இனி ஆடு, மாடுனுதான் அழைக்கணும்! பெண்களை வெறுக்கும் தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் அட்டூழியம்
Taliaban Bans Women Names: மருந்து சீட்டுகளில் பெண்களின் இயற்பெயர்களை எழுதவோ அல்லது பொதுவெளியில் உச்சரிக்கவோ கூடாது என ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை இனி ஆடு, மாடு, பிபி ( Bibi) என்றுதான் அழைக்க வேண்டும் என தாலிபான்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இது பெண்களை ஒடுக்கும் தாலிபான்கள் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாக பார்க்க முடிகிறது.
Taliaban Bans Afghan Women Names: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடூர ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்கள் ஆட்சி அமைந்ததிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. கல்வி முதல் தனிப்பட்ட விஷயம் வரை அனைத்திலும் பெண்களுக்கு உரிமை அங்கு மறுக்கப்பட்டு வருகிறது. பெண்களை ஒடுக்கும் வகையில், கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடுமையான எதிர்வினை ஆற்றி வந்தாலும் தாலிபான்கள் அரசு பெண்களை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
பெண்களின் இயற்பெயரை உச்சரிக்க தடை
அந்த வகையில் தற்போது தாலிபான்கள் அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை இனி ஆடு, மாடு என்று தான் அழைக்க வேண்டுமென தாலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள பால்க் மாகாணத்தில் உள்ள தாலிபான்கள் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
வெளியான தகவலின்படி, அரசு ஆவணங்கள், மருத்துவ பதிவேடுகள், மருந்து சீட்டுகளில் பெண்களின் முதல் பெயர்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தாலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக பெண்களை பிபி (Bibi) என்ற பொதுவான சொல்லால் அடையாளம் காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பிபி என்றால் ’பாட்டி’ அல்லது 'வயதான பெண்' என்பதை குறிப்பதாகும்.
ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்ணின் இயற்பெயரை சொல்வது அவளுடைய கணவரின் அல்லது குழந்தையின் கௌரவத்திற்கு இழுக்காக கருதப்படும் பழமையான சமூக மரபு கொண்ட நாட்டில், பிபி என்ற இந்த சொல் பாரம்பரியமாக மரியாதை நிமித்தமாக அங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: இந்திய பெண்ணிற்கு கனடாவில் அடித்த ஜாக்பாட்! லாட்டரியில் ரூ.32 கோடி பரிசு..
பெண்களை ஆடு, மாடு என்று அழைக்க உத்தரவு
இந்த உத்தரவு தற்போது பல்க் மாகாணம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில பெண்களை ஆடு மற்றும் மாடு போன்ற இழிவான விலங்குகள் தொடர்பான சொற்களால் குறிப்பிடப்படுவதாக வெளியான தகவல் மேலும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த உத்தரவு சமூக ஊடங்களில் பெரும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
இது பெண்களின் அடையாளத்தை அழிப்பதற்கும், அவர்களை மேலும் ஒடுக்குவதற்குமான முயற்சி என பெண்ணியவாதிகளும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். இருப்பினும் விலங்குகளின் பெயர்களை பயன்படுத்த சொல்லி தாலிபான்கள் எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பித்ததாக உறுதிப்படுத்தப்பட முடியவில்லை.
மேலும் படிக்க: ஈரான் பாடகிக்கு 74 கசையடி தண்டனை! ஹிஜாப் அணியாததால் கொடூர தீர்ப்பு..
இந்த உத்தரவால் மருத்துவமனைகளில் அனைத்து பெண்களின் பதிவுகளும் பிபி பதியப்படுவதால் நோயாளிகளை அடையாளம் காண குழப்பங்கள் ஏற்படலாம் என்றும் தவறான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பரவும் அச்சம்
இந்த உத்தரவு குறித்து பேசிய ஜெர்மனியில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் பெண் லாலா ஒஸ்மானி, "தாலிபங்கள் அரசின் இந்த உத்தரவு திட்டமிட்டு மனித தன்மையை பறிக்கும் ஒரு செயல். ஒரு ஆட்சிப் பெண்ணின் பெயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக விலங்குகளின் பெயரை சூட்டும் போது, அவரது மனித ஆன்மாவை பறித்து அவரை வெறும் உயிரினமாகவோ அல்லது ஆணின் உடமையாகவோ சுருக்குகிறது" என வேதனை தெரிவித்துள்ளார்.
2021-இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களின் அடையாளத்தை அழிக்கும் நோக்கில் விதிக்கப்பட்டு வரும் கடும் கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியே இந்தப் புதிய நடவடிக்கையாகும். தற்போது இந்த உத்தரவு பால்க் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் உள்ளூர் அளவில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் பல நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி இது ஆப்கானிஸ்தான் முழுவதும் பரவக்கூடும் என மனித உரிமைகள் அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன.