LPG Cylinder Rules: நவம்பர் மாதத் தொடக்கத்தில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றம் இருக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மக்களுக்கு இந்த நல்ல செய்தியை அளிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. எனினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
நவம்பர் மாதம தொடக்கம் முதலே எல்பிஜி சிலிண்டர் தொடர்பான பல்வேறு விதிகள் மற்றும் விலைகள் குறித்து மக்கள் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இந்த மாற்றங்கள், இண்டேன் (Indane), ஹெச்பி கேஸ் (HP Gas) அல்லது பாரத் கேஸ் (Bharat Gas) ஆகியவற்றைப் பயன்படுத்தும் வீட்டு உபயோகிப்பாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையில் செய்யப்படும் மாதாந்திர மாற்றங்களைத் தவிர, ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி (e-KYC), சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே இருக்க வேண்டிய கால இடைவெளி, டெலிவரி சரிபார்ப்பு மற்றும் எல்பிஜி-யிலிருந்து குழாய் வழி இயற்கை எரிவாயுவிற்கு (PNG) மாறுதல் போன்றவை மக்களுக்கான முக்கிய அம்சங்களாக உள்ளன.
நவம்பர் மாதத்திற்கு முன்னதாக விவாதிக்கப்படும் இந்த அனைத்து மாற்றங்களும் முற்றிலும் புதியவை அல்ல என்பதை நுகர்வோர் புரிந்துகொள்வது அவசியம். இதில் பல விதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன, அவை நவம்பர் மாதத்திலும் தொடர வாய்ப்புள்ளது.
நவம்பர் 1 முதல் வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியன்று வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மறுஆய்வு செய்கின்றன. 19 கிலோ எடையுள்ள வணிக ரீதியான சிலிண்டர்கள் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் விலைகள், சர்வதேச எரிசக்தி சந்தையின் சூழல் மற்றும் எரிவாயு விநியோக நிலவரங்களைப் பொறுத்து அமைகின்றன.
அக்டோபர் மாதத்தில் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது. டெல்லியில் 19 கிலோ சிலிண்டரின் விலை ₹2,810 ஆக இருந்தது. பிற நகரங்களில் விலை மாறுபடுகிறது. நவம்பர் 1 முதல் விலையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பது, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பொறுத்தே அமையும்.
வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலை மாற்ற நடைமுறை வேறாக இருக்கலாம். 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில், கடந்த 2022 ஜூன் 7-ஆம் தேதிக்குப் பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை மாறுபடக்கூடும். நகரத்திற்கு நகரம் இதன் விலை மாறுபடக்கூடும். நுகர்வோர் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு முன், தங்கள் நகரத்தில் தற்போதைய விலை என்ன என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
மானியத்திற்குத் தகுதியுள்ள வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோருக்கு, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு அல்லது இ-கேஒய்சி (e-KYC) கட்டாயமாகும். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்படி, இந்த நடைமுறை அக்டோபர் 1, 2026 முதல் அமலில் உள்ளது.
ஏற்கனவே இ-கேஒய்சி (e-KYC) நடைமுறையை முடித்த நுகர்வோர், மீண்டும் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. பல்வேறு எரிவாயு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், கீழ்க்கண்ட செயலிகள் மூலம் இ-கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யலாம்:
இதற்கு மாற்றாக, நுகர்வோர் தங்கள் எரிவாயு விநியோகஸ்தரை நேரில் சந்தித்தோ அல்லது சிலிண்டர் விநியோகத்தின் போதோ இந்த சரிபார்ப்பு நடைமுறையை முடித்துக்கொள்ளலாம்.
தகுதியுடைய நுகர்வோர் இ-கேஒய்சி செயல்முறையை முடிக்கத் தவறினால், இந்த நடைமுறையை நிறைவு செய்யும் வரை, மானியம் பெறும் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள விரும்பாதவர்கள், இது குறித்து தங்கள் எரிவாயு நிறுவனங்களுக்குத் தெரிவிக்கலாம். அத்தகைய நுகர்வோர், சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எல்பிஜி (LPG)-யிலிருந்து பிஎன்ஜி (PNG)-க்கு மாறுவது குறித்த விழிப்புணர்வு அளிக்கபப்ட்டு வருகின்றது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு, இந்தியாவில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) விலையில் எப்போதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. பிஎன்ஜி-யின் விலை பல காரணிகளைப் பொறுத்தது. குறிப்பாக, நகரங்களுக்கு எரிவாயு வழங்கும் நிறுவனங்கள், உள்நாட்டு உற்பத்தியிலிருந்து பெறும் இயற்கை எரிவாயு மற்றும் இறக்குமதி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஆகியவற்றின் விகிதமே இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், அரசின் விலை நிர்ணயக் கொள்கைகள், எரிவாயு விநியோகச் செலவுகள் மற்றும் வரிகள் ஆகியவை பிஎன்ஜி-யின் இறுதி விலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, எல்பிஜி விலையுடன் சேர்த்து, இ-கேஒய்சி தொடர்பான விதிமுறைகள் மற்றும் பிஎன்ஜி விலை நிர்ணயம் குறித்தும் நுகர்வோர் கவனத்தில் கொள்வது அவசியம்.
எல்பிஜி வாடிக்கையாளர்கள் இந்த விதிகள் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பது பல சிக்கல்களை தவிர்க்க உதவுவதோடு, தகுதியான பயனாளிகள் குறைந்த விலையில் சிலிண்டர் பெறுவதையும் உறுதி செய்யும்.