கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், இருக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலப்புரம் மாவட்டம் வான்தூர் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் நிலம்பூர் - அமரம்பலம் பகுதியில் உள்ள கோட்டப்பழா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அவர்கள் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. காணாமல் போன மேலும் 2 பேரை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர்களை தேடும் பணிக்காக சிறப்பு பேரிடர் மேலாண்மை படையும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோட்டயம் மாவட்டம் வாகமண்ணில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது டீக்கோய் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னை ஜவகர் நகரை சேர்ந்த சங்கீதா அருள் லால் (35) சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதேபோல், இடுக்கி மாவட்டம் கொட்டகம்பூர் பகுதியில் மழையில் இருந்து தப்புவதற்காக தற்காலிக கொட்டகையில் 3 பேர் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து கொட்டகையின் மீது விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களால் கேரளாவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறீப்பாக இடுக்கி உள்ளிட்ட 2 மாவட்டங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த மஞ்சள் எச்சரிக்கை தற்போது ஆரஞ்சு எச்சரிக்கையாக மாறி உள்ளது.
கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலைமையை ஒவ்வொரு மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள முதலமைச்சர் சதீசன் அறிவுறுத்தி உள்ளார்.