நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையில் குளறுபடிகள் நடத்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்து போராட்ட களத்தில் இயங்கி வருகின்றன. தலைநகர் டெல்லியில் கடும் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அக்டோபர் இறுதியில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற போதுமான பலம் இருப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நம்புவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில், மசோதாக்கள் நிறைவேறுவதற்கு எவ்வளவு உறுப்பினர்கள் தேவை...?, இதற்கு முன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணி என்ன...?, தொகுதி மறுவரையறை மசோதாவில் வர இருக்கும் மாற்றங்கள்...? உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதாக்கள் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும், அன்று அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அவசியமாகும். அதுமட்டுமின்றி அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எளிய பெரும்பான்மையும் பெற்றிருக்க வேண்டும்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் மாநிலங்களவையில் போதிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தன.
அதன்பின், மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை மீண்டும் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. ஆனால், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான கடும் எதிர்ப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
கூட்டாட்சி மீதான அச்சுறுத்தல்: புதிய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசியல் ரீதியான எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் இது மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டித்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த தவறிய வட இந்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் செயல் எனக கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
விவாத நேரம் குறையும்: தற்போது ஒரு மசோதாவுக்கு சராசரியாக 3.6 மணிநேரமே விவாதம் ஒதுக்கப்படுகிறது. உறுப்பினர் ஒருவருக்கு 8 - 10 நிமிடங்களே பேச நேரம் கிடைக்கிறது. எம்.பி.,க்களின் எண்ணிக்கை 800-க்கும் மேல் அதிகரிக்கும்போது, சிறிய மற்றும் பிராந்தியக் கட்சிகளின் குரல் முற்றிலும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது.
மத்திய அரசு சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதன் மூலம் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற முனைந்தாலும் அதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கை பெற்று சிறப்பு பெரும்பான்மையை பெறுவது பெரும் சாவலாகவே இருக்கும்.
குறிப்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. இத்தகைய சூழலில், அனைத்து மாநிலங்களின் நலன்களையும் உள்ளடக்கிய ஒருமித்த கருத்தை எட்டாமல் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கூடுதல் அரசியல் கொந்தளிப்பையே உருவாக்கும் என கருதப்படுகிறது.