Explained: குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நாடுகள்.. என்ன காரணம்? லிஸ்டில் தமிழ்நாடு!
Fertility Rates Explained: உலக நாடுகள் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளனர். இந்த லிஸ்டில் இந்தியாவும் இணைந்துள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதால், மாநில அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
India Fertility Rates Explained: உலக நாடுகளில் மக்கள் தொகை பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலை ஒருபுறம் இருந்தாலும், சில நாடுகள் குழந்தை பிறப்பை ஊக்குவித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், குறைந்து வரும் பிறப்பு விகிதமும், வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள் தொகையும் தான். ஒரு நாட்டின் மக்கள் தொகையில் முதியோர், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் சமநிலையில் இருக்க வேண்டும்.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் தொகையில் சமநிலையின்மை இருந்து வருகிறது. அதாவது, இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இதனால், குழந்தை பிறப்பை பல நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நாடுகள்
சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. இதனால், குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் லாரன்ஸ் வாங் மாபெரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன்படி,
- சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக் 17 வயது ஆகும் வரை சுமார் ரூ.53 லட்சம் பல்வேறு கட்டங்களாக நிதியுதவி வழங்கப்படும்.
- இதில் குழந்தை பிறந்தவுடன் கைச்செலவாக ரூ.7 லட்சமும் தொகையும், அதன்பிறகு வருடந்தோறும் ரூ.1.50 லட்சம் வழங்கப்படும்.
- பெற்றோருக்கு கூடுதல் விடுமுறை, சொந்த வீடு வாங்குவதற்கான சலுகைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
சீனா
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல திட்டத்தை 2025ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அதன்படி,
- சீனாவில் பிறந்த குழந்தைக்கு 3 வயது வரை ஆண்டுதோறும் ரூ.1.30 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கர்ப்ப காலத்தில் மருத்துவ செலவை குறைக்க ஐவிஎஃப் போன்ற செயற்கை கருத்தரிப்புக்கான செலவை அரசே ஏற்கிறது.
- மேலும், குழந்தைகளின் பள்ளிக் கல்வி செலவையும் அரசே ஏற்பதாக தகவல்
தென்கொரியா
தென் கொரியா, உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடாக இருக்கிறது. இதனால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல பில்லியன் டாலர்களை செலவிட்டு வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு, பெற்றோருக்கு மாதாந்திர உதவித்தொகை, குழந்தை பிறப்புக்கான நேரடி நிதியுதவி போன்றவற்றை வழங்கி வருகிறது. அதன்படி,
- குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ரூ.1.38 லட்சம் வழங்கப்படுகிறது.
- அதன்பிறகு, குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.48,507 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
- குழந்தைக்கு 2 வயது நிறைவடையும் வரை, பெற்றோருக்கு மாதந்தோறும் ரூ.24,253 உதவித்தொகை வழங்கப்படுகிறது
- தென் கொரியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்கள் குழந்தை பெற்றெடுத்தால் ரூ. 1 கோடி வரை பரிசுத்தொகை வழங்குகிறது.
- கர்ப்பிணிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு.
இந்தியாவில் என்ன நிலை?
உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இருப்பனும், இந்தியா மக்கள் தொகையில் சமநிலையின்மை இருக்கிறது. வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து இருப்பது, தென் மாநிலங்கள் மக்கள் தொகை குறைவாக இருப்பது முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்கியது. தற்போது அதே தென் மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து, குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது.
தென் மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம்
| மாநிலம் | கருவுறுதல் விகிதம் |
| தமிழ்நாடு | 1.3 ஆக பதிவு |
| கேரளா | 1.3 ஆக பதிவு |
| ஆந்திரா | 1.4 ஆக பதிவு |
| தெலங்கானா | 1.5 ஆக பதிவு |
| கர்நாடகா | 1.5 ஆக பதிவு |
2020 முதல் தற்போது வரை தென்மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் கேரளாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.5-லிருந்து 1.3 ஆகக் குறைந்தது. ஆந்திரப் பிரதேசத்தின் விகிதம் 1.5-லிருந்து 1.4 ஆகக் குறைந்தது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் முழுவதும் 1.3 முதல் 1.5 வரையிலான வரம்பிலேயே நீடித்தது.
முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்
இப்படியாக சென்றால், தென் மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கம். தரவுகளின்படி, 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கேளராவில் 2021ஆம் ஆண்டு 16.5 சதவீதமாக இருக்கின்றனர். இவை 2036ஆம் ஆண்டுக்குள் 22.8 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதியோர்களின் பங்கு 13.7 சதவீதத்திலிருந்து 20.8 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், ஆந்திரப் பிரதேசத்தில் இது 12.3 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதியவர்களின் பங்கு 10.1 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரா, தமிழ்நாடு திட்டங்கள்
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு, ஆந்திர அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. அதன்படி, ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இரண்டாவது குழந்தைக்கு ரூ.25,000, மூன்றாவது குழந்தைக்கு ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தைக்கு ரூ.40,000 ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய், பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்காக ஓராண்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இப்படியாக, தென்மாநிலங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
குழந்தை பிறப்பை ஊக்குவிக்க என்ன காரணம்?
இந்தியா, தென்கொரிய உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பை ஊக்குவித்து வருகின்றன. இதன் முக்கிய காரணமாக, இளம் வயதினரை விட 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே. குழந்தை பிறப்பு விகிதம் குறையும்போது, 20 முதல் 30 ஆண்டுகளுக்கு பிறகு வேலைசெய்யும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறையும்.
இது தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்கள், அதிக எண்ணிக்கையிலான முதியோர்கள் இருப்பது ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற செலவுகளை அதிகரிக்கும். தொடர்ந்து பிறப்பு விகிதம் குறைந்தால், ஒரு கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கள் தொகையே குறையத் தொடங்கும். இது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
பணம் கொடுத்தால் பிறப்பு விகிதம் அதிகரிக்குமா?
குழந்தை பிறப்பை ஊக்குவிக்க பல நாடுகள் பணம் வழங்குகின்றன. இது உண்மையிலே பிறப்பு விகிதத்தை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய காலத்தில் விலைவாசி உயர்வு, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுகின்றன. அப்படியாக இருந்தாலும், ஒரு குழந்தையிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் பராமரிப்பு, செலவு, வேலை நேரம் போன்றவை காரணங்களாக உள்ளன. இதனால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பணம் கொடுப்பது மட்டுமே தீர்வாக இருக்காது. வீட்டு வசதி, வேலை நேரம், குழந்தை பராமரிப்பு, குடும்ப வாழ்க்கைக்கான போன்ற நேரமும் பிரச்னைகளாக இருக்கின்றன.
இருப்பினும், குழந்தை வளர்ப்பின் பொருளாதார சுமையை அரசு அதிகமாக பகிர்ந்து கொள்வது குழந்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு நிச்சயமாக ஒரு ஆதரவாக அமையும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.