பிரதமர் நரேந்திர மோடி அவரது 76வது பிறந்தநாளை நாளை (செப். 17)கொண்டாட இருக்கிறார். குஜராத் மாநிலம் வட்நகரில் 1950ஆம் ஆண்டில் பிறந்து, சிறுவயதில் பொது இடங்களில் தேநீர் விற்று, அரசியல் ஆர்வத்தாலும் மக்கள் சேவையின் மீதான நாட்டத்தாலும் தற்போது உலகத் தலைவர்களில் முக்கியமானவராக வளர்ந்து நிற்கிறார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டராக பொது வாழ்வை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, காலப்போக்கில் பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவரானார். 2001ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்த நரேந்திர மோடி, கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை இங்கு விரிவாக காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடியின் 8வது வயதிலேயே அவரது அரசியல் பயணம் தொடங்கியது. அப்போது லட்சுமணராவ் இனாம்தார் என்பவரின் வழிக்காட்டுதலின் பேரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இளநிலை தொண்டராக இணைந்தார். பிற்காலத்தில் லட்சுமணராவ் இனாம்தார் நரேந்திர மோடியின் அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தார்.
பள்ளி காலத்திலேயே பிரதமர் மோடி நாடகக் கலையின் மீது பெரும் ஆர்வத்தை கொண்டிருந்தார். அவர் கம்பீரமும் ஆளுமையும் நிறைந்த கதாபாத்திரங்களை ஏற்று மேடையில் முழங்கியதன் பலனே அவர் பேச்சாற்றலில் சிறந்த விளங்க காரணம். பொதுமக்கள் தனது பேச்சால் ஈர்ப்பது அவ்வளவு எளிதானதில்லை. அதில் கைத்தேர்ந்தவர் பிரதமர் மோடி.
அரசியலை தாண்டி, பிரதமர் மோடி ஒரு தீவிர இலக்கிய வாசகர் ஆவார். அவர் குஜராத்தி மொழியில் பல கவிதைகளை எழுதி உள்ளார். 1975ஆம் ஆண்டு நெருக்கடி காலகட்டத்தில் நரேந்திர மோடி தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்போது அவர் சந்தித்த இன்னல்களையும், சம்பவங்களையும் குஜராத்தி மொழியில் வெறும் 23 நாட்களில் புத்தகத்தை கைப்பட எழுதியுள்ளார். Sangharsh Ma Gujarat (குஜராத்தில் போராட்டம்) என்ற புத்தகம் 1978ஆம் ஆண்டு வெளியானது.
துறவியாக வாழ வேண்டும் என்பது இளமைப் பருவத்தில் பிரதமர் மோடிக்கு விருப்பமாக இருந்துள்ளது. இதற்காகவே இமயமலையில் சுமார் 2 ஆண்டுகள் தனிமையில் செலவிட்டார். அங்கு அவர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் இந்து மத தத்துவங்களையும் ஆழமாக உள்வாங்கி உள்ளார்.
2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக பதவியேற்றது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அவர் முதலவராகும் போது சட்டப்பேரவை உறுப்பினர் கூட இல்லை. 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜ்கோட் மேற்கு இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏவானார்.
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக செயலாற்றிய அந்த 12 ஆண்டுகாலத்திலும், நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. அதேநேரத்தில் அவருக்கு உதவியாக மூன்று பேர் அளவில்தான் தனிப்பட்ட பணியாளர்கள் இருந்தனர்.
கடந்த ஜூன் 10ஆம் தேதி அன்று, இந்தியாவில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார். ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகாலம் பிரதமராக செயலாற்றியிருந்தாலும், 1947ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டுவரை இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டு அவர் செயல்பட்டார்.
1952ஆம் ஆண்டில்தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 10 தேதி நிலவரப்படி நரேந்திர மோடி 4,399 நாட்கள் இடைவிடாமல் பிரதமர் பதவியை வகித்து நேருவின் 4,398 நாட்கள் சாதனையை முறியடித்தார்.
1947ஆம் ஆண்டுக்கு பின்னர் சுதந்திர இந்தியாவில் பிறந்து முதன்முதலில் பிரதமரானாவர் நரேந்திர மோடிதான். அதற்கு முன் பிரதமராக இருந்தவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்கு முன் பிறந்தவர்கள்.
இந்திரா காந்திக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக (2014, 2019) அறுதி பெரும்பான்மையுடன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவர் நரேந்திர மோடி. இருப்பினும், 2024 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து பிரதமராக மோடி 3வது முறையாக தேர்வானார்.
நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமிலும் முக்கிய சாதனையை படைத்திருந்தார். அவர் நள்ளிரவில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஒன்று வெறும் 24 மணிநேரத்தில் 303 மில்லியன் முதல் 341 மில்லியன் வியூஸ்களை குவித்தது. டெல்லியில் மாணவப் போராட்டம் நடைபெற்றிருந்த நேரத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிரமதர் மோடி பேசியிருந்த வீடியோ வைரலாகியிருந்தது.