உலகின் மிகப்பெரும் பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க், அவரது ஸ்டார்லிங்க் நிறுவனம் இன்னும் இந்தியாவுக்குள் செயல்பாட்டுக்குள் வராமல் இருப்பதற்கு இந்தியாவின் பெரும் பணக்காரர்களே காரணம் என பெரும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்திய அரசும் எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளுக்கான இந்தியாவின் ஒழுங்குமுறை கட்டமைப்பு நியாயமானதாகவும் பாகுபாடற்றதாகவும் உள்ளது என தெரிவித்த இந்திய அரசு, இந்தக் கட்டமைப்போ அல்லது அதன் பயன்பாடோ நியாயமற்றது என தெரிவித்திருந்தது.
மேலும், செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளுக்கு திட்டமிட்டிருக்கும் மூன்று நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே ஒழுங்குமுறை நிலையில்தான் உள்ளன என மத்திய அரசு தெரிவித்திருந்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பாரதியின் யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளை அளிக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தாலும், X தளத்தில் பலரும் இதுகுறித்து தொடர்ந்து விவாதம் நடத்தி வருகின்றனர். எலான் மஸ்க் தனது SpaceX நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் வழங்கி வரும் நிலையில், அதன் தேவை இந்தியாவுக்கு முக்கியம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
Kshatrap என்ற X பயனர் அவரது பக்கத்தில், "நான் சௌராஷ்டிராவின் ஒரு தொலைத்தூரப் பகுதியில் வசிக்கிறேன். இங்கு இந்தியாவின் முக்கிய நெட்வோர்க்குகளான Jio, VI ஆகியவை இன்னும் சரியான இன்டோர் இணைப்பு வசதியை வழங்குவதில்லை.
சிக்னல் கிடைப்பதற்கு வெளியே செல்ல வேண்டி உள்ளது. அவசர காலத்தில் என்னால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடிவதில்லை. யாராலும் என்னையும் தொடர்புகொள்ள முடிவதில்லை. ஸ்டார்லிங்க் இந்த பிரச்னையை தீர்த்தால், அது எதிர்காலத்திற்கு ஒரு சிறந்ததாக அமையும்" என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை குறிப்பிட்டு Nitin Meshram என்ற X பயனர், "எனது கிராமத்தில் சுதந்திரம் பெற்றதில் இருந்து மொபைல் நெட்வொர்க் வசதி இருந்ததில்லை. ஒருமுறை நான் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தற்போது மூத்த வழக்கறிஞராக இருக்கும் எனது நண்பர் ஒருவர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருந்தார்.
நெட்வொர்க் இல்லாததால் அந்த செய்தியே எனக்கு வந்து சேரவில்லை. நான் ஊரில் இருந்து திரும்பியபோது, அந்த செய்திக்கு நான் பதில் கூட அனுப்பாததால் என் நண்பர் என் மீது கோபப்பட்டார். என்னிடம் நெட்வொர்க் இல்லை என்று நான் விளக்கினேன். ஆனால், நான் பொய் சொல்வதாக அந்த நண்பர் நினைத்துக்கொண்டார்" என பதிவிட்டுள்ளார்.
Starlink will be of great help to areas of India that have bad or no Internet and even no mobile coverage. No country has perfect coverage, including America, but Starlink can fill in the coverage gaps for those who most need it.
— Elon Musk (@elonmusk) October 8, 2026
இந்த பதிவுகளுக்கு பதிலளித்த எலான் மஸ்க், "இந்தியாவில் மோசமான இணைய வசதி அல்லது இணைய சேவையே இல்லாத மற்றும் மொபைல் சேவை கூட இல்லாத பகுதிகளுக்கு ஸ்டார்லிங்க் பெரும் உதவியாக இருக்கும். அமெரிக்கா உட்பட எந்த நாட்டிலும் கச்சிதமான இணைய சேவை இல்லை. ஆனால் யாருக்கு அது மிகவும் தேவையோ, அவர்களுக்கான சேவை இடைவெளிகளை ஸ்டார்லிங்க் நிரப்ப முடியும்" என பதிவிட்டிருந்தார்.
இதேபோல், Gagandeep Singh Sapra என்ற X பயனர், இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்து பல பாகுபாடுகள் நிலவுவதாக பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவை குறிப்பிட்டு Dr Aniruddha Malpani என்ற X பயனர், "அரசு குடிமக்களின் நலன்களை பாதுகாப்பதை விட, தனது கூட்டாளி முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதிலேயே அதிக அக்கறையை கொண்டுள்ளது" என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுகளை குறிப்பிட்டு எலான் மஸ்க் அவரது X பக்கத்தில், "ஸ்டார்லிங்க் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதுடன் இந்திய அரசின் ஒவ்வொரு சட்டததையும், அதன் தேவையையும் ஐந்து ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது.
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license? Is Ambani the real boss of India?
— Elon Musk (@elonmusk) October 8, 2026
அப்படியிருந்தும் ஏன் இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை" என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானியா...? என்றும் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னர், இந்திய மக்கள் மீதான தங்கள் ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சில பெரும் செல்வந்தர்கள் எங்களைத் தடுக்கிறார்கள் என்றும்; அவர்கள் யார் என்று உங்களால் யூகிக்க முடியும் என்றும் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார். இதன்மூலம், அவர் அம்பானியை தான் குற்றஞ்சாட்டி உள்ளார் என்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகி உள்ளது.