Parliament Session: மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கும் நோக்கம் கொண்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து விவாதிக்க, திங்கள்கிழமை (நவம்பர் 30) நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடவுள்ளது. பல வித சர்ச்சைகளுக்கு மத்தியில் நிகழவுள்ள இந்த அமர்வுக்கு முன்னதாக பல சுவாரசியமான அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
Delhi | Seating arrangements of 97 MPs, including DMK members, have been changed in the Lok Sabha DMK today announced its support for the Centre's proposed Delimitation and Women's Reservation Bills.
— ANI (@ANI) November 28, 2026
மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கபப்டும் இருக்கை எண்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்குப்பதிவு எண்ணையும் குறிக்கின்றன.
இந்த இருக்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மறுசீரமைப்பைக் காட்டுவது மட்டுமின்றி, 'இந்தியா' (INDIA) கூட்டணியின் தற்போதைய சூழலையும் பிரதிபலிக்கின்றன. அக்கூட்டணியிலிருந்து முக்கியக் கூட்டணிக் கட்சிகள் வெளியேறியுள்ள நிலையில், அரசியலமைப்புத் திருத்த மசோதாவைத் தடுப்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு செயல்பாடாக மாறக்கூடும்.
தற்போது மேற்கொள்ளபடும் இருக்கை மாற்றங்களின் விளைவாக, சமாஜ்வாதி கட்சி (SP) உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அருகில் அமர்வார்கள். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் கொறடா கே. சுரேஷ் அமர்ந்திருந்த இடத்திற்கு மாறுகிறார்.
முன்னதாக, மே மாத தொடக்கத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான உறவு முறிந்ததைத் தொடர்ந்து, திமுக தனி இருக்கை வசதியைக் கோரியிருந்தது. காங்கிரஸ் கட்சியானது 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) கட்சியுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சியின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசுடன் இணைந்ததே இந்த உறவு முறிவுக்குக் காரணமாக அமைந்தது.
நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இந்த மாற்றியமைக்கப்பட்ட இருக்கை ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.
சனிக்கிழமையன்று நடைபெற்ற மற்றொரு முக்கியமான நிகழ்வாக, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான திமுக எம்.பி.க்கள் குழு, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தது. இந்தக் குழுவில் டி.ஆர். பாலு, ஆ. ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தச் சந்திப்பு அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக சனிக்கிழமையன்று, சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான 'அண்ணா அறிவாலயத்தில்', மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்களின் கூட்டத்திற்குப் பிறகு, திருத்தப்பட்ட மசோதாக்களுக்கு திமுக தனது ஆதரவை முறைப்படி தெரிவித்தது.
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறித்த கட்சியின் முக்கிய கவலைகள், திருத்தப்பட்ட முன்மொழிவில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மக்களவையில் தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ சமநிலை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு திங்கள்கிழமை தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. 132-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் அது தொடர்பான தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவை நிறைவேற்றுவது மட்டுமே இந்த அமர்வின் ஒரே நிகழ்ச்சி நிரலாகும்.