சவுதி அரேபியாவில், வங்கதேசத்தை சேர்ந்த இருவர், 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களுக்கு, சில நாட்களுக்கு முன்பு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என வங்கதேசம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, 2023ஆம் ஆண்டு வங்கதேசத்தை சேர்ந்த இருவர் சென்றிருக்கின்றனர். இவர்கள் இந்த கோயிலுக்குள் முத்தம் கொடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, இவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த அக்டோபர் 14ஆம் தேதியன்று, “தகாத செயல்களில்” ஈடுபட்ட குற்றத்திற்காக அந்த தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என சவுதி அரேபியாவை சேர்ந்த ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால், அப்படி அவர்கள் குறிப்பிடும் “தகாத செயல்கள்” என்னவென்பதை விளக்கவில்லை.
புனித நகரமாக கருதப்படும் மெக்காவில் உள்ள மசூதியில், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பங்களாதேஷ் நாட்டினருக்கு சவூதி அரேபியா மரணதண்டனை நிறைவேற்றியது இரு நாடுகளுக்கு மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணதண்டனைகள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள், மரணதண்டனை நிறைவேற்றும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அவர்களின் விசாரணைகளின் நேர்மை குறித்து, வங்கதேசத்தின் தலைநகரான தாகாவிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. அந்த தம்பதியினரை காப்பாற்ற தாக்காவால் எப்படியாவது உதவியிருக்க முடியுமா என்பது போன்ற கேள்விகளையும், இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
அதிக மரண தண்டனை கொடுக்கும் நாடுகளில், சவுதி அரேபியா டாப் லிஸ்டில் இருக்கிறது. இது குறித்து Human Rights Watch கொடுத்திருக்கும் தரவில், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 356 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, வன்முறையற்ற போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, பிரதமர் மற்றும் அந்த நாட்டின் அரசர் முகம்மது பின் சல்மான், மரண தண்டனைகள் கொலை குற்றங்களுக்காக மட்டுமே வழங்கப்படும் என கூறியதன் பின்பும் இப்படி வழங்கப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவில், மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இதில், வங்கதேசத்தை சேர்ந்த அந்த இருவருக்கும் ta'zirக்கு கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்த தண்டனை சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மக்கா பிராந்தியத்தில் அவர்களை மரணதண்டனைக்கு உட்படுத்த அரச ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை தமிழரான அனோஜனுக்கு, சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் கமெண்ட் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், இலங்கை அரசு சவுதி அரேபிய அரசாங்கத்திடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியா ஊடகங்கள் தெரிவித்த தகவல்களின் படி, தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் தம்பதியின் பெயர், நஸ்ருல் இச்லாம் அப்துல் பசீர் மற்றும் சிதி அக்தர் என்பவை ஆகும். இவர்கள் மீது, ‘தகாத செயல்களில் ஈடுபட்ட’ குற்றங்கள் மட்டும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன. சமூக வலைதளங்களில் இருவரும் முத்தம் கொடுத்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் சவுதி அரேபிய அரசு இது குறித்த எந்த தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஒரு சிலர், அவர்கள் இருவரும் தம்பதிகள் என்றும், நெற்றியில் முத்தமிட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் நஸ்ரூலின் குடும்பம் இதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
நஸ்ரூல், 2022ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். அங்கு இருக்கும் மெக்கா மஸ்ஜித்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கைது செய்யப்பட்ட 8 மாதங்களுக்கு பிறகுதான், இவர் கைது செய்யப்பட்ட தகவலே இவர் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11 அன்று குடும்பத்தாரிடம் பேசிய நஸ்ரூலுக்கு மூன்று நாள் கழித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவரது குடும்பத்தினர் இது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிடுகின்றனர். அவர்களும் தங்கள் மகனுக்கு நீதி வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
சிதி அக்தருக்கும் நஸ்ரூலுக்கும் என்ன உறவு என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் இவர்கள் இருவரும் கணவன் மனைவி இல்லை என்று நஸ்ரூலின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.