14 முதலவர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... லிஸ்டில் CM விஜய் - முதலிடத்தில் யார்?
Criminal Cases Against Chief Ministers: இந்தியாவில் மொத்தமுள்ள முதலமைச்சர்களில் எத்தனை பேர் மீது, எவ்வளவு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறித்த தகவலை மூத்த வழக்கறிஞர் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Criminal Cases Against Chief Ministers: மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள், ஊழல் வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளை சுதந்திர இந்தியா பார்த்திருக்கிறது. இதில் முதலமைச்சர்களும் விதிவிலக்கல்ல. பல ஊழல் வழக்குகளில் முதலமைச்சர்கள் கைதாகி சிறைக்கும் சென்றிருக்கிறார்கள்.
அந்த வகையில் பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின்போது, மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்கள் மீதான கிரிமீனல் வழக்குகள்
மொத்தமுள்ள 28 மாநிலங்களில், 14 மாநில முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி எந்தெந்த முதலமைச்சர்களின் மீது எவ்வளவு கிரிமீனல் வழக்குகளும் உள்ளன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். அவை கீழ்வருமாறு:
| முதலமைச்சர் பெயர் | மாநிலம் | கட்சி | வழக்குகளின் எண்ணிக்கை |
| ரேவந்த் ரெட்டி | தெலங்கானா | காங்கிரஸ் | 89 குற்ற வழக்குகள் |
| சுவேந்து அதிகாரி | மேற்கு வங்கம் | பாஜக | 29 குற்ற வழக்குகள் |
| டி.கே.சிவக்குமார் | கர்நாடகா | காங்கிரஸ் | 19 குற்ற வழக்குகள் |
| ஹேமந்த் சோரன் | ஜார்க்கண்ட் | JMM | 5 குற்ற வழக்குகள் |
| தேவேந்திர பட்னாவிஸ் | மகாராஷ்டிரா | பாஜக | 4 குற்ற வழக்குகள் |
| சுக்விந்தர் சிங் | ஹிமாச்சல் | காங்கிரஸ் | 4 குற்ற வழக்குகள் |
| ஜோசப் விஜய் | தமிழ்நாடு | தவெக | 2 குற்ற வழக்குகள் |
| சாம்ராட் சௌத்ரி | பீகார் | பாஜக | 2 குற்ற வழக்குகள் |
| பிரேம் சிங் தமாங் | சிக்கிம் | SKM | 1 குற்ற வழக்கு |
| பகவந்த் மாண் சிங் | பஞ்சாப் | ஆம் ஆத்மி | 1 குற்ற வழக்கு |
| மோகன் சரண் மாஞ்சி | ஓடிசா | பாஜக | 1 குற்ற வழக்கு |
| பஜன் லால் சர்மா | ராஜஸ்தான் | பாஜக | 1 குற்ற வழக்கு |
எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள்
நாடு முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள் மீதும் அதிகப்படியான குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருக்கும் 290 எம்எல்ஏக்களில் 170 பேர் (58%) மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன.
அதேபோல், கேரளாவில் 57%, ஆந்திராவில் 56%, தெலங்கானா 49%, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் தலா 45%, பீகார் 42%, மகாராஷ்டிரா 40% என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகள்
மக்களவை உறுப்பினர்கள் சார்ந்த தரவுகளும் உள்ளன. மொத்தம் இருக்கும் 543 மக்களவை உறுப்பினர்களில் 170 எம்.பி.க்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது 31% பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.
தெலங்கானாவின் 17 எம்பிக்களில் 11 பேர் மீதும், கேரளாவில் 21 எம்பிக்களில் 11 பேர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. பீகாரில் 40 எம்பிக்களில் 19 பேர் மீதும்; உத்தர பிரதேசத்தின் 80 எம்பிக்களில் 34 பேர் மீதும்; மகாராஷ்டிரா 48 எம்பிக்களில் 17 பேர் மீதும்; மேற்கு வங்கம் 42 எம்பிக்களில் 16 பேர் மீதும்; ஆந்திராவின் 25 எம்.பி.க்களில் 9 பேர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.
நிலுவையில் உள்ள வழக்குகள்
2026ஆம் ஆண்டு ஜூலை நிலவரப்படி இன்னாள்/முன்னாள் எம்பி., எம்எல்ஏக்கள் மீது மட்டும் 4,192 குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. அதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில்தான் 1,171 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் மூத்த வழக்கறிஞர் ஹன்சாரியா தாக்கல் செய்த 96 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களில்...
மாநிலங்களவையை பொருத்தவரை 233 உறுப்பினர்களில் 75 பேர் (33%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள் என்பது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை வழங்கக்கூடிய தீவிர குற்ற வழக்குகளாகும். இவை வழக்கறிஞர் சினேகா கலிதா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.