்கு விரிவான தபால் வாக்குப்பதிவு (Universal Mail-in) முறை அனுமதிக்கப்படுகிறது. |
| தலைவர் தேர்வு | நாடாளுமன்ற ஜனநாயக முறை. மக்கள் எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பான்மை பெற்ற கட்சி பிரதமரை தேர்வு செய்யும். | இங்கு அதிபர் முறை. வாக்காளர்கள் Electoral COllege பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து மறைமுகமாக அதிபரை தேர்வு செய்கின்றனர். |
| ஒரே நேரத்தில் பல தேர்தல்கள் | இங்கு மக்களவை, சட்டப்பேரவை என வாக்குப்பதிவு தனித்தனியே நடைபெறும் | இங்கு ஒரு வாக்குச்சீட்டில் அதிபர், செனட்டர், உள்ளூர் நீதிபதிகள், திட்ட வாக்கெடுப்புகள் என 20க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு வாக்களிப்பார்கள். |
கட்டமைப்பு, தேர்தல் அணுகுமுறை - வேறுபாடுகள்
ஒற்றைச் சட்டம் vs பன்முக நடைமுறைகள்
இந்தியா: நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கீழ் சீரான நடைமுறை பின்பற்றப்படுகிறது. வாக்கு இயந்திரம் மூலம் அதில் வேட்பாளரின் பெயர், வேட்பாளரின் சின்னம் ஆகியவை இருக்கும்.
அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காவுக்கு என தேசிய அளவிலான பொதுவான தேர்தல் வாரியம் என்பது கிடையாது. ஒவ்வொரு மாகாணமும் வாக்குப்பதிவு நேரம், வாக்குப்பதிவு செய்யும் முறை, வாக்குச் சீட்டு வகை போன்றவரை சுயமாகவே தீர்மானிக்கப்படுகின்றன.
வாக்காளர் சரிபார்ப்பு முறை
இந்தியா: வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதோடு புகைப்பட அடையாள அட்டையை தேர்தல் அலுவலர்களிடம் காட்ட வேண்டும். உடனே விரலில் அழியாத மை வைக்கப்பட்ட பிறகு வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்கா: பல பகுதிகளில் கையொப்ப சரிபார்ப்பு மற்றும் குடியுரிமை தொடர்பான சுய உறுதியளிப்பு (Self-Attestation) முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அதாவது அடையாள ஆவணங்கள் ஏதுமின்றி, தான் தகுதியான வாக்காளர் தான் என்று சட்டப்பூர்வமாக கையெழுத்திட்டு உறுதிமொழி அளிப்பதாகும்.
வாக்குச்சாவடிகள்
இந்தியா: பள்ளிகள், கல்லூரிகள், அரசு கட்டடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்படுகின்றன. எந்தவொரு வாக்காளரும் வசிப்பிடத்தில் இருந்து 2 கி.மீ., தூரத்திற்கு பயணித்து வாக்களிக்க கூடாது என்ற விதி உள்ளது.
அமெரிக்கா: இங்கு வணிக வளாகங்கள், தேவாலயங்கள், தனியார் அரங்குகளில் கூட வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
முடிவுகள் அறிவிக்கும் வேகம்
இந்தியா: நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் கோடிக்கணக்கான வாக்குகள் சில மணிநேரங்களிலேயே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
அமெரிக்கா: பல்வேறு வாக்குப்பதிவு முறைகளும் தபால் வாக்குகளும் உள்ளதால் இறுதி முடிவுகளை அறிவிக்க சில நாட்கள் ஆகலாம்.
SAVE America Act மூலம் வரும் மாற்றங்கள்:
குடியுரிமைக்கான நேரடி ஆவணச் சரிபார்ப்பு: அமெரிக்க தேர்தல்களில் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சான்றுகளை கட்டாயமாக்குதல். அதாவது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் பதிவு செய்யும்போது வெறும் சுய உறுதிமொழி அளிப்பதற்கு பதில், பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற அமெரிக்க குடியுரிமையை நேரடியாக நிரூபிக்கும் ஆவணங்களை சமர்பிப்பதை இச்சட்ட முன்வரைவு முன்மொழிகிறது.
தகுதிபெற்ற பெயர்களை நீக்குதல்: ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியல்களை தொடர்ந்து மறு ஆய்வு செய்து, குடியுரிமையை நேரடியாக நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்பிப்பதை இந்த சட்ட முன்வரைவு முன்மொழிகிறது.
தபால் வழி வாக்குப்பதிவு: தபால் வழி வாக்குப்பதிவை வரையறுக்கப்பட்ட காரணங்களுக்கு மட்டுமே அனுமதிப்பது முடிவெடுக்கப்பட்டுள்ளது. தபால் வழி மற்றும் இணையவழி மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும் எளிதான வாக்காளர் பதிவுகளைக் கட்டுப்படுத்தி, ஆவணங்களை நேரில் சரிபார்க்கும் நடைமுறையை முதன்மைப்படுத்துகிறது.
தரவுகள் ஒருங்கிணைப்பு: வாக்காளர்களின் குடியுரிமைத் தகுதியை துல்லியமாக சரிபார்க்க, மாகாண தேர்தல் அமைப்புகள், உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புகளின் மத்திய தரவுத்தளங்களைப் பயன்படுத்த வழிவகுக்கிறது.
சுருக்கம்
- இந்திய தேர்தல் நடைமுறை என்பது மத்தியமயமாக்கப்பட்ட கடுமையான ஆவண சரிபார்ப்பு மற்றும் தொழில்நுட்பத்தை முதன்மையாக கொண்டு இயங்குகிறது.
- அமெரிக்க தேர்தல் நடைமுறையோ மாநில சுயாட்சி மற்றும் வாக்காளர்களின் அணுகலை எளிமையாக வைத்துக்கொள்வது ஆகியவற்றை மையமாக கொண்டதாகும்.
- இந்த அடிப்படையான வேறுபாடுதான் அமெரிக்காவின் தற்போதைய தேர்தல் பாதுகாப்பு சீர்திருத்த விவாதங்களில் இந்தியாவை ஒரு முக்கிய உதாரணமாக குறிப்பிடக் காரணமாக அமைந்துள்ளது.