Delhi Building Collapse: டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சீமாபுரியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடத்தின் இடிப்பாடுகளில் பலரும் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மதியம் 3.30 மணியளவில் டெல்லி தீயணைப்பு சேவைக்கு அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. "தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delhi: A five-storey building collapsed in Delhi’s Seemapuri, with several people feared trapped under the debris. Ambulances rushed the injured to Rajiv Gandhi Hospital, while Delhi Police and Civil Defence teams reached the spot for rescue operations https://t.co/a32mQpp6Xi
— IANS (@ians_india) October 7, 2026
நாட்டின் தலைநகர் டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மாணவ விடுதி இடிந்து விழுந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு, நகரில் மற்றொரு இடத்தில் 5 மாடி கட்டடம் விழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் சத்ய நிகேதன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து வரும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தால், ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் நின்று, அவர்களில் சிலர் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் தங்கள் மொபைலில் சம்பவ இடத்தை வீடியோ எடுத்து வருகின்றனர்.
நேற்றிரவு (அக். 6) உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், அப்போது இந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கட்டடம் இடிந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் உள்ளூர்காரர் கூறுகையில், 4-5 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கட்டடம் இடிந்து அரைமணிநேரத்தில் போலீசார் வருகை தந்ததாக கூறினார்.
உள்ளூர்காரர் ஒருவர், "இன்னும் குழந்தை ஒன்று அங்கு சிக்கியிருக்கிறது. ஒரு சிலர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். நானே இரண்டு பேருக்கு CPR அவசர உதவியை மேற்கொண்டேன். 2-3 பேரை மருத்துவமனைக்கு கொண்டுபோயிருப்பார்கள்" என்றார்.
இச்சம்பவ இடத்திற்கு வாகன ஓட்டிகள் வர வேண்டாம் என டெல்லி போக்குவரத்து போலீசார் அவர்களின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். "சீமாபுரியில் பல மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில பணியாற்றி வருகின்றனர்.
சீமாபுரி கோல் சக்கர், டிஎல்எஃப் போபுரா மற்றும் அதனை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒவ்வொரு பாதையும் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் விரைவாகச் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முடிந்தால் தயவுசெய்து அந்த பகுதிகளை தவிர்க்கவும். சம்பவ இடததிற்கு அருகில் வாகனங்களை நிறுத்தவோ, கூட்டமாக நிற்கவோ வேண்டாம். போக்குவரத்து ஊழியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும்" என குறிப்பிட்டுள்ளது.