டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained
Delhi JMISU Protest Explained: டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் போராட்டத்தின் பின்னணி என்ன? மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன? உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு விரிவாக அலசலாம்.
Delhi Jamia Millia Islamia University Protest Explained: டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அனைத்துப் பாடப்பிரிவுகளுக்குமான வகுப்புகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் இன்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
மாணவர் சங்கத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையில் தொடங்கிய போராட்டம் தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டத்தின் பின்னணி என்ன? மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன? வகுப்புகள் எப்போது மீண்டும் நேரடியாக நடைபெறும்? விரிவாகப் பார்க்கலாம்.
ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன பிரச்னை?
டெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா மத்திய அரசுப் பல்கலைக்கழகமாகும். இங்கு மாணவர் சங்கத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்பது மாணவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் சங்கம் (JMISU) கடந்த 2006ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அப்போது வளாகத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் தற்போது மாணவர் சங்கத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், அக்டோபர் 12ஆம் தேதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் சங்கத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, ஐந்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினர்.
மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகள் என்ன?
மாணவர்கள் நிர்வாகத்திடம் முக்கியமாக மூன்று கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.
மாணவர் சங்கத் தேர்தல்: தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை ரத்து: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.
நிர்வாகப் பொறுப்பாளர்கள் மாற்றம்: பல்கலைக்கழகத்தின் தலைமைப் ப்ராக்டர் மற்றஉம் பாதுகாப்பு ஆலோசகரை நீக்க வேண்டும்.
அதாவது, மாணவர் பிரதிநிதித்துவம், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதான நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவை இந்த பிரச்னையின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
பாதுகாப்புப் பணியாளர்களுடன் மோதல் ஏற்பட்டது ஏன்?
பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்ற இன்று பாதுகாப்புப் பணியாளர்கள் முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பபட்டது.
இதனால் பாதிப்பு என்ன?
- இந்த சம்பவத்தை தொடர்ந்து வளாகத்தில் பதற்றம் அதிகரித்தது. போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்த சூழலில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து பாடப்பிரிவுகளின் வகுப்புகளை ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது.
- மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என பல்கலைக்கழகப் பதிவாளர் தரப்பில் இன்று தெரிவித்துள்ளது. பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் தொடர்ந்து கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இதனால், நேரடி வகுப்புகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இன்னும் குறிப்பிட்ட தேதியை அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள் தங்களது துறைகளின் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.
அரசியல் சர்ச்சையாக மாறிய போராட்டம்
- இந்தப் போராட்டம் மாணவர் சங்கத் தேர்தல் கோரிக்கையுடன் மட்டும் நின்றுவிடாமல் அரசியல் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.
- பல்கலைக்கழக வாலகத்தில் காஷ்மீர் தொடர்பான வாசகங்கள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின. அவற்றை சுற்றியும் விவாதங்கள் எழுந்தன. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.
- இதற்கிடையே மாணவர்களைச் சந்திக்க வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் பிரதாப்கரியும், இம்ரான் மசூதும் வளாகத்திற்குள் நுழைந்த விதம் குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- இரண்டு எம்.பி.க்களும் சுவர் ஏறி குதித்து, வளாகத்தின் சூழலை குழைத்த நிலையில், அடுத்த நாளே மோதல் வெடித்ததாகவும் பல்கலைக்கழகப் பதிவாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
- மாணவர் சங்கத் தேர்தல் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கும் முடிவும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகளும் இந்த பிரச்னையில் முக்கியமானவையாக இருக்கும்.
- மாணவர் சங்கத்திற்கான அரசியலமைப்பு வரைவைத் தயாரிப்பதற்கான குழு அமைப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உயர்நிலைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை.
முடிவுரை
மொத்தத்தில் 2006ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாணவர் சங்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையில் தொடங்கிய போராட்டம், தற்போது மாணவர் உரிமைகள், நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகள், வளாகப் பாதுகாப்பு, அரசியல் தலையீடு தொடர்பான விவாதமாக உருவெடுத்துள்ளது.
வகுப்புகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படுமா என்பதே அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க | தம்மாம் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல்... இந்தியர் உயிரிழப்பு -என்ன நடந்தது?