Coimbatore News: தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ப்ல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு திட்டங்களுக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை ஆட்சியர் பவன்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க டிசம்பர் 17ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் நடப்பாண்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100% மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூ.50,000 மதிப்புள்ள கறவை மாடும், அதற்குரிய காப்பீடும் (2 வருடங்களுக்கான). வழங்கப்பட்ட கறவை பசுவை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, உடனடி தீவன செலவினத்திற்காக ரூ.3,000 வழங்கப்படும்.
தகுதிகள்: இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட மகளிர் மற்றும் திருநர்கள், கறவை பசு வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், கறவை பசு வளர்ப்பதற்கு போதுமான அளவு இடவசதி, தீவன வசதி உள்ளோர் பயன்பெறலாம். 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், ஏற்கனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன் பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே கறவை மாடு வைத்துள்ளோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்கும் முறை:இத்திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள். கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் கீழ்கண்ட நிலையங்களில் உள்ள விண்ணப்ப உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். அதன்படி துணை இயக்குநர், கால்நடை பெருக்கம் மற்றும் தீவின அபிலிருத்தி துணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், கோவை மற்றும் வேட்டைகாரன்புதூர், கால்நடை மருத்துவமனை, ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் சென்று கேட்கலாம்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்திட நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் செம்மறி ஆடு/வெள்ளாடுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூ.30,000 மதிப்புள்ள 5 செம்மறி ஆடு/வெள்ளாடுகளும் (அதில் 1 ஆண் கிடா, 4 பெண் ஆடுகள் அல்லது 5பெண் ஆடுகளும், அதற்குரிய காப்பீடும் (2 ஆண்டுகளுக்கான) வழங்கப்பட்ட ஆடுகளை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, மற்றும் உடனடி தீவன செலவினத்திற்காக ரூ.2,500 வழங்கப்படும். ஆடுகள் நல்ல முறையில் பராமரித்து வருவோர்க்கு ஓராண்டுக்கு பிறகு ரூ.2,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
தகுதிகள்: இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பயனாளிகள் / குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் உள்ளவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், ஏற்கனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன்பெற்றவர்கள், கால்நடை வைத்திருப்போர் மற்றும் 100-க்கும் மேல் கோழியினம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பிக்கும் முறை: இத்திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் (Focus Block Development programme) செயல்படும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற நடப்பாண்டில் விரும்புவோர் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் மேற்கண்ட நிலையங்களில் உள்ள விண்ணப்ப உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.