Cordelia Cruise : நடுக்கடலில் நகரும் தீவு! கார்டெலியா சொகுசு கப்பல் பிரம்மாண்ட சிறப்பம்சங்கள்
Cordelia Sky Cruise: நடுக்கடலில் மிதக்கும் நகரமாகவே இருக்கும் கார்டெலியா ஸ்கை சொகுசு கப்பல் குறித்த முழு சிறப்பம்சங்கள் மற்றும் பயண விவரங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Cordelia Sky Cruise: இந்தியாவின் முன்னணி சொகுசு கப்பல் நிறுவனமான கார்டெலியா க்ரூஸஸ், தன்னுடைய புதிய பிரம்மாண்ட சொகுசுக் கப்பலான கார்டெலியா ஸ்கை (Cordelia Sky)-யை அறிமுகம் செய்து கடல் பயண விரும்பிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. மும்பை மஹாலக்ஷ்மி ரேஸ்கோர்ஸில் நடைபெற்ற அறிமுக விழாவில், தொழில் துறை முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வானில் 1,500 ட்ரோன்கள் வண்ண விளக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்தியக் கலாச்சாரத்தையும் கார்டெலியா ஸ்கை கப்பலின் வடிவத்தையும் வானில் வரைந்து காட்டிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த 5 ஆண்டுகளாக ஒரேயொரு கப்பலை வைத்துச் சேவை ஆற்றிவந்த அந்நிறுவனம், தற்போது இரட்டைக் கப்பல் கொண்ட பலமான நிறுவனமாகப் பரிணமித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு சொகுசுக் கப்பல் சேவையைத் தொடங்கி, இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரித்துள்ளது கார்டெலியா. இந்நிலையில், கார்டெலியா ஸ்கை இணைந்ததன் மூலம் நிறுவனத்தின் பயணிகள் கையாளும் திறன் சுமார் 126 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே உள்ள கார்டெலியா எம்பிரஸ் மற்றும் புதிய 'ர்டெலியா ஸ்கை என இரண்டு கப்பல்களையும் சேர்த்தால் மொத்தம் 1,798 தங்கும் அறைகள் உள்ளன, ஒரே நேரத்தில் 3,596 பயணிகள் கடல் வலம் வர முடியும். இதுமட்டுமல்லாமல், 2027 நவம்பரில் தங்களது மூன்றாவது கப்பலான கார்டெலியா சன் கடலில் இறக்கப்படும் என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜூர்கன் பைலோம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கார்டெலியா ஸ்கை: பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட சிறப்பம்சங்கள்
படகு என்றோ கப்பல் என்றோ சாதாரணமாகச் சொல்லிவிட முடியாத அளவுக்குப் பல நவீன வசதிகளுடன் கூடிய நகரும் தீவாக இது உருவாக்கப்பட்டுள்ளது:
நீளம் மற்றும் எடை: இக்கப்பல் 258 மீட்டர் நீளமும், 77,104 மெட்ரிக் டன் மொத்த எடையும் கொண்டது.
பயணிகள் வசதி: ஒரே நேரத்தில் டபுள் ஆக்குபன்சி முறையில் 2,004 விருந்தினர்கள் இதில் பயணிக்க முடியும்.
தங்கும் அறைகள்: 245 மினி சூட்கள் உட்பட மொத்தம் 1,002 சொகுசு தங்கும் அறைகள் உள்ளன.
உணவு, கேளிக்கை: நாவூறும் உணவுகளை ருசிக்க 10 உணவகங்கள் மற்றும் மாலையைக் கழிக்க 11 பிரத்யேக பார் மற்றும் லவுஞ்ச் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தியேட்டர்: கண்கவர் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க 930 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட 'மார்கி தியேட்டர்' உள்ளது.
நீச்சல் குளங்கள் திறந்தவெளி: இதமான குளியலுக்கு 2 நீச்சல் குளங்கள், 5 ஹாட் டப்கள் மற்றும் வெயிலை ரசித்து ஓய்வெடுக்க 30 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான திறந்தவெளி டெக் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கப்பலுக்குள் கிடைக்கும் ராஜபோக அனுபவங்கள்
இந்தியப் பயணிகளின் ரசனை, உணவு விருப்பங்கள் மற்றும் கலாச்சாரத் தேவைகளை மனதில் வைத்தே கார்டெலியா ஸ்கை செதுக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகளுடன் சேர்த்து, பாரம்பரிய இந்திய உணவுகள், இத்தாலிய உணவுகள் மற்றும் பல்வேறு சர்வதேச வகை உணவுகளும் தயார் செய்யப்படுகின்றன. குறிப்பாக, சைவ உணவுப் பிரியர்களுக்கும் ஜெயின் சமூகத்தினருக்கும் எந்தவித சமரசமும் இல்லாத பிரத்யேக தூய சைவ உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கூடம், ஆரோக்கிய ஸ்பா, விளையாட்டு அரங்கம், குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்குமான விளையாட்டுக் கூடங்கள் மற்றும் மேடை நாடகங்கள் எனப் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமே இல்லாத வகையில் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.
எந்தெந்த ஊர்களுக்குப் பயணம்?
கார்டெலியா ஸ்கை கப்பலின் முதல் வணிகப் பயணம் வரும் 2026 அக்டோபர் 23 அன்று மும்பையிலிருந்து கோலாகலமாகத் தொடங்குகிறது.
குறுகிய கால வீக் எண்ட் ட்ரிப்: நடுக்கடலில் இயற்கையை ரசித்து 2 இரவுகள் மட்டும் தங்கிவிட்டு வரும் 2 Night at Sea பேக்கேஜ்.
கோவா, லட்சத்தீவு ட்ரிப்: மும்பையிலிருந்து கோவாவிற்கு 3 இரவுகள் பயணம், அழகிய லட்சத்தீவுக்கு 4 இரவுகள் பயணம், மேலும் கோவா மற்றும் லட்சத்தீவு இரண்டையும் இணைக்கும் 5 இரவுகள் கொண்ட விரிவான டூர் பேக்கேஜ்.
சென்னையிலிருந்து வெளிநாட்டுப் பயணம்: தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சியூட்டும் வகையில், சென்னையிலிருந்து புறப்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் 7 இரவுகள் சர்வதேசப் பயணம் அறிமுகமாகிறது. இதில் தாய்லாந்தின் ஃபூகெட், மலேசியாவின் லங்காவி, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய புகழ்பெற்ற தீவுகளையும் நகரங்களையும் கப்பலிலேயே சென்று சுற்றிப் பார்த்து வரலாம்.
தென்னிந்திய மக்களின் புதிய மையமாக மாறும் கொச்சி துறைமுகம்
கார்டெலியா ஸ்கை மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கத் தொடங்கும் அதேவேளையில், கார்டெலியா க்ரூஸஸின் முதல் கப்பலான கார்டெலியா எம்பிரஸ் தனது தளத்தைக் கொச்சிக்கு மாற்றுகிறது. இதன் சேவைகள் 2026 அக்டோபர் 25 முதல் கொச்சியிலிருந்து புறப்படும். இதன் மூலம் கேரளா மற்றும் தென் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் எளிதாகக் கப்பல் பயணத்தை மேற்கொள்ளலாம். கொச்சியிலிருந்து லட்சத்தீவின் புதிய தீவுகளான மினிகாய் மற்றும் கவரத்தி பகுதிகளுக்கும், வார இறுதி குறுகிய பயணங்களுக்கும், சர்வதேச வழித்தடங்களுக்கும் கார்டெலியா எம்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
விமானப் பயணங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய நடுத்தரக் குடும்பங்களுக்கும், குடும்பத்துடன் புதுவிதமான விடுமுறையைக் கழிக்க நினைப்பவர்களுக்கும் நடுக்கடலில் சொகுசு வாழ்க்கை வாழ கார்டெலியாவின் இந்த இரட்டைக் கப்பல் வரவு புதிய கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.