மதுரைக்காரங்க கெத்துதான்! உலகளவில் பேமஸான மதுரையின் 6 அடையாளங்கள்
Madurai Famous Iconic Symbols: தூங்கா நகரமான மதுரையை உலகளவில் பிரபலமாக்கிய மீனாட்சி அம்மன் கோவில், மதுரை மல்லி, ஜிகர்தண்டா, சுங்குடி சேலை உள்ளிட்ட 6 முக்கிய அடையாளங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
Published: Aug 09, 2026, 04:40 PM IST
| Updated: Aug 09, 2026, 04:43 PM IST
Madurai Famous Iconic Symbols: தூங்கா நகரம், கூடல் நகர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பண்டைய நகரம்தான் மதுரை. வரலாற்றுத் தனித்துவம் வாய்ந்த இந்த நகரம் இன்றும் கலாச்சார விழுமியங்களால் உலகம் முழுவதும் அறியப்படும் நகரமாக உள்ளது.
இந்தளவிற்கு மதுரை மாநகரம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் மதுரையைத் தனித்து காட்டும் முதன்மையான 6 அடையாளங்கள் குறித்து இங்கு காணலாம்.
1. மீனாட்சி அம்மன் கோவில்
- உலக அதிசயங்களுக்கு நிகரான தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவை காரணமாக மீனாட்சியம்மன் கோவில் மிகவும் பிரபலமாகும்.
- பிரம்மாண்டமான 14 கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள், பொற்றாமரைக்குளம் ஆகியவை உலக நாடுகளில் இருந்தும், பயணிகளையும் வரலாற்று ஆய்வாளர்களையும் ஈர்க்கின்றன.
- மதுரை நகரின் மையப் புள்ளியாக இக்கோவில் விளங்குகிறது.
2. மதுரை மல்லி
- மதுரை மல்லி புவிசார் குறியீடு பெற்றதாகும். சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- தடிமனான இதழ்கள், தாமதமாக வாடும் தன்மை மற்றும் அலாதியான அடர்ந்த நறுமணம் கொண்டதால் மதுரை மல்லி பிரபலமானதாகும்.
- பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியங்களில் மதுரை மல்லியின் பங்கும் உண்டு.
3. ஜிகர்தண்டா
- மதுரையின் பாரம்பரியமிக்க பானம் ஜிகர்தண்டா. உருது மொழியில் 'ஜிகர்' என்றால் இதயம், 'தண்டா' என்றால் குளிர்ச்சி. இதயத்தை குளிர்விக்கும் பானம் என்பதால் இப்பெயர் பெற்றது.
- ஜிகர்தண்டாவில் காய்ச்சிய பால், பாதாம் பிசின், கடற்பாசி, நன்னாரி சர்பத் மற்றும் பிரத்யேக பேஸ் ஐஸ்கிரீம் சேர்க்கப்படும்.
- மதுரையின் வெயிலுக்கு இதமான பானமாகவும் இது விளங்குகிறது. இதன் தனித்துவமான சுவை சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றதாகும்.
4. சுங்குடி சேலை
- 400 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட கைகளால் Tie and Dye முறையில் நெய்யப்படும் பருத்திப் புடவைகளாகும்.
- சௌராஷ்டிர சமூக மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, மதுரையின் காலநிலைக்கு ஏற்ப இச்சேலைகள் தயாரிக்கப்படுகிறது.
- பெண்கள் மத்தியில் இன்னும் நற்பெயர் பெற்று விளங்குவதற்கு அதன் தனித்துவமான டிசைன்களும், நீடித்த உழைப்பும் முக்கிய காரணம்.
5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
- மதுரை என்றால் ஜல்லிக்கட்டு பெயர் பெற்றது என்றால், சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது என்றால் அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான்.
- தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான இது மதுரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வெளிநாட்டுச் சுற்றுலா ப யணிகள் பெருமளவில் கூடி ஜல்லிக்கட்டை பார்க்க வருகை தருவார்கள்.
- அலங்கநால்லூரை போலவே அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளும் புகழ்பெற்றவையாகும்.
6. பரோட்டாவும்... கறி தோசையும்...
- மதுரையில் கிடைக்கும் உணவுகளையும், அதன் ருசியையும் உங்களால் நிச்சயம் வேறு எங்கும் சுவைத்திட முடியாது.
- அதுவும் அசைவப் பிரியர்களின் சொர்க்கபுரி என மதுரையை அழைக்கலாம். பஞ்சு போன்ற பரோட்டா, பல விதங்களில் காரசாரமான சால்னா ஆகியவை மதுரையில் மிக மிக பேமஸ்.
- மட்டன் வகைகளில் மதுரைக்காரர்களை அடித்துக்கொள்ளவே முடியாது. கறிதோசை தொடங்கி மட்டன் சுக்கா, தலைக்கறி ரோஸ்ட், குடல் ப்ரை, சுவரொட்டி என எண்ணற்ற உணவுகள் உள்ளன.
- நீங்கள் எந்த கடையில் சாப்பிட்டாலும் பெரியளவில் அதிருப்தி அடைய மாட்டீர்கள். அயிரை மீன் குழம்பும் மதுரையில் பேமஸ்.