நாடாளுமன்றத்தை கூட்டும் மத்திய அரசு... வருது Delimitation மசோதா - பாஜகவின் கணக்கு என்ன? Explained
சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டி தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மக்களவை இடங்களின் எண்ணிக்கை உயர்வு, திமுகவின் முக்கிய நிபந்தனை மற்றும் கூட்டாட்சி மீதான கவலைகள் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையில் குளறுபடிகள் நடத்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்து போராட்ட களத்தில் இயங்கி வருகின்றன. தலைநகர் டெல்லியில் கடும் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அக்டோபர் இறுதியில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற போதுமான பலம் இருப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நம்புவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில், மசோதாக்கள் நிறைவேறுவதற்கு எவ்வளவு உறுப்பினர்கள் தேவை...?, இதற்கு முன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னணி என்ன...?, தொகுதி மறுவரையறை மசோதாவில் வர இருக்கும் மாற்றங்கள்...? உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
அவைக்கு வரும் இரு மசோதாக்கள்
தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதாக்கள் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும், அன்று அவைக்கு வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அவசியமாகும். அதுமட்டுமின்றி அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எளிய பெரும்பான்மையும் பெற்றிருக்க வேண்டும்.
முந்தைய பின்னணி என்ன?
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் மாநிலங்களவையில் போதிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்தன.
அதன்பின், மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை மீண்டும் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. ஆனால், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான கடும் எதிர்ப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
தொகுதி மறுவரையறை மசோதா 2026 - முக்கிய மாற்றங்கள் என்ன?
- தொகுதி மறுவரையறை மசோதாவின்படி, தற்போதைய அதிகபட்ச வரம்பான 550இல் இருந்து 850 ஆக உயர்த்த 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா வழிவகை செய்கிறது. இதில் செயல்பாட்டு ரீதியாக 816 இடங்கள் வரை நிரப்பப்படலாம்.
- மக்கள் தொகைக்கு ஏற்ப இடங்களை உயர்த்த அரசியலமைப்பு விதி 81 இடமளித்தாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு 1970களில் இருந்து இது முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
- முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள் வரும் 2029ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடைமுறைக்கு வராது.
மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது யார் யார்?
- 540இல் மூன்றில் இரண்டு பங்கு என்றால் 368 ஆகும்.
- பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களை சேர்த்து 318 பேர் உள்ளனர்.
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 28 மக்களவை உறுப்பினர்களில், 20 பேர் மத்திய அரசின் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்களும் இம்மசோதாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இவை சேர்த்தே 318 என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக யார் பக்கம்...?
- தொகுதி மறுவரையறை மசோதாவை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து களமாடி வந்தது திமுகதான். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் உறவையும் முறித்து, இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக தனித்துவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் 22 மக்களவை உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இவர்களின் ஆதரவைப் பெற மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
- இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தொடர் ஆலோசனை மேற்கொண்டது.
- அதேநேரத்தில், தென் மாநிலங்கலின் நாடாளுமன்ற இடங்கள் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ள இடங்களின் எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளை விதிக்கவும் திமுக ஆலோசித்து வருகிறது.
பாஜகவின் மீதான முக்கிய விமர்சனங்கள்
கூட்டாட்சி மீதான அச்சுறுத்தல்: புதிய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசியல் ரீதியான எதிர்ப்பு: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் இது மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டித்து, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த தவறிய வட இந்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் செயல் எனக கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
விவாத நேரம் குறையும்: தற்போது ஒரு மசோதாவுக்கு சராசரியாக 3.6 மணிநேரமே விவாதம் ஒதுக்கப்படுகிறது. உறுப்பினர் ஒருவருக்கு 8 - 10 நிமிடங்களே பேச நேரம் கிடைக்கிறது. எம்.பி.,க்களின் எண்ணிக்கை 800-க்கும் மேல் அதிகரிக்கும்போது, சிறிய மற்றும் பிராந்தியக் கட்சிகளின் குரல் முற்றிலும் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது.
முடிவரை
மத்திய அரசு சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதன் மூலம் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற முனைந்தாலும் அதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கை பெற்று சிறப்பு பெரும்பான்மையை பெறுவது பெரும் சாவலாகவே இருக்கும்.
குறிப்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. இத்தகைய சூழலில், அனைத்து மாநிலங்களின் நலன்களையும் உள்ளடக்கிய ஒருமித்த கருத்தை எட்டாமல் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கூடுதல் அரசியல் கொந்தளிப்பையே உருவாக்கும் என கருதப்படுகிறது.
மேலும் படிக்க | என்னை கொல்ல சதி, பெண்களுடன் தொடர்பு.... கணவர் மீது அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!!