தவறாக நடக்க முயன்ற மகன்... கொன்று புதைத்த தாய் - 3 மாதங்களுக்கு முன் நடந்த கொடூரம்
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற மகனை கொன்று, 3 மாதத்திற்கு முன் வீட்டின் அருகே மகனின் உடலை புதைத்துவிட்டதாக பெண்மணி சரண்டர் ஆகி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை மீண்டும் தோண்டி எடுக்க முடிவெடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி அய்யம்மாள். 50 வயதான இவருக்கு கணவன் இல்லை. கணவன் உயிரிழந்த நிலையில் தனது மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார்.
ராஜாவுக்கு திருமணமாகி மனைவியை பிரிந்துவிட்டார். தாய் அய்யம்மாளும், மகன் ராஜாவும் தனியே வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் (ஆக. 27) அய்யம்மாள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று தனது மகனை கொன்று விட்டதாக கூற, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஏஓ அளித்த புகார்
உடனே கிராம நிர்வாக அலுவலர் சரவணன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். விஏஓ அளித்த புகாரின் அடிப்படையில், கருப்பாயூரணி காவல்துறையினர் அய்யம்மாளை காவல்நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர்.
நடந்தது என்ன?
அப்போது காவல்துறையினரிடம் அளித்த அய்யம்மாள் அளித்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த 3 மாதத்திற்கு முன்பு தனது மகன் ராஜா மது போதையில் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்து தகராறு செய்து ஆபாசமாக பேசி தாக்கியதோடு தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அய்யம்மாள் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், மகன் ராஜா தொடர்ந்து தன்னை தாக்க முயன்றபோது மதுபோதையில் இருந்த மகன் ராஜாவை கீழே தள்ளிவிட்டுள்ளார் என்றும்; கீழே கிடந்த கம்பியை எடுத்து அவனது தலை, கை மற்றும் உடல் முழுவதும் மாறி மாறி அடித்து கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
வீட்டின் அருகே புதைத்த அய்யம்மாள்
தனது வீட்டில் பாத்ரூம் கட்டுவதற்காக வீட்டின் இடதுபுற வாசல் அருகே ஏற்கெனவே குழிதோண்டப்பட்டதாக தெரிவித்த அய்யம்மாள், அந்த குழியில் தனது மகன் ராஜாவின் உடலை புதைத்து மூடி அதன் மீது விறகுக்கட்டைகளை வைத்து மறைத்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.
உடலை தோண்டி எடுக்க முடிவு
மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அவரது வீட்டு வாசலில் இருந்த மகனின் ரத்தத்தை தண்ணீர் ஊத்தி கழுவி விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறையினர் அய்யம்மாளை அவரது வீட்டிற்கு அழைத்துசென்று, கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் சென்று சம்பவத இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில் ராஜாவை புதைத்த இடத்தில் இன்று (ஆக. 28) உடலை வருவாய்துறை அதிகாரிகள் முன்பு உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனை கொன்றதாக கூறிய அய்யம்மாள் சில நாட்களாக அண்டை வீட்டாரிடம் தனக்கு மகன் இல்லை எனவும் புலம்பிவந்துள்ளார். இந்த விவகாரம் ஊர் முழுக்க தெரிய வந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அய்யம்மாள் தனது மகனை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.