தடயமே இல்லாமல் திருடியது எப்படி? மீனாட்சி சிக்கியது எப்படி? காவல்துறை போட்ட வீடியோ
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்த் எப்படி கொள்ளையடித்தார்...? யூ-ட்யூபர் மீனாட்சி சிக்கியது எப்படி...? உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு காவல்துறை விரிவாக வீடியோ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Madurai Tanishq Jewelry Robbery Case Updates: மதுரை பைபாஸ் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட டாடா நிறுவனத்தின் தனிஷ்க் ஜுவல்லரி உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி அன்று அதிகாலை தமிழ்நாட்டையே அதிரவைக்குமளவிற்கு பெரும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளைப் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 15 கிலோ தங்க, வைர நகைகள் திருடுபோனதாக தெரிவிக்கப்பட்டது. 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு நேற்று (நவ. 14) இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
நிஷாந்தை தேடி வரும் காவல்துறை
மதுரையின் பிரபல சமூக வலைதள பிரபலம் மீனாட்சி என்ற பெண்ணும், அவரது தோழனும் மற்றொரு சமூக வலைதள பிரபலமான நிஷாந்த் கிருஷ்ணா என்பவரும் இணைந்துதான் நகைக்கடையில் திருட்டுச் சம்பவத்தை நிகழ்த்தியதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள நிஷாந்த் கிருஷ்ணாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறையின் பதிவு
அந்த வகையில், தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு காவல்துறை அவர்களின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வீடியோ உடன் கூடிய ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில், "மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட ஐந்துரை கிலோ நகைகளும் மீட்கப்பட்டன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட வீடியோ
தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட 2 நிமிட வீடியோவில் பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், "மதுரை மாநகரில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடையின் மேலாளர், எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் தங்களது நகைக்கடையில் நகைகள் கொள்ளை போய்விட்டதாகக் கொடுத்த புகாரின் பேரில், மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில், தெற்கு மாவட்ட காவல் துறை ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும் படிக்க | விஜய் ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளது - செல்லூர் ராஜூ
தடயமே இல்லாமல் திருடிய நிஷாந்த்
கொள்ளை சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், தொலைபேசி அழைப்புகள் சம்பந்தமாக ஆய்வு செய்ததில், வழக்கின் எதிரி (நிஷாந்த்) கொள்ளை சம்பவத்திற்கு முன்பு மூன்று தினங்கள் வாடிக்கையாளர் போல் வந்து நோட்டமிட்டும், பின்னர் நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை ஏற்கெனவே நோட்டமிட்டுச் செந்றபடி லிஃப்ட் வழியாக தனிஷ்க் ஜுவல்லரிக்குள் இறங்கி எவ்வித தடயமும் இல்லாதவாறு கையுறை மற்றும் முகமூடி அணிந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
2 பேரும் பிடிபட்டது எப்படி?
கொள்ளை சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகனம், கண்காணிப்பு கேமராக்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை செய்ததில், எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும், அவருக்கு உடந்தையாக நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் அவரது தோழி மீனாட்சி என்பவரும் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
ஐந்தரை கிலோ தங்கம் பறிமுதல்
மீனாட்சி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் ஐந்தரை கிலோ கைப்பற்றப்பட்டு, நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள நிஷாந்தை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்க தனிப்படையினரால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
மீனாட்சிக்காக நடந்த கொள்ளை...?
இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ தகவல்களாகும். அதேநேரத்தில் பல்வேறு தகவல்களும் வெளியாகி உள்ளன. நிஷாந்த் தனது தோழி மீனாட்சியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என விசாரணையில் அம்பலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
யூடியூபர் மீனாட்சிக்கும், நிஷாந்த் என்பவருக்கும் நல்ல நட்பு இருந்துள்ளது. மீனாட்சி புதிய வீடு கட்டிவரும் நிலையில், அதிகளவு பணம் தேவைப்பட்டதாலும், கடன்கள் இருந்ததாலும் நிஷாந்திடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என கூறப்படுகிறது.
இதையடுத்து, பணத்திற்காக நகைக்கடையில் கொள்ளையடிக்க இருவரும் திட்டம் தீட்டியதாகவும், அதன்படி கொள்ளையடிக்க உதவியாக தனது பைக்கையும் மீனாட்சி நிஷாந்திடம் கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | ஆந்திரா முதலீடு : சந்திரபாபு நாயுடு கொடுத்த ஷாக் அப்டேட்