Vinodhini Swetha Video : தமிழ் மற்றும் மலையாள திரையுலகில், மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர், வினோதினி ஸ்வேதா. இவர், தமிழில் பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திராவின் ‘மறுபடியும்’ படத்திலும், கே.எஸ்.ரவிகுமாரின் ‘சூரியன் சந்திரன்’ போன்ற திரைப்படங்களிலும் வினோதினி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் அதிகமாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்திற்கு பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
சென்னையில், உடலுக்கு மசாஜ் செய்து ரிலாக்ஸ் செய்யும் நிறைய ஸ்பாக்கள் இருக்கின்றன. இங்கு, உங்கள் உடலுக்கு மசாஜ் செய்ய ஒருவர் நியமிக்கப்பட்டு, நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்றவாறு எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அவ்வளவு நேரம் மசாஜ் செய்வார்கள். அப்படி, சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஸ்பாவிற்கு நடிகை வினேதினி ஸ்வேதா சென்றிருக்கிறார். அப்போது தனக்கு நேர்ந்த விஷயத்தை வீடியோவாக அவர் வெளியிட்டிருக்கிறார்.
அந்த பிரபலமான ஸ்பாவின் பெயரை குறிப்பிட்டு பேசத்தொடங்கிய அவர், 2-3 மாதங்களாக சோகமான மனநிலையில் இருந்ததால், தான் ஸ்பாவிற்கு போகலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றதாகவும், மசாஜ் செய்து கொண்டிருந்த போது மசாஜ் செய்பவர் “கழுத்துக்கு மசாஜ் செய்ய வேண்டும் உங்கள் தாலி செயினை கழற்ற வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இவரும் அதை கழற்றி காெடுத்தவுடன், அவர் ஒரு டப்பாவில் அந்த செயினை போட்டிருக்கிறார்.
மசாஜ் முடிந்த பிறகு தூக்க மனநிலைக்கு சென்றதாக கூறிய வினோதினி, அந்த செயினை அங்கேயே மறந்து வந்து விட்டதாகவும், அதன் பிறகு தான் ஒரு துக்க நிகழ்விற்கு சென்றதால் தாலி செயின் குறித்து மறந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தான் ஸ்பாவை விட்டு கீழே இறங்கி வரும் போது அவர்கள் தட்டில் வைத்து தன்னுடைய செருப்பை எடுத்து கொடுத்ததாகவும், தட்டில் செருப்பை வைத்து கொடுத்தவர்கள், டப்பாவில் போட்ட செயினை எடுத்துக் கொடுக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தது வெள்ளியன்று என்றும், தனக்கு ஞாயிற்றுக்கிழமையன்று நினைவிற்கு வந்து அடிச்சு புடிச்சு போய் கேட்டால், “சாரி..எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. எங்களுடைய வேலையாள்தான் அந்த டப்பாவில் தாலி செயினை போட்டார்கள், ஆனா இப்போது அதை காணும்” என்று கூறுவதாக தெரிவித்தார்.
2 மாதத்திற்கு பிறகு, சாேகத்தில் இருந்து வெளியில் வந்து, மகிழ்ச்சியாக ஒரு விஷயத்தை செய்து கொள்ளலாம் என்று பார்த்தால், இன்னும் ஓவர் சோகமாயிடுச்சே என்று யோசித்ததாக வினோதினி தன்னுடைய வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார். மேலும், இது குறித்து தான் போலீஸில் புகார் அளித்ததாகவும், தன்னுடைய தாலி திரும்ப கிடைத்து விடும் என நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த பதிவை, தான் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பதிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், இது பாேல ஸ்பாவிற்கு செல்பவர்கள் எந்த விலை அதிகமான பொருட்களையும் கொண்டு போக வேண்டாம் என்றும், அவர்கள் இது போன்ற ஒரு விஷயத்தை செய்வார்கள் என்று நினைக்கவே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
கூடவே, ஸ்பாவின் முதலாளி தனக்கு கால் செய்து தாலி காணாமல் பாேன பின்பு ஏன் சொல்லவில்லை, மறு நாளே ஏன் வரவில்லை என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதாகவும் தெரிவித்தார். இத்தனையும் அவர்கள் பேசினாலும், தன்னுடைய தாலியை டப்பாவில் அவர்களுடைய வேலையாள் போட்டதாகவும் இப்போது அந்த தாலியை காணும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதை தான் சிரித்துக்கொண்டே கூறினாலும் அது தனக்கு செண்டிமெண்டான ஒரு விஷயம் என்றும், அது திரும்ப கிடைக்க அனைவரும் தனக்காக வேண்டிக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.