Flydubai விமான காக்பிட்டில் நடந்தது என்ன? - தாக்கப்பட்ட இந்திய விமானியின் வாக்குமூலம்
Smit Machchhar: Flydubai விமானத்தில் தாக்கப்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், அன்று காக்பிட்டில் நடந்தது என்ன என்பதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் விரிவாக விவரித்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.
Smit Machchhar Latest News: கடந்த செப். 30ஆம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி சென்றுகொண்டிருந்த Flydubai விமானத்தில், விமானி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தார். துணை விமானியே விமானியை சிறு கோடாரியால் குத்தியிருக்கிறார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | இந்திய விமானியை தாக்கிய துணை விமானி யார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்கள்
துணிச்சலாக செயல்பட்ட விமானி
துணை விமானி, விமானியை தாக்கி இஸ்ரேலியர்கள் அதிகம் இருந்த அந்த விமானத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றதாக தெரிகிறது. ஆனால், படுகாயம் அடைந்த நிலையிலும் கூட கேப்டன் ஸ்மித் மச்சார் துணிச்சலாக செயல்பட்டு காக்பிட்டின் கதவை திறந்து பயணிகளை எச்சரித்துள்ளார்.
அதன் பின்னர், தாக்குதல் நடத்திய துணை விமானியை பயணிகள் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். அவசர குழுவினர் விமானத்தை சௌதி அரேபியாவின் Tabuk நகரில் தரையிறக்கினர். விமானிக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவரை பிடித்து சௌதி அரேபியா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானியின் உடல்நிலையில் முன்னேற்றம்
பெரும் அசம்பாவிதத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றி, துணிச்சலாக செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. மருத்துவமனையில் தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது. அவரை துபாயின் பட்டத்து இளவரசர் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து, அவரது துணிகர செயலுக்கு பாராட்டினார். பிரதமர் மோடியும் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.
நலம் விசாரித்த நெதன்யாகு
இந்நிலையில், கேப்டன் ஸ்மித் மச்சாருடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். அப்போது விமானத்தில் நடந்த சம்பவங்களை ஸ்மித் மிச்சார், நெதன்யாகுவிடம் விவரித்துள்ளார்.
தலையில் விழுந்த அந்த அடி
அதில், "அது ஒரு சாதாரண விமானப் பயணம், துணை விமான பிரார்த்தனை செய்ய விரும்பினார். பொதுவாகவே உள்ளூர்வாசிகள் பலர் செய்வது போல, அது அசாதாரணமானது அல்ல...
பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது மரியாதை நிமித்தமாக, நான் விமானத்தின் பின்பக்கத்தை பார்க்காமல், முன்பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சுமார் ஒரு 4-5 நிமிடங்ளுக்கு பின் எனது பின்னந்தலையில் பலத்த அடி விழுந்தது.
வேகமாக கீழே இறங்கிய விமானம்...
விமானத்தில் பெரிய பிரச்னை ஏற்பட்டுவிட்டது, ஏதோ சரியில்லை என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஆனால், அதன்பிறகு ஒன்றபின் ஒன்றாகத் தொடர்ந்து அடி விழுந்தது. அப்போதுதான் அது விமானத்தின் தவறல்ல, காக்பிட்டில் இருந்து துணை விமானியின் தவறு என்பதை நான் உணர்ந்தேன்.
நான் அவரை தடுக்க முயற்சித்தேன். ஆனால் அவர் அடித்த அடியில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை, பார்வையே மங்கலாகிவிட்டது. அந்த நேரத்தில் எனக்கு ஏற்படுத்த உடனடி உணர்வு, விமானம் வேகமாக கீழே இறங்கிக் கொண்டிருந்தது என்பதுதான்.
மரண போராட்டம்
இப்போதும் எனக்கு நினைவுகள் துண்டு துண்டாகவே இருக்கின்றன. ஆனால் அந்த நேரத்தில் நடந்தவைதான் எனக்கு நினைவிருக்கிறது. நான் ஒருமுறை (காக்பிட்) கதவை திறக்க முயன்றேன், ஆனால் அவர் அதை மீண்டும் மூடிவிட்டார் என நினைக்கிறேன். அந்த நேரத்தில் காக்பிட் தரையில் நான் படுத்துவிட்டேன். விமானம் சீறிப் பாயும் சத்தத்தையும் மக்கள் அலறுவதையும் உணர்ந்தேன்.
நான் இங்குள்ள தூதரிடம் சொல்லிக்கொண்டிருந்ததை போல, கடைசியாக ஒருமுறை போராடி பார்க்கும் சக்தியே என்னிடம் இருந்தது. அது எனக்காகவோ அல்லது மக்களுக்காகவோ எதுவேண்டுமானாலும் சொல்லலாம், நான் அதை செய்தேன் (கதவை திறந்தேன்).
எதிர்த்துப் போராடினேன்...
ஏனென்றால் நான் அதைச் செய்யவில்லை என்றால் நான் இறந்திருப்பேன். அப்போதுதான் நான் எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடினேன். என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து கதவை நோக்கிச் சென்று அதை திறந்தேன். நல்லவேளையாக மக்கள் பதிலடி கொடுக்க காத்திருந்தார்கள். கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டார்கள். மற்றவை உங்களுக்கே தெரியும்" என அச்சம்பவம் குறித்த அவரது நினைவை பகிர்ந்தார்.