தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிப்பது ஆண்டுதோறும் முக்கிய விவாதமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், வழக்க்மான பட்டாசுகளை விட குறைவான மாசை வெளியிடும் வகையில் தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அரசு தரப்பில் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பட்டாசுகள் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? வழக்கமான பட்டாசுகளுக்கும் பசுமை பட்டாசுகளுக்கும் என்ன வித்தியாசம்? அவை எந்த அளவுக்கு மாசை குறைக்கின்றன என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
தீபாவளியை முன்னிட்டு, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi-NCR) சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டும் தற்காலிகமாக வெடிக்க உச்ச நீதிமன்றம் அக்டோபர் 29ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் டெல்லி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
அதன்படி, நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், சுகாதார மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட அமைதி பகுதிகளை சுற்றி 300 மீட்டர் தொலைவுக்குள் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்தப் பகுதிகள் 'பட்டாசுகள் வெடிக்கத் தடை செய்யப்பட்ட மண்டலங்களாக' (No-Cracker Zones) அறிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. நவம்பர் 9ஆம் தேதி முதல் டெல்லியில் பட்டாசுகளுக்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதுடன், அவற்றை வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
பசுமைப் பட்டாசுகள் என்பது வழக்கமான பட்டாசுகளில் இருந்து சற்று உயர்ந்தவை. சாதாரண பட்டாசுகளை போலவே ஒளி, வண்ணம், சத்தம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இவை தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், அவற்றிலிருந்து வெளியேறும் புகை, நுண்துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த பட்டாசுகளுக்கான தொழில்நுட்பத்தை இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், குறிப்பாக அதன் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NEERI) உருவாக்கியுள்ளது.
பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் சில வேதிப்பொருட்களின் அளவை குறைப்பது, அவற்றுக்கு பதிலாக மாசை கட்டுப்படுத்தும் பொருட்களை சேர்ப்பது போன்ற முறைகள் இதில் பின்பற்றப்படுகின்றன. இதில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.
SWAS (Safe Water Releaser): பட்டாசு வெடிக்கும்போது நீராவியை வெளியிடும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் காற்றில் பரவும் தூசு துகள்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
STAR (Safe Thermite Cracker): பட்டாசில் நடைபெறும் எரிதல் செயல்முறையை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் எரியாமல் வெளியேறும் பொருட்களின் அளவை குறைக்க முயற்சி செய்யப்படுகிறது.
SAFAL (Safe Minimal Aluminium): வழக்கமான பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் அலுமினியத்தின் அளவை குறைத்து தயாரிக்கப்படும் வகையாகும்.
இந்த பட்டாசுகள் உரிய ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டு, குறிப்பிட்ட மாசு வெளியீட்டு அளவுகளைப் பூர்த்தி செய்த பின்னரே சான்றளிக்கப்பட வேண்டும். மேலும், அவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தேவையான உரிமம் மற்றும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
பசுமை பட்டாசுகள் என்று சான்று பெறுவதற்கு, அதே வகையை சேர்ந்த வழக்கமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 30 சதவீதம் குறைவான நுண்துகள்களை வெளியிட வேண்டும் அல்லது நுண்துகள் வெளியீடு 20 சதவீதம் குறைவதுடன், வாயு மாசு வெளியீடும் குறைந்தபட்சம் 10 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்.
மேலும், பட்டாசுகளின் சத்த அளவு தொடர்பாகவும் கட்டுப்பாடுகள் உள்ளன. நான்கு மீட்டர் தொலைவில் அளவிடும்போது சத்தம் 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமான பட்டாசுகளில் பச்சை நிற ஒளி விளைவுகளை ஏற்படுத்த பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்களும், அலுமினியப் பொடி, பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம் உள்ளிட்ட பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை எரியும்போது அதிகளவில் புகை, நுண்துகள்கள் மற்றும் வாயு மாசுகளை வெளியிடக்கூடும். சில பட்டாசுகளில் சத்தமும் அதிகமாக இருக்கும்.
ஆனால், பசுமைப் பட்டாசுகளில் இத்தகைய பொருட்களின் அளவு குறைக்கப்படுவதுடன், மாசு வெளியீட்டை கட்டுப்படுத்தும் மாற்று பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு பட்டாசும் உரிய சோதனைகளை கடந்து சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க QR குறியீடு உள்ளிட்ட அடையாள முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
வழக்கமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள் குறைவான மாசை வெளியிடுகின்றன என்பது உண்மைதான். இருப்பினும், அவற்றை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு முற்றிலும் நீங்கிவிடாது.
குறிப்பாக, குறைவான மாசை வெளியிடும் பட்டாசுகளாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் வெடிக்கும்போது ஒட்டுமொத்த மாசு அளவு அதிகரிக்கலாம். அதாவது, ஒரு பட்டாசு வெளியிடும் மாசு குறைவாக இருப்பதால் மட்டும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று சொல்ல முடியாது.
மேலும், 30 சதவீதம் குறைவான மாசு வெளியீடு என்ற அளவீடு, அதே வகையைச் சேர்ந்த, ஒத்த அளவுடைய வழக்கமான பட்டாசுகளுடன் ஒப்பிடும்போதுதான் பொருந்தும். பட்டாசின் சத்தம் மற்றும் ஒளி விளைவுகளை அதிகரிப்பதற்காக அதன் அளவு அல்லது வெடிக்கும் திறனை அதிகரித்தால், மாசு வெளியீடும் அதற்கேற்ப அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் CSIR NEERI உருவாக்கிய பசுமை பட்டாசுகள் குறைந்த மாசை வெளியிடும் பட்டாசுகளுக்கான இந்தியாவின் உள்நாட்டு முயற்சியாகும். இதே தொழில்நுட்பம் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச தரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், சில நாடுகள் பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
உலகின் மிகப்பெரிய பட்டாசு உற்பத்தி நாடுகளில் ஒன்றான சீனா, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள முக்கிய நகரங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதித்திருந்தது. பின்னர், சில பண்டிகை காலங்களில் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
நெதர்லாந்து நாட்டிலும் தனிநபர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகளை பயன்படுத்துவதற்கான தேசிய அளவிலான தடையை 2026 ஆகஸ்ட் முதல் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பசுமைப் பட்டாசுகள் வழக்கமான பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக இருந்தாலும், அவை மாசு இல்லாதவை என்று கூற முடியாது. சான்றளிக்கப்பட்ட பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்துவது, வெடிக்கும் எண்ணிக்கையை குறைப்பது, அரசு விதிக்கும் நேர கட்டுப்பாடுகளை பின்பற்றுவது ஆகியவையே சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க உதவும்.