Thiruparankundram Deepathoon Update: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 15ம் தேதி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் முதலாம் படை வீடாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுற தொடர்ந்து வரும் நிலையில், இந்தாண்டு முதல்முறையாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் தூணில் ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அன்றைய தினம் மாலை வழக்கம்போல் உச்சிப்பிள்ளையில் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி, நவம்பர் 28ஆம் தேதி திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. இந்த நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை காண ஆயிரக்கணக்ன பக்தர்கள் வருகை தந்தனர்.
#WATCH | Madurai, Tamil Nadu: The ceremonial Karthigai Deepam is lit at the Deepathoon stone pillar at Thiruparankundram Hill following the Supreme Court's verdict under the supervision of retired High Court judges Justice S. Vaidyanathan and Justice V. Parthiban. https://t.co/Qpy6kHfVPj
— ANI (@ANI) November 28, 2026
நேற்று தீபம் ஏற்றப்பட்டபோது, பாதுகாப்பு படையினருடன் உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் மட்டுமே மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால், மலையில் தீபம் ஏற்றுவதை பார்வையிட வேண்டும் என நேற்று இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சிஆர்பிஎப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பக்தர்கள் திருப்பரங்குன்றத்தின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் நின்று தீபத்தை கண்டனர். நகரம் முழுவதும் மக்கள் மாடிகளில் இருந்து, உயரமான மேம்பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீபத்தை வணங்கினர்.
இந்த நிலையில், கோயில் நிர்வாக பொறுப்பாளர்களான ஓய்வுபெற்ற நீதிபதிகள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக (Receivers) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் (மேனாள் தலைமை நீதிபதி, மேகாலயா உயர்நீதிமன்றம்) மற்றும் வி. பார்த்திபன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) ஆகியோரது நேரடி மேற்பார்வையில், (28.11.2026) அன்று மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
மேலும், பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் 29.11.2026 முதல் 15.12.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம்-ஒழுங்கைப் பேணுவதற்கு முழு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.