காங்கிரஸுக்கு காத்திருக்கும் ஆப்பு! வரலாறு காணாத அளவில் குறைந்த நன்கொடை.. என்ன காரணம்?
Congress Donation: காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த நன்கொடையின் மதிப்பு, 2025-26ம் நிதியாண்டில் சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி வசூலித்த தொகையை விட கிட்டதட்ட 12 மடங்கு அதிகமாக பாஜக நன்கொடை பெற்றுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான வீழ்ச்சியாகும்.
Congress Donation: மத்தியில் எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடந்த மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. தொடர்ந்து, மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடைகள் குறைந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த நன்கொடை
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் 128 எம்பிக்களை கொண்டுள்ளது. ஆறு மாநிலங்களில் (நான்கில் நேரடியாகவும், இரண்டிலும் கூட்டணிக் கட்சியாகவும்) ஆட்சியில் உள்ளது. 2025-26ஆம் நிதியாண்டில் நன்கொடைகள் 75 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நன்கொடைகள் காங்கிரஸ் குறைந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த நன்கொடை அறிக்கைகளின்படி, 2025-26ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.20,000க்கு மேல் பெற்ற நன்கொடைகளின் மதிப்பு ரூ.130.69 கோடியாகும். முந்தைய நிதியாண்டில் 2023-24-ல் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடைகள் ரூ. 517.39 கோடி ஆகும். இதனுடன் ஒப்பிடுக்கையில், 2025-26ஆம் நிதியாண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால், காங்கிரஸின் நன்கொடை தொகையானது முந்தைய ஆண்டின் ரூ. 281.48 கோடியிலிருந்து கணிசமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்
பாஜக 12 மடங்கு அதிகம்
ஆளுங்கட்சியான பாஜக, 2024-25 நிதியாண்டில், ரூ. 20,000-க்கு மேற்பட்ட நன்கொடைகளாக பாஜக ரூ. 6,074.02 கோடியைப் பெற்றுள்ளது. அதே காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி வசூலித்த தொகையை விட கிட்டதட்ட 12 மடங்கு அதிகம் ஆகும். கடந்த 12 நிதியாண்டுகளில் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த நன்கொடை விபரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இதற்கு முன் 2015-16 நிதியாண்டில்தான் இதைவிடக் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்போது, அதற்கு முந்தைய ஆண்டின் நன்கொடை தொகையான ரூ. 141.46 கோடியிலிருந்து சுமார் 86 சதவீதம் வரை சரிவைச் சந்தித்திருந்தது.
காங்கிரஸின் நன்கொடை குறைவுக்கு என்ன காரணம்?
மத்தியில் எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் இருந்து வருவதால், நன்கொடை அளிக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடைகள் பெருமளவில் குறைந்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு நிதி வழங்கும் முக்கிய கார்ப்பரேட் அமைப்பான ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட் 2025-26ல் வெறும் ரூ.25 கோடி மட்டுமே நன்கொடையாக வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டு வழங்கிய ரூ.216 கோடியுடன் ஒப்பிடுகையில் 88.4 சதவீதம் சரிவாகும்.
மற்ற முக்கிய நன்கொடையாளர்களில், 'ஸ்டார் சிமெண்ட்' (Star Cement) நிறுவனம் ரூ. 5 கோடியும், சஜ்ஜன் பஜன்கா ரூ. 4 கோடியும், பிரேம் குமார் பஜன்கா ரூ. 2 கோடியும் காங்கிரஸுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, அனைத்து முக்கிய கட்சிகளின் நன்கொடைகள் குறைவது வழக்கமான ஒன்று தான். இருப்பினும், காங்கிரஸின் வீழ்ச்சி கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு வரும் நன்கொடை குறைந்து வரும் நிலையில், 2029 லோக்சபா தேர்தலில் அக்கட்சி என்ன செய்யும் என்ற கேள்வி எழுகிறது.
மேலும் படிக்க: அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!
2025-26 ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி திரட்டிய நிதி, முந்தைய ஆண்டை விட வெகுவாகக் குறைந்திருந்தாலும், இதுவே அக்கட்சியின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவு நிதி அல்ல. கடந்த கால கணக்குகளைப் பார்க்கும்போது, 2020-21-ல் ரூ. 74.52 கோடி, 2021-22-ல் ரூ. 95.46 கோடி மற்றும் 2022-23-ல் ரூ. 79.92 கோடி என பல ஆண்டுகளில் காங்கிரஸ் நன்கொடை தொகை இதைவிடக் குறைவாகவே இருந்திருக்கிறது.
இந்த நன்கொடை அறிக்கை மட்டுமே கட்சியின் முழுமையான வருமானத்தைக் காட்டிவிடாது; இதில் சிறிய அளவிலான நன்கொடைகள், உறுப்பினர் கட்டணங்கள், கூப்பன் விற்பனை வசூல் மற்றும் வங்கி வட்டி வருவாய் ஆகியவை அடங்காது. முன்னதாக, 2024-25 நிதியாண்டில் கூப்பன் விற்பனை மூலம் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 350.12 கோடி வருவாய் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.