SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'உங்கள் மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள்": ஐ.நா-வில் பாகிஸ்தானுக்கு பாடமெடுத்த இந்தியா

ஐ.நா-வில் பாகிஸ்தானைச் சாடிய இந்திய தூதர், அந்நாட்டில் பயங்கரவாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதையும், அவர்களின் அட்டூழியங்கள் நியாயப்படுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஒரு பயங்கரவாதி அப்பாவி மக்களை மட்டும் கொல்வதில்லை என்றும், ஒரு தேசத்தின் மனநிலையையும் சிதைக்கிறான் என்றும் அவர் கூறினார்.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 23, 2026, 09:24 AM IST | Updated: Oct 23, 2026, 09:39 AM IST
Join

India at UN: உலக அரங்கில் மீண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு அதன் உண்மையான நிலையை புரியவைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா வியாழக்கிழமை (உள்ளூர் நேரம்) பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கடுமையாகச் சாடியது. மேலும், அந்நாட்டில் நிலவும் மத சுதந்திரம் குறித்தும் கேள்வி எழுப்பியது.

இதுமட்டுமின்றி, புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையையும் இந்தியா நிராகரித்தது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றும் பாவிகா மங்களானந்தன், இந்தியாவின் சார்பில் இந்த விளக்கத்தை அளித்தார்.

ஐ.நா அறிக்கையில் தவறுகளை சுட்டிக்காட்டிய இந்தியா

அந்த அறிக்கையின் வழிமுறைகள் மீது கேள்விகளை எழுப்பிய பாவிகா மங்களானந்தன், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நடந்த அனைத்துத் தவறான நடைமுறைகளும் 'குளோபல் சவுத்' (வளரும் நாடுகள் உள்ள பகுதி) நாடுகளில் மட்டுமே நடந்ததாக அந்த அறிக்கை சித்தரிப்பதாகவும், அதேசமயம் வளர்ந்த நாடுகளில் நிகழ்ந்த இதுபோன்ற துயரமான சூழல்களை அது கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

பாகிஸ்தானை சாடிய இந்தியா

பாகிஸ்தானைச் சாடிய அவர், அந்நாட்டில் பயங்கரவாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதையும், அவர்களின் அட்டூழியங்கள் நியாயப்படுத்தப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஒரு பயங்கரவாதி அப்பாவி மக்களை மட்டும் கொல்வதில்லை என்றும், ஒரு தேசத்தின் மனநிலையையும் சிதைக்கிறான் என்றும் அவர் கூறினார்.

"சட்டப்பூர்வ எல்லைகள், இறையாண்மை உரிமைக் கொள்கைகளின்படி தீர்மானிக்கப்பட வேண்டும். மனிதர்களின் மிக முக்கியமான உரிமையான 'வாழ்வுரிமையை' மீறும் பயங்கரவாதிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள், அதே அக்கறையை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது," என்று பாவிகா மங்களானந்தன் தெரிவித்தார்.

பல ஆண்டு அனுபவம் வாய்ந்த இந்திய தூதரான பாவிகா மங்களானந்தன், பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டும் வகையில், 1999 கார்கில் போரின்போது கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் மறுத்ததை நினைவுபடுத்தினார். போரில் உயிரிழந்த தங்கள் நாட்டு வீரர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ள மறுத்த ஒரு நாடு, இப்போது மத நம்பிக்கை, மத சுதந்திரம் மற்றும் அடக்கம் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் பேசுவது முரண்பாடானது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றம்: SOP-ஐ திருத்திய மத்திய அரசு

"இந்திய ராணுவம்தான் பல பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை, ராணுவ மரியாதையுடனும், இஸ்லாமிய முறைப்படியும் அடக்கம் செய்தது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளையும் மங்களானந்தன் நிராகரித்தார். பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகள் மற்றும் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

"இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதில் பாகிஸ்தான் கொண்டுள்ள அதீத ஆர்வம், உண்மையில் அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ராவலாகோட் போன்ற பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளின் பக்கம் திரும்ப வேண்டும். பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மேலும் அவர்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன," என்று அவர் கூறினார்.

"தன்னுடைய சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத ஒரு அரசு, இந்தியாவுக்கு அறிவுரை கூற எந்தத் தகுதியும் கொண்டிருக்கவில்லை," என்று பாவிகா மங்களானந்தன் தனது பேச்சை நிறைவு செய்தார்.

மேலும் படிக்க | தம்மாம் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல்... இந்தியர் உயிரிழப்பு -என்ன நடந்தது? 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES