SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழ் உட்பட 5 மொழிகளில் ‘ச ரே கா மா பா’.. Zee அறிமுகப்படுத்தும் புதிய நிகழ்ச்சிகள்!

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இசை, சமையல், நகைச்சுவை மற்றும் பிரபலங்கள் பங்கேற்கும் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.

Written By R Balaji
Published: Oct 21, 2026, 07:12 PM IST | Updated: Oct 21, 2026, 07:15 PM IST
Join

இந்த தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையில் தனது நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தும் வகையில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம் பல்வேறு மொழிகளில் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இசை, சமையல், பிரபலங்களுடனான உரையாடல், நகைச்சுவை மற்றும் கேம் ஷோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புதிய நிகழ்ச்சிகளையும், ஏற்கனவே பிரபலமான நிகழ்ச்சிகளின் புதிய வடிவங்களையும் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மும்பையில் இன்று (அக்டோபர் 21) வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, குடும்பத்துடன் இணைந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமின்றி, ஜீ5 டிஜிட்டல் தளத்திலும் இந்த நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

5 மொழிகளில் ‘ச ரே கா மா பா’

ஜீ நிறுவனத்தின் முக்கியமான இசை நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ச ரே கா மா பா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை பல்வேறு மொழிகளில் விரிவுபடுத்துவதன் மூலம், இசை ரசிகர்களை அதிக அளவில் சென்றடைய நிறுவனம் முயற்சிக்கிறது.

இதுதவிர, வங்க மொழியில் ‘தாதாகிரி’ , மராத்தி மொழியில் ‘ஹோம் மினிஸ்டர்’ போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளும் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளன. ஏற்கெனவே மக்களிடையே வெற்றியடைந்த நிகழ்ச்சிகளை தாண்டி, புதிய தலைமுறை பார்வையாளர்களை கவரும் வகையிலும் ஜீ நிறுவனம் தனது நிகழ்ச்சிகளை வடிவமைத்து வருகிறது.

பிரபலங்களுடன் உரையாடல்: புதிய நிகழ்ச்சிகள்

பிரபலங்களுடனான உரையாடல் நிகழ்ச்சிகள் பிரிவில், நடிகர் ஆர். மாதவன் தொகுத்து வழங்கும் ‘ஜீனா இஸி கா நாம் ஹை 2.0’ (Jeena Isi Ka Naam Hai 2.0) அறிமுகமாக உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

மேலும், தெலுங்கில் ‘தி மெகா மல்டிபிளெக்ஸ்’ (The Mega Multiplex), தமிழில் ‘லெஜெண்ட்ஸ்’ (Legends) ஆகிய நிகழ்ச்சிகளும் இந்தப் பிரிவில் இடம்பெறுகின்றன. சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் அனுபவங்கள், வாழ்க்கைப் பயணம் மற்றும் கருத்துகளைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது இத்தகைய நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

சமையல் நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம்!

சமையல் நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, பல மொழிகளில் புதிய நிகழ்ச்சிகளை ஜீ நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் சமையல் சார்ந்த பொழுதுபோக்கை வெவ்வேறு மொழிகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கேம் ஷோ, நகைச்சுவை நிகழ்ச்சிகளும் தொடரும்!

வினாடி வினா மற்றும் விளையாட்டுகளை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகள் பிரிவில், ஜீ அன்மோல் சேனலில் ‘லக் பதீ திதியா’ (Lakhpati Didiya), ஜீ கேரளத்தில் ‘ஜோடி நம்பர் 1’ (Jodi No. 1) ஆகிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

நகைச்சுவை பிரிவில், ஜீ பங்களா சேனலில் ‘மிராக்கெல்’ (Mirakkel) நிகழ்ச்சியும், ஜீ மராத்தியில் ‘சலா ஹவா யேவு த்யா’ (Chala Hawa Yeu Dya) நிகழ்ச்சியின் புதிய சீசனும் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளன.

இதன் மூலம் இசை, சமையல், நகைச்சுவை, விளையாட்டு மற்றும் பிரபலங்களுடனான உரையாடல் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை ஒரே உள்ளடக்கத் திட்டத்தின் கீழ் கொண்டுவர ஜீ நிறுவனம் முயற்சிக்கிறது.

தொலைக்காட்சி மட்டுமின்றி டிஜிட்டல் தளத்திலும் கவனம்!

ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில், இந்திய குடும்பங்களின் அன்றாட பொழுதுபோக்கில் புனைகதைத் தொடர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், ரியாலிட்டி மற்றும் பிற புனைகதை அல்லாத நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை நேரடியாகப் பங்கேற்கச் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்கள் அதுகுறித்த உரையாடல்களைச் சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்கள் வழியாகவும் தொடர்ந்து மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார். இதைக் கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி மற்றும் ஜீ5 ஆகிய இரு தளங்களிலும் நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தும் உத்தியை நிறுவனம் பின்பற்றுவதாக அவர் தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய பொழுதுபோக்கு துறையில் செயல்பட்டு வரும் ஜீ நிறுவனம், பல மொழிகளில் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறது. அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கெனவே பிரபலமான நிகழ்ச்சிகளைப் புதிய வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதுடன், புதிய நிகழ்ச்சி வடிவங்களையும் உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES