சவுதியில் ஷாக்! திருமணமாகாமல் குழந்தை பெற்ற பெண்.. 100 கசையடி தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
சவுதி அரேபியாவில் திருமணமாகாமலேயே குழந்தை பெற்ற பெண்ணுக்கு 100 கசையடி தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கடந்த ஓராண்டாக அப்பெண் சொந்த திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
உலக நாடுகளில் கடுமையான சட்டங்களுக்கு பெயர்ப்போனது சவுதி அரேபியா. சவுதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், அங்கு இஸ்லாமிய சட்டம் (ஷரியா) கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவில் பல்வேறு விதிகள், கடுமையான சட்டங்களை அந்நாடு செயல்படுத்தி வருகிறது. இது ஒருபக்கம் குற்றங்களை குறைவாக்க உதவினாலும், வெளிநாட்டினருக்கு பெரும் சிக்கல்களை கொடுத்து வருகிறது. ஆடை முதல் மத வழிபாடு தளங்கள் வரை அனைத்துக்குமே சில சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு சவுதியில் கடுமையான சட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பெண்ணுக்கு 100 கசையடிகள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசும் பொருளாகி மாறியுள்ளது.
திருமணமாகாமல் குழந்தை
கென்யா நாட்டைச் சேர்ந்த எஸ்தர் வான்ஜா முத்தோனி என்ற பெண் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகவும், குழந்தை பராமரிப்பாளரகாவும் வேலை செய்ய அழைத்து வரப்பட்டார். பெண் முத்தோனி சவூதி அரேபிய நிறுவனமான மஹாரா ஹியூமன் ரிசோர்சஸ் மூலம் சவூதி அரேபியாவில் சட்டப்பூர்வமாக வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். சவுதி அரேபியாவில் வசிக்கும் ஒரு எகிப்த் நாட்டைச் சேர்ந்த நபருடன் உறவில் இருந்தார்.
இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், அவர் கர்ப்பமானார். எஸ்தருக்கு திருமணமாகாத நிலையில், 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியாளர் குடியிருப்பில் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த மேற்பார்வையாளர் ஒருவர், எஸ்தரையும், குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, கர்ப்பம் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீசார் அவரை காவலில் எடுத்தனர்.
அப்போது, எஸ்தர் குழந்தையின் தந்தை முகமது என்ற நபர் சவுதி அரேபிய நாட்டைவிட்டு வெளியேறி விட்டதாக வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்கு பிறகு எஸ்தரை போலீசார் விடுவித்துள்ளனர். இதனால், அவருக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டது. கென்ய தூதரகத்திடமிருந்தும் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் ஒரு பெட்ரோல் பங்கில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இப்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
100 கசையடி விதித்த தீர்ப்பு
அக்டோபர் மாதம் திருமணம் செய்யாமல் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக எஸ்தருக்கு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனத்தின் அடிப்படையில் 100 கசையடிகள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். மேலும், பெண்ணை நாடு கடத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், குழந்தையின் தந்தை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்கிற விவரம் தீர்ப்பில் இடம்பெறவில்லை.
கசையடி எப்போது நடைபெறும் அல்லது அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கென்யாவிலிருந்து வெளியேறுவதற்கான ஆவணங்கள் காலாவதியாகிவிட்டதால், அவர் கென்யாவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்களா அல்லது எப்படி அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் தெளிவாக இல்லை. கசையடிகளுடன், எஸ்தருக்கு ஓராண்டு நாடு கடத்தும் தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது.
சவூதி விதிகளின்படி, ஒரு தீர்ப்பில் செல்ல வேண்டிய இடம் குறிப்பிடப்படவில்லை என்றால், அந்த நபர் பொதுவாக மற்றொரு சவூதி நகரத்திற்கு அனுப்பப்படுவார். பெண்களுடன் துணையாகச் செல்ல ஆண் உறவினர்கள் இல்லாத பட்சத்தில், நீதிமன்றங்கள் அத்தகைய தண்டனைகளை மறுபரிசீலனை செய்யலாம். இதனால் எஸ்தர் கென்யாவிற்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ங
மேலும் படிக்க: Explained : சீன பெண் உளவாளியுடன் உறவு வைத்த ட்ரம்ப் நண்பர்! கசியும் அமெரிக்க ரகசியம்?