Explained : LGBTQ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் சுட்டுக்கொலை! பஞ்சாப்பில் பரபரப்பு..என்ன நடந்தது?
மேட் சாந்து என்கிற இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூவன்சர், நடுரோட்டில் சுட்டுக்கொலை செய்யபட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பஞ்சாப்பை சேர்ந்த மேட் சாந்து என்கிற இன்ஃப்ளூவன்சர், பல ஆண்டுகளாக LGBTQ சமூகத்தை சேர்ந்தவராக இருந்தவர். இவரை, பஞ்சாப்பின் அம்ரிஸ்டரில் பைக்கில் வந்த இரண்டு பேர் சுட்டு வீழ்த்தி இருக்கின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்ஸ்டா இன்ஃப்ளூவன்ஸர் சுட்டுக்கொலை-வைரலான பேஸ்புக் பதிவு!
பஞ்சாப் இன்ஸ்டா இன்ஃப்ளூவன்சரான மேட் சாந்து, இன்ஸ்டாவில் பல ஆயிரம் ஃபாலோவர்ஸ்களை கொண்டவராக இருந்தார். இவர், LGBTQ-வை சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை, அதாவது அக்டோபர் 3ஆம் தேதி அம்ரிஸ்டரில் இவரை பைக்கில் வந்த இரண்டு பேர் நடு ரோட்டில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மேட் சாந்து, கொலையுண்டதை பார்த்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் கூற்றின் படி, அடையாளம் தெரியாத 2 பேர், மாலை 6 மணியளவில், மேட் சாந்துவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அப்பகுதியின் கூடுதல் உதவி காவல் ஆணையர் சிரிவென்னெலா தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், Goldy Dhillon எனும் ஒரு பேஸ்புக் பக்கத்திலிருந்து பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில், மேட் சாந்துவின் கொலைக்கு தாங்கள்தான் பொறுப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு இவரால் பஞ்சாப் கெட்டுப்போனதாகவும் அந்த போஸ்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த வருடம் நடந்த சம்பவம்..
கடந்த ஆண்டு, பஞ்சாப்பின் லூதியானா எனும் 30 வயதான காஞ்சன் குமாரி எனும் இன்ஸ்டா இன்ஃப்ளூவன்ஸர் வாழ்ந்து வந்தார். இவர், பதிண்டா எனும் இடத்திற்கு ப்ரமோஷனிற்காக சென்றார். ஆனால், அவர் சென்றதற்கு 2 நாட்கள் கழித்து, அழுகிய நிலையில், அவருடைய பூட்டிய காருக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உடற்கூறாய்வில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அவரும், LGBTQ சமூகத்தை சேர்ந்தவராக இருந்தார். இவரால் கலாச்சாரம் சீரழிவதாக கூறி, பலரும் அவருக்கு எதிராக பேசி வந்ததோடு, அவருக்கு பல்வேறு கொலை மிரட்டல்களும் வந்து கொண்டிருந்தன. இதனால், அவர்களுள் யாரோ ஒருவர்தான் இவரை கொன்றிருக்க கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பால்புதுமையினர் குறித்த பதிவுகள்..
அம்ரிஸ்டரின் காவல் துணை ஆணையரான பிரப்ஜோத் சிங் விர்க், இது குறித்து பேசுகையில், இன்ஃப்ளூவன்சரின் கொலை குறித்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இந்த வழக்கை முடிக்க தங்களுக்கு துப்பு கிடைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும், கொலையானவரின் குடும்பத்தினரிடமிருந்து வாக்குமூலங்களை வாங்கியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
கொலையான சாந்து, தன்னுடைய பாட்காஸ்டில் ஒப்பனை கலை குறித்தும், பாலின பாகுபாடு குறித்தும் நிறையவே பேசியிருக்கிறார். இதனால் இவருக்கு டிஜிட்டல் உலகில் பெரிய ஆதரவாளர் கூட்டம் இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 2.4 லட்சம் ஃபாலோவர்ஸ் அவருக்கு இன்ஸ்டாகிராமில் இருந்துள்ளனர்.
இவர், அம்ரிஸ்டரில் மேன் லேன் யுனிசெக்ஸ் எனும் சலூனையும் வைத்திருக்கிறார். இங்கு அழகுக்கலை குறித்த படிப்பும், சுய ஒப்பனை செய்து கொள்வதற்கான கலைகளும் கற்பிக்கப்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்..!
சாந்து, தன் பாலின ஈர்ப்பாளராக இருந்துள்ளார். இவர் மீது ஆரம்பத்திலிருந்து தன்பாலின ஈர்ப்பு குறித்த எதிர்ப்பு கொண்டவர்கள், கொலை மிரட்டல் விடுத்தும், அவருக்கு எதிரான கருத்துகளையும் கூறி வந்துள்ளனர். இருந்தாலும், தன்னுடைய பாலின ஈர்ப்பு கூறித்து யாரேனும் கேளி செய்தாலோ, அவதூறு பரப்பினாலோ அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு அவர் தயங்கியதில்லை.
”என்னை கடவுள்தான் இப்படி படைத்திருக்கிறர்” என்பது இவருடைய பதிலாக இருக்கும். தன்னை “ஜாட் சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவன்” என்று அடிக்கடி கூறும் அவர், தான் அம்ரிஸ்டர் போன்ற நகரத்தில் இருப்பதால், தன்னால் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடிவதாக கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | மும்பையைத் தொடர்ந்து அக்டோபர் 10 டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்: CJP அறிவிப்பு
இவருடைய ரசிகர்கள், இவர் கலையையும், தன்னை வெளிப்படுத்தும் விதத்தையும், தொழில்முறையையும் ரசித்து வந்தனர். மேட் சாந்துவும், தன்னுடைய வீடியோக்கள் எந்த பாலினத்தவருக்கும் சாராது இருப்பது போன்று சில Fashion வீடியோக்களை பதிவிடுவார். இது, பல்வேறு கலைஞர்களால் பாராட்டப்பட்டாலும், பல பேர் இவரது பதிவுகளில், வெறுப்பு கருத்துகளையே பதிவிட்டு வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, சாந்துவுக்கும் நிஹாங் சிங்கிற்கும் இடையேயான உரையாடல் ஒன்று வைரலானது. அதில், அந்த நிஹாங் சிங் என்பவர், சாந்துவை அவரது க்ராஸ் ட்ரெஸ்ஸிங் சாய்ஸ்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிடக்கூடாது என்று கூறியிருக்கிறார். மேலும், இது பஞ்சாப்பின் இளைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாக கூறி, இவ்வாறு பதிவிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, சாந்து தான் தன்னுடைய ஸ்டைல்களை மாற்றிக்கொண்டதாக கூறி ஒரு விளக்க பதிவை வெளியிட்டார். அதோடு, தான் தன்னுடைய பழைய தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டதாக கூறி, தன்னுடைய பழைய ரீல் வீடியோக்களை வேண்டுமென்றே சில பரப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு!
காங்கிரஸ் தலைவர் ராஜ் குமார் வெர்கா, AAP அரசாங்கம்தான், சாந்து கொலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். அந்த அரசாங்கத்தின் சட்ட ஒழுங்கு பஞ்சாப்பில் சீர்குலைந்ததால் இப்படி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“AAP அரசாங்கம், ஒரு தனி நபரை பாதுகாக்க தவறி விட்டது. இது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் ஆகும். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் எதுவும் பேசாமல் இருப்பது, நம்ப முடியாததாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல்கள் குறித்து பேச்சு!
அம்ரிஸ்டரின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங் அவுஜாலா, சாந்துவிற்கு பல நாட்களாக கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், இது குறித்து அவர் தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த கொலை மிரட்டல்கள் எப்போதோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் ஒரு குற்றமற்ற நபரின் உயிர் பறிபோய் இருக்காது என்று கூறி இருக்கிறார். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.