90களில் மிஸ் சென்னை பட்டம் பெற்று, மாடலாக உருவெடுத்து, இப்போது தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் முக்கிய நடிகையாக உருவாகி இருப்பவர், த்ரிஷா. இவர், எவ்வளவுதான் அமைதியாக இருந்தாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் இவருடைய பெயர் அடிப்பட்டு விடுகிறது. அப்படி அவருடைய பெயர் இடம் பெற்ற சர்ச்சைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
எத்தனையோ நடிகர்-நடிகைகள், தாங்கள் சினிமாவில் வளர்ந்த பிறகு அரசியலில் தனி இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் கருத்துகளை பேசுவதையும் அதன் பிறகு சர்ச்சையில் சிக்கிக்கொள்வதையும் பார்த்திருப்போம். ஆனால், த்ரிஷா எப்போதும் அரசியல் குறித்து எங்கேயும் வாயை திறந்ததே கிடையாது. “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே..” என்பது போல, தனக்குரிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி வரும் த்ரிஷாவின் பெயரை, கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக அரசியல் விழாக்களில் கேட்க முடிவதை கவனித்தீர்களா?
இதற்கு, அவர் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கிறார் என்கிற ஒரே காரணம் மட்டும்தானா? என்கிற எண்ணம் நம் அனைவருக்கும் எழலாம். முதல்வர் விஜய் குறித்து மைக்கை நீட்டினாலே, “ப்ளீீஸ் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு போகும் த்ரிஷா, தற்போது அரசியல் மயமாக்கப்படுவது ஏன்? என்கிற கேள்வி அனைவருக்குள்ளும் இருந்து வருகிறது.
சமீபத்தில், தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி நதி நீர் குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கீழே இருந்த தாெண்டர்கள் ‘த்ரிஷா..த்ரிஷா..’ என்று கத்த, அதற்கு உதயநிதி ஒரு கமெண்டை போட, அதற்காக அவர் மறு நாளே 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்டம் படித்தவர்கள், ‘இதுக்காகவெல்லாம் கைது நடவடிக்கை தேவையற்றது’ என்று விமர்சிக்க, அரசியல் விமர்சகர்கள் ஒரு பக்கம் ‘முதல்வரை கிழி கிழின்னு கிழிச்சாரு..அதுக்கெல்லாம் ஒன்னும் சொல்லாம, த்ரிஷாவை பற்றி பேசுனதுக்கு அரெஸ்ட் பண்ணியிருக்காங்க’ என்று கூறி வந்தனர்.
நயினார் நாகேந்திரனும், இதே போல ஒரு சர்ச்சையில் சிக்கினார். “விஜய் முதலில் த்ரிஷா வீட்டிலிருந்து வெளியில் வர வேண்டும்” என்று அவர் சொன்னது பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்தது. இதே போல, அதிமுக பிரமுகரான ஏவி ராஜு, த்ரிஷா குறித்து மிகவும் தரக்குறைவாக 2024ல் பேசியிருந்த விஷயமும் பெரும் சர்ச்சைகளுக்கு வழி வகுத்தது.
நடிகை த்ரிஷா, அரசியல் சர்ச்சைகள் மட்டுமல்லாது பல்வேறு பிற சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். இதில் முக்கியமாக PETA அமைப்பின் மீது அனைவருக்கும் வெறுப்பு இருந்தது. அப்போது த்ரிஷா அந்த அமைப்பின் ஒரு முக்கிய நபராக இருந்தார். இந்த அமைப்பின் ஒரு விளம்பர படத்தில் அவர் நடித்து கொடுத்தார். இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் அவரை கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேசினர். அவர் அந்த அமைப்பிற்கு ஆதரவாக பதிவிட்டதாக ஒரு பதிவும் வைரலானது. ஆனால், பின்னர் தன் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அது பதிவிடப்பட்டதாக த்ரிஷா விளக்கமளித்தார். தொடர்ந்து அந்த சர்ச்சை ஓயாததால் த்ரிஷா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களையே முடக்கி விட்டார்.
மன்சூர் அலிகான், லியோ பட விழா மேடையில் பேசியது, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ‘குந்தவை வீட்டிலேயே குந்தினால் நன்றாக இருக்கும்’ என்று பேசியது உள்ளிட்ட பல சர்ச்சைகள் இப்போது வரை பேசப்படும் ஒன்றாக இருக்கின்றன.
மேற்கூறிய இந்த சர்ச்சைகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது, நடிகை த்ரிஷா அரசியலுக்கு வருவாரா? என்கிற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. காரணம், இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் பெரும் ஆளுமைகளுள் ஒருவராக இருந்தவர் ஜெயலலிதா. அவர், அரசியலுக்கு வரும் முன்னும் இது போல அவரை சுற்றி பல வித சர்ச்சைகள் இருந்தது. இதனாலேயே பல இடங்களில் அவர் அனுதாப ஓட்டுகளையும் பெற்றுள்ளார். இதனால், த்ரிஷாவும் இந்த வாய்ப்பை பயன்படுத்துக்கொள்வாரா? என்கிற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.