OBC இடஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் திட்டம் - பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு
ஓபிசி சமூகத்தின் இடஒதுக்கீட்டை பறித்து, அதை இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் மோடி அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.
PM Modi op-ed on Constitution Day 2026: நாட்டின் அரசியலமைப்பு சபையால் கடந்த 1949ஆம் ஆண்டிலே இதே நாளில்தான் (நவ. 26) அரசியலமைப்புசட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 26ஆம் தேதி அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், 'அரசியலமைப்பு - நமது வழிகாட்டும் சக்தி' என்ற பெயரில் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சாடியிருந்தார், அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தார்.
எதிர்க்கட்சிகள் ஓபிசி சமூகத்தின் இடஒதுக்கீட்டை பறித்து, அதை இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய முயற்சிப்பதாகவும் அதை சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் மறுத்திருக்கிறார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
அதில், "எதிர்க்கட்சிகளின் தரப்பில் உள்ள மிகப்பெரிய கட்சியானது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (OBC) இட ஒதுக்கீட்டைக் குறைத்து, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர விரும்புவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உள்பட நமது அரசியலமைப்பை கட்டமைத்தவர்கள் இதை முற்றிலுமாக எதிர்த்தனர்" என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் பிரதமர் எந்த கட்சி என குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் மிகப்பெரிய கட்சியாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். எனவே அவர் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக சாடியிருக்கிறார் என தெரிகிறது.
'அரசியலமைப்பு விழுமியங்களுக்கு அவமதிப்பு'
அதேநேரத்தில், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் போக்கை எதிர்க்கட்சியினர் கடைபிடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், ஜனநாயக செயல்முறைகளை சீர்குலைப்பது என்பது அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு மாற்றாக அமையாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தாண்டு மக்களவையில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்ததை குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதன்மூலம் எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான தனது அவமதிப்பை மீண்டும் ஒரு வெளிப்படுத்தியுள்ளன என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் மீது சாடிய பிரதமர்
அதேநேரத்தில், இந்தியாவின் பெண் சக்திக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதில் இருந்து எந்த சக்தியாலும் எங்களைத் தடுக்க முடியாது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். சுதந்திர இந்தியாவை 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் வாய்ப்பைப் பெற்றவர்கள் அரசியலமைப்பை பலவீனப்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
1951ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதல் அரசியலமைப்புத் திருத்தம் என்பது, முதல் பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால நாடாளுமன்றத்தால் செய்யப்பட்டது என பிரதமர் மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.
அதேநேரத்தில், முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு 75 ஆண்டுகளாகிவிட்டதாகவும், எமர்ஜென்சி காலகட்டத்தில் நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தை கட்டுப்படுத்திய 42வது சட்டத்திருத்தம் செய்து 50 ஆண்டுகளாகிவிட்டதாகவும், பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைக்க 356வது சட்டப்பிரிவு மீண்டும் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு கட்சி இந்த சட்டப்பிரிவை சுமார் 100 முறை பயன்டுத்தியிருப்பதாகவும், அதிலும் முன்னாள் பிரதமர் ஒருவர் இந்த விவகாரத்தில் அரைசதம் அடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் மற்றும் இந்திரா காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு சாடி உள்ளார்.
இளைஞர்களுக்கு பிரதமர் வைத்த வேண்டுகோள்
இளைஞர்கள் 38வது மற்றும் 39வது அரசியலமைப்புத் திருத்தங்களைப் படிக்க வேண்டும் என்றும்; அதிகாரப் பேராசை கொண்ட அரசியலமைப்புக்கு எதிரான தலைமைத்துவம் என்ன செய்ய முடியும் என்பதை அதன்மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியலமைப்பை நமது வாழ்க்கைப் பயணத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக, விவரித்த பிரதமர் மோடி, தனது எளிய பொருளாதாரப் பின்னணி கொண்ட பருவத்தையும் நினைவுக்கூர்ந்தார். "ஒருவர் பிறக்கும் சூழ்நிலைகள், அவரது எதிர்காலத்தின் எல்லைகளைத் தீர்மானிப்பதில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.