SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : இனிமே போராட்டம் பண்ணக்கூடாது! சிறுவர்கள் போராடினாலும் பெற்றோருக்கு தண்டனை..

உலகளவில் பல்வேறு இடங்களில், போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து வருகிறது. இதையடுத்து, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கொடுத்திருக்கும் ஒரு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Written By Yuvashree M
Published: Oct 21, 2026, 06:41 PM IST | Updated: Oct 21, 2026, 06:48 PM IST
Join

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக, ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. குறிப்பாக, இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதில் முக்கிய கவனத்தை பெற்று வருகின்றன. இந்த சமயத்தில், இத்தாலிய பிரதமரான ஜார்ஜியா மெலோனி போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோருக்கும் வைத்திருக்கும் செக், கவனத்தை ஈர்த்து வருகிறது.

இத்தாலியில் வலுக்கும் போராட்டம்!

இத்தாலியில், அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவுகள் மற்றும் பொது சேவைகளின் தரம் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், சில தினங்களுக்கு முன்பு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பெரும் திரளாக போராட்டங்கள் நடைப்பெற்றது. அதிலும் குறிப்பாக மிலன் நகரில் நடைப்பெற்ற போராட்டம், வன்முறையாக மாறியிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்தது.

மிலன் நகரின் மைய பகுதியில் நடைப்பெற்ற போராட்டத்தின் போது, சிலர் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை கொள்ளையடித்தனர். மேலும், குப்பை தொட்டிகளுக்கு தீ வைத்ததுடன், போலீசாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தினர்.

மேலும், மிலன் மட்டுமன்றி போலோக்னோ, பிரெஸ்சியா, பெர்கமோ, டூரின் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் நடைப்பெற்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் வன்முறை சம்பவங்களை அந்த சமயத்திலேயே பிரதமர் ஜார்ஜியா மெலோனி கண்டித்திருந்தார்.

இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

இந்தியர்கள் பலர் இத்தாலியில் படிப்பது, வேலை காரணமாக இருப்பது போன்ற காரணங்களுக்காக தங்கியிருக்கின்றனர். இதையடுத்து, இத்தாலியில் வசிக்கும் மற்றும் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் செய்திகளை தொடர்ந்து கவனித்து, போராட்ட நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவசரநிலை ஏற்பட்டால், இந்திய தூதரகம் மற்றும் மிலனின் உள்ள இந்திய துணை தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்தாலிய பிரதமர் சொன்ன விஷயம்..!

இத்தாலிய பிரதமரான ஜார்ஜியா மெலோனி, போராட்டங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனைமுதல் 20,000 Euro இந்திய மதிப்பில் ரூ.21 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

பெற்றோர் மீது நடவடிக்கை!

மேற்கூறிய இந்த தண்டனைகளானது, போராட்டங்களில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோருக்கு வழங்கப்படும் என அவர் கூறியிருக்கிறார். இது குறித்து வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகளில், ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்தபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பங்கேற்று, பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக €20,000 ($22,460) அபராதமும் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தங்கள் முகங்களை மறைத்தாலோ அல்லது மற்றவர்களைக் காயப்படுத்தினாலோ தண்டனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது பல கடைகள் மற்றும் வணிக மையங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இதே போன்ற செயல்களில் ஈடுபட்டால், அதற்குரிய உரிமையாளர்கள் கலவரத்தின் போது ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அதிகாரிகள் உத்தரவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சிறுவர்கள் செய்தால், இதற்கு பெற்றோர்தான் பொறுப்பு ஏற்று அந்த தொகையை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் சிறுவர்கள் மீதும் இப்போது கவனம் திரும்பி இருப்பதால் 14 முதல் 17 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களில், அவர்கள் சட்டத்திற்கு எதிரான எந்த செயல்களிலும் ஈடுபடவில்லை என்றாலும், அவர்கள் பாதுகாப்பிற்கு களங்கம் விளைவிப்பார்கள் எனும் சந்தேகம் வந்தால் அவர்களை கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பொருட்களை சேதப்படுத்துவது மற்றும் திருடுவதில் எந்த புரட்சியும் இல்லை என்றும், இதற்கு போராட்டம் எனும் பெயரையும் வைக்க கூடாது அவர்கள் செய்வது குற்றம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Explained : மெக்காவில் முத்தம் கொடுத்ததால் மரண தண்டனை? காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடுமை!

2026 ஆம் ஆண்டு இறுதி வரை மிலனில் காவல்துறையினருடன் இணைந்து 500 இராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வீரர்கள் முக்கிய பகுதிகளை பாதுகாக்கவும், உணர்திறன் மிக்க இடங்களைக் கண்காணிக்கவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் உதவுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மெலோனிக்கு இருக்கும் அழுத்தம்!

இத்தாலிய பிரதமர் மெலோனியின் அரசாங்கம், பல முறை போராட்டங்களை எதிர்கொண்டிருப்பதால், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு இத்தாலியில், அதிகரித்து வரும் டீசல் விலை மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றால் கோபமடைந்த லாரி ஓட்டுநர்கள், விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கும் வகையில் சாலை மறியல்களில் ஈடுபட்டுள்ளனர். சில பாஸ்தா உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றனர். அதே நேரத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகக்கூடும் என்று விவசாயகிகள் எச்சரித்திருக்கின்றனர்.

இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, தகுந்த நடவடிக்கைகளை எடுக்க, அனைத்து துறை அதிகாரிகளுடன் மெலோனி கலந்துறையாடல் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து, மெலோனி இத்தாலியில் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளை விதித்துள்ளார். இது, எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலிருந்து பல்வேறு விமர்சனத்தை பெற்று வந்தது. மேலும், குற்றங்களை குறைக்க அதிக தண்டனைகளை கொடுத்ததால் மட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை என்பது அவர்களின் கூற்றாக இருக்கிறது. மேலும், இத்தாலியில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கையும் 17 சதவீதம் இந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 10000 பேர் அதிகரித்திருப்பதாகவும் அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நிலைமை குறித்து பேசிய மெலோனி, ஒரு வேலை தேடுவதும், அந்த வேலைக்கான சம்பளம் குறைவாக இருப்பதும், எதிர்காலம் குறித்த கேள்விக்குறி எப்போதும் இருந்து கொண்டே இருப்பதும் வன்முறையை பிரயோகிப்பதற்கு சாக்காக மாறி விடாது என்றும் தெரிவித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு, இத்தாலியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து, இந்த போராட்டம், மக்களின் மனநிலை உள்ளிட்டவை இந்த தேர்தலில் பிரதிபலிக்கலாம் என கூறப்படுகிறது. நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | DA, OPS, ஓய்வூதிய திருத்தம்: வங்கி ஊழியர்களுக்கான கோரிக்கையை பட்டியலிட்ட AIBEA

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES