ஈரானை சேர்ந்த பாடகியின் பெயர், பாராஸ்தோ அஹமதி. இவர், அந்த நாட்டின் பிரபலமான பாடகர்களுள் ஒருவராக இருக்கிறார்.
அஹமதிக்கு, 29 வயது ஆகிறது. இவர், 2024ஆம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்து பாடல் பாடியுள்ளார். அது லைவ்ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் சட்ட திட்டங்களின் படி, பொது இடங்களில் பாடல் பாடும் பெண்கள் தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து, அடக்கமான உடைகளை அணிய வேண்டும். ஆனால், அந்த பெண் ஸ்லீவ்லெஸ் அணிந்து அதை லைவ் ஸ்ட்ரீம் செய்தது, குற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஜூன் மாதம், குற்றப்பிரிவுகளை விசாரிக்கும் கோம் நகரின் நீதிமன்றம் அஹமதி உள்ளிட்ட அவருடைய இசைக்குழுவை, ஆபாசமான மற்றும் அநாகரிகமான உள்ளடக்கத்தை" வெளியிட்டதன் மூலம் "பொது ஒழுக்கத்தைப் புண்படுத்தியதாக” கூறியிருந்தது. ஆனால், இதற்கு அஹமதி தரப்பினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, நீதிமன்றம் அவர்களுக்கு 74 கசையடி வழங்க உத்தரவிட்டது. மேலும், இவர்கள், 2 தினங்களுக்கு எந்த இசை நிகழ்ச்சிகளையும் செய்யக்கூடாது என்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மேல்முறையீடு செய்தும், அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பிற்கு, ஈரானிய கலைஞர்களிடம் இருந்தும், மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் இந்த தண்டனையை மனிதாபமானமற்றது என்றும், தரக்குறைவான தண்டனை என்றும் குறிப்பிட்டனர்.
சில நாட்களுக்கு முன்பாக அஹமதியின் வழக்கறிஞர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோமில் உள்ள குற்றவியல் தண்டனை அமலாக்க அலுவலகத்தின் மூன்றாவது கிளையில் அஹ்மதிக்கும்அவருடன் குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஆண்களுக்கும் பிரம்படி வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தாங்கள் அந்த தண்டனையை எவ்வளவோ மாற்ற முயற்சித்தும், அதனை செய்ய முடியவில்லை என்றும், தடையை மட்டும் நீட்டிக்க கோரியும், பிரம்படி வேண்டாமென வாதாடியும் அதற்கு பயனில்லாமல் போய் விட்டதாக தெரிவித்தார்.
"தனது விருப்பப்படி பாடுவதற்கும் உடை அணிவதற்கும் அஹ்மதிக்கு அளிக்கப்படும் சவுக்கடி, அவரது அடிப்படை உரிமைகளின் மீறலாகும். மேலும், பெண்களின் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும், தங்களின் பாகுபாடு நிறைந்த சட்டங்களையும் கொள்கைகளையும் எதிர்க்கத் துணிபவர்களை வன்முறையாகத் தண்டிப்பதற்கும் ஈரானிய அதிகாரிகள் கொண்டுள்ள உறுதியின் ஒரு கீழ்த்தரமான செயல் இது," என, அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்ட ஈரானில் மனித உரிமைகளுக்கான மையத்தின் பரப்புரை இயக்குநர் பஹார் கந்தேஹரி கூறினார்.
ஈரானில், ஷரியா சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு பெண்கள் பூப்படைந்த பிற்கு அவர்கள் ஹிஜாப்பை கொண்டு தலைமுடியை மறைக்க வேண்டும். தங்கள் உடல் தெரியாத வண்ணம் தளர்வான உடைகளை அணிய வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக 22 வயதான மஹ்சா அமினி எனும் பெண் டெஹ்ரானில் ஹிஜாப்பை சரியாக அணியாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இதனால், நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்திலும் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.