6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மானவிகளுக்கு, இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவது கட்டாயம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் சானிட்டரி நாப்கின் கொடுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதை ஏதேனும் பள்ளிகள் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எனப்படும் என்றும் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பள்ளி கல்வித்துறை சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்குட்பட்ட, மக்கும் தன்மையுடைய சானிட்டரி நாப்கின்களை அனைத்து பல்லிகளும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பாகப் பெண்கள் கழிப்பறைகளில் தானியங்கி வெண்டிங் இயந்திரங்களை நிறுவுவதன் மூலம், அந்தப் பொருட்களை எளிதில் அணுகும்படி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக இயந்திரங்களை நிறுவ முடியாத பட்சத்தில், கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம் நாப்கின் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை செய்ய தவறினால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு, 3 மாதங்கள் மாதவிடாய் சுகாதாரத்தை ஏற்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாற்று உள்ளாடைகள், வேறு சீறுடை, ஒருமுறை பயன்படுத்தும் பைகள் உள்ளிட்டவற்றை வைக்க வேண்டும் என்பதும், இதில் அடங்கும். இந்த வசதிகள், பிள்ளைகள் எதிர்பாராத விதமாக மாதவிடாயை சந்தித்தால் அவர்களுக்கு தேவையான அனைத்தும் பள்ளியில் இருக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் இருக்க வேண்டும் என்றும், அந்த கழிவறைகளில் தண்ணீர் வசதி மற்றும் கைக்கழுவும் வசதி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து கழிவறைகளிலும் சுகாதார குப்பைகளை போடுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அதை பள்ளிகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளில் அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும் என்றும், சானிட்டரி நாப்கின், பொது சுகாதாரம், குப்பை அகற்றுதல், மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நடத்துதல் உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.